நில மோசடி தடுப்புப் பிரிவுக்கு எதிரான வழக்கு : விசாரணைக்கு ஏற்றது ஐகோர்ட்
நில மோசடி தடுப்புப் பிரிவுக்கு எதிரான வழக்கு : விசாரணைக்கு ஏற்றது ஐகோர்ட்
நில மோசடி தடுப்புப் பிரிவுக்கு எதிரான வழக்கு : விசாரணைக்கு ஏற்றது ஐகோர்ட்
ADDED : செப் 30, 2011 11:11 PM
சென்னை: நில மோசடி தடுப்புப் பிரிவை எதிர்த்து, தி.மு.க., எம்.பி., உள்ளிட்ட இருவர் தொடர்ந்த மனுக்களை, சென்னை ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றது. தி.மு.க., சட்டத் துறை சார்பில், தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அ.தி.மு.க., அரசு அமைந்த பிறகு, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, நில மோசடிப் புகார்கள் ஏராளமாக வந்தன. இந்த புகார்களைப் பெற்று விசாரிப்பதற்காக, தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. 410 போலீசாரை கொண்டு, 39 தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கு, 27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நில மோசடி தடுப்புப் பிரிவு அமைப்பது தொடர்பாக, கடந்த ஜூலையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட்டில் தி.மு.க., சட்டத் துறை சார்பில், அதன் செயலர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க., எம்.பி.,யும் வழக்கறிஞருமான தாமரைச்செல்வன், வழக்கறிஞர் தேவராஜன் ஆகியோர், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக, நீதிபதிகள் பாஷா, என்.பால்வசந்தகுமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரணை நடத்தியது. அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட்-ஜெனரல், 'நில அபகரிப்பு தொடர்பாக, 15 ஆயிரத்து 900 புகார்கள் வந்தன. இவற்றில், 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 10 சதவீத வழக்குகள் தான், தி.மு.க.,வினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டன. புகார்களில் முகாந்திரம் இருந்தால், எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், வழக்குப் பதிவு செய்யப்படுகிறது' என்றார்.
மனுக்களை விசாரித்த 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தி.மு.க., சட்டத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பார்க்கும் போது, அரசியல் கட்சியின் நலனைச் சுற்றியே அது உள்ளது. இதில், எந்தப் பொது நலனும் இருப்பதாகத் தெரியவில்லை. மனுதாரர் கூறுவது போல், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. இந்த ரிட் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. தி.மு.க., சட்டத் துறை சார்பில் தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
தி.மு.க., எம்.பி.,யான தாமரைச்செல்வன், வழக்கறிஞராகவும் உள்ளார். அவரது மனுவில், சட்டப்பூர்வமான வாதங்களை எழுப்பியுள்ளார். தகுதி அடிப்படையில், இதைப் பரிசீலிக்க வேண்டும். வழக்கறிஞர் தேவராஜன் மனுவையும், விசாரணைக்கு ஏற்கிறோம். இவர்களின் தகுதியை, கேள்வி கேட்க முடியாது. இந்த இரண்டு பேரின் மனுக்களையும், விசாரணைக்கு ஏற்பதால், மனுக்களில் கூறியுள்ளவற்றை, நாங்கள் ஏற்றுக் கொள்வதாக யாரும் கருதிவிடக் கூடாது. மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள சட்ட ரீதியான கருத்துக்களுக்கு, அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் தான், தகுதி அடிப்படையில் முடிவு செய்ய முடியும். விசாரணை, வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.