/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாஸ்போர்ட்டில் "விளையாடும்' போலீசார் : பரிதவிக்கும் கல்லூரி மாணவ, மாணவியர்பாஸ்போர்ட்டில் "விளையாடும்' போலீசார் : பரிதவிக்கும் கல்லூரி மாணவ, மாணவியர்
பாஸ்போர்ட்டில் "விளையாடும்' போலீசார் : பரிதவிக்கும் கல்லூரி மாணவ, மாணவியர்
பாஸ்போர்ட்டில் "விளையாடும்' போலீசார் : பரிதவிக்கும் கல்லூரி மாணவ, மாணவியர்
பாஸ்போர்ட்டில் "விளையாடும்' போலீசார் : பரிதவிக்கும் கல்லூரி மாணவ, மாணவியர்
ADDED : ஆக 25, 2011 11:28 PM
கோவை : பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீதான 'போலீஸ் விசாரணை நடைமுறையில்' லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
விண்ணப்பத்துக்கு 250 முதல் 300 வரை 'கட்டணம்' நிர்ணயித்து, போலீசார் கறார் வசூலில் ஈடுபடுவதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். கோவையில் மருத்துவக் கல்லூரிகள், ஐந்து பல்கலைகள், நூற்றுக்கும் மேற்பட்ட கலை, அறிவியல் மற்றும் இன்ஜி., கல்லூரிகள், மேலாண்மை கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் பல ஆயிரம் மாணவ, மாணவியர் படிப்பு முடிந்து வெளியேறுகின்றனர். இவர்களில் பலரும் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கின்றனர். சாப்ட்வேர் கம்பெனிகள், தனியார் நிறுவனங்களில் மாணவ, மாணவியர் வேலைக்குச் சேரும் போதும், 'பாஸ்போர்ட் இருக்கிறதா' என்ற கேட்கப்படுவதால், வேலைக்குச் செல்லும் முன்னரே பாஸ்போர்ட் பெற பெரும்பாலானோர் விண்ணப்பிக்கின்றனர். இதன்காரணமாக, பல ஆயிரம் விண்ணப்பங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் மாதம் தோறும் குவிகின்றன. இந்த விண்ணப்பங்களுடன் கூடிய ஆவணங்களை சரிபார்க்கும் அதிகாரிகள், போலீஸ் விசாரணைக்காக மாவட்ட எஸ்.பி., அல்லது மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்புகின்றனர். பின்னர் இவை, விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதிக்குரிய போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பப்படுகின்றன. போலீஸ் ஸ்டேஷனில், பாஸ்போர்ட் விசாரணை நடைமுறையை கவனிக்கும் போலீஸ் ஏட்டு, விண்ணப்பதாரரின் முகவரிக்கு நேரில் சென்று விசாரிப்பார். விண்ணப்பதாரர் மீது போலீஸ் ஸ்டேஷனில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா என, ஆவணங்களை ஆய்வு செய்தபின் திருப்பி அனுப்புவார். மாவட்ட எஸ்.பி., அல்லது மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் குற்ற ஆவண காப்பகத்திலும் ஆய்வு நடத்தப்பட்டபின், விண்ணப்பங்கள் மீண்டும் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். இதுதான், பாஸ்போர்ட் விண்ணப்பம் மீதான போலீசாரின் விசாரணை நடைமுறை. இதில், சமீபகாலமாக லஞ்ச முறைகேடு அதிகரித்துள்ளது. போலீஸ் ஸ்டேஷனில் பாஸ்போர்ட் விசாரணை நடைமுறையை கவனிக்கும் போலீஸ் ஏட்டுகள், நேரடியாக விண்ணப்பதாரர் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்துவதில்லை; மாறாக, போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரிக்கின்றனர். அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சிபாரிசுடன் வரும் விண்ணப்பங்கள் மீது துரிதமாக விசாரணை நடத்தும் போலீசார், 'சாதாரணமாக வரும் விண்ணப்பங்கள்' மீது வேகம் காட்டுவதில்லை. மாறாக, பாஸ்போர்ட் விண்ணப்பம் ஒன்றுக்கு 250 முதல் 300 ரூபாய் வரை லஞ்சமாக வசூலிக்கின்றனர். கோவை நகர் மற்றும் புறநகர் போலீஸ் ஸ்டேஷன்கள் பலவற்றில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அதிகளவில் எழுகின்றன. தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள் அதிகம் நிறைந்த பகுதிகளுக்குரிய போலீசார், மாதம் தோறும் வசூல் இலக்கு நிர்ணயித்து செயல்படுவதாக கூறப்படுகிறது. பாஸ்போர்ட் விண்ணப்ப விசாரணை வாயிலாக கிடைக்கும் லஞ்ச தொகையில், ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களின் மொபைல் போன் கட்டணம், ஜீப்புக்கான டீசல் செலவு, மாதம் தோறும் உணவுச் செலவு என ஏதாவது ஒரு வகையில் பங்கு பிரிக்கப்பட்டு விடுவதால், இன்ஸ்பெக்டர்களும் முறைகேட்டுக்கு துணைபோகின்றனர். இந்த முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே, எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாஸ்போர்ட் விண்ணப்பம் மீதான விசாரணை நடைமுறையை கவனிக்கும் போலீஸ் ஏட்டுகள் பலரும், பல ஆண்டுகளாக எவ்வித மாற்றமுமின்றி அதே ஸ்டேஷனில், 'அதே வேலை'யில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடுகளுக்கு இதுவே மூல காரணம். ஒவ்வொரு பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீதும் சட்ட நெறிமுறைகளின்படி விசாரணை நடத்தப்பட்ட பின்னரே, ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கையெழுத்திட வேண்டும். 'அதற்கு நேரமில்லை' எனக்கூறும் இன்ஸ்பெக்டர்கள் பலரும், ஏட்டுகள் சமர்ப்பிக்கும் விசாரணை ஆவணங்களின் மீது போதிய கவனம் செலுத்தாமல் கையெழுத்திடுகின்றனர். இதுபோன்ற முறைகேடுகள் களையப்பட்டால் மட்டுமே, பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீதான விசாரணைகள் துரிதமாகவும், நியாயமாகவும் நடை பெறும். இவ்வாறு, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.