சென்னைத் தமிழ் -கலவையான மொழிக் கலாசாரம்
சென்னைத் தமிழ் -கலவையான மொழிக் கலாசாரம்
சென்னைத் தமிழ் -கலவையான மொழிக் கலாசாரம்
ADDED : ஆக 16, 2011 10:22 AM
சென்னை தமிழகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், சென்னை தவிர்த்த பிற தமிழகம், சென்னை என இருகூறாகவே அதனைப் பகுத்தாய வேண்டி இருக்கிறது. அந்த அளவுக்கு சென்னை மாறுபட்ட, கலவையான கலாச்சாரத்தைக் கொண்டிருக்கிறது.
தேமதுரத்தமிழ், எல்லா மொழிகளையும் போலவே தன்னுள் வட்டார வழக்கு மொழியையும் கொண்டுள்ளது. வாஞ்சை கொஞ்சும் நெல்லைத்தமிழ், மரியாதை மிளிரும் கொங்குத் தமிழ், நாஞ்சில் தமிழ், மதுரைத் தமிழ் என பல்வேறு வழக்குகள் இருந்தாலும், சென்னையின் தமிழ் கொஞ்சம் வித்தியாசம். அதன் வார்த்தைச் சேகரங்கள் தமிழகத்தின் பிறபகுதிகளில் இருப்பவர்களால் யூகிக்க முடியாதவை.
மன்னராட்சிக் காலத்தில் சென்னைப் பகுதிகள் தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்டது. இத்தனிப்பகுதியை ஆண்டவர்கள் பல்லவர்கள். பிற்காலச் சோழர்கள் உச்சத்தில் இருந்த போது, அவர்களின் ஆளுகைக்குக்கீழ் இப்பகுதி வந்தது. முதலாம் ராஜேந்திரன் காலத்திய கல்வெட்டுகள் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின் விஜயநகரப்பேரரசு, முஸ்லிம்கள் என மாறி, மாறி பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்து வந்தது சென்னை. இதன் காரணமாக பல்வேறு இனத்தவர்களும் இங்கு குடியேறினர். ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னர் நாயக்க வம்ச அரசர்களின் கீழ் சென்னையும் அதன் சுற்றுப்புறங்களும் இருந்தன.
இதனால், தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. ஏறக்குறைய 60 சதவீதத்தினர் தெ<லுங்குபேசும் மக்களாக இருந்தனர் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சென்னை வட்டாரத் தமிழில் தெலுங்கின் ஆதிக்கத்தை இன்றும் காண முடியும்.
1640 களுக்குப் பிறகு ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மிகவே, ஆங்கில வார்த்தைகளும்; தமிழை அதன் முறையான வடிவத்துடன் உச்சரிக்க இயலாத ஆங்கிலேயர்களின் உச்சரிப்பு முறையும், வெகுஜனங்களிடையேயும் அதே வடிவத்தில் புழங்கத் துவங்கின(சேற்றுப்பேடு சேத்பட் ஆனதும்; எழுமூர், எக்மோர் ஆனதும் இப்படித்தான்).
போதாக்குறைக்கு ஆங்கிலேயருக்கு முன்னதாகவே இந்தியாவில் கால்பதித்திருந்த போர்ச்சுக்கீசியர், டச்சு மக்களின் மொழியும், நாணயங்களின் பெயரும் தமிழுடன் இரண்டறக் கலந்தன.
பிரசித்தி பெற்ற வர்த்தகத் தலம் என்பதாலும், கடற்கரைப் பட்டினம் என்பதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த வணிகர்களின் மொழிகள் தமிழுடன் உறவாடியதால், சென்னைத் தமிழ் புதுவடிவம் எடுத்தது. அதன் அகராதியில் புதுப்புது வார்த்தைகள் சேர்ந்தன; இன்றும் சேர்ந்து கொண்டிருக்கின்றன.
சுதந்திரத்துக்குப் பின், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, ஆந்திரா தனி மாநிலம் ஆனது. இதில் தெலுங்கு பேசும் மக்களின் குடியேற்ற விகிதம் சற்றுக் குறைந்தது. கடந்த 20 ஆண்டுகளாக ராஜஸ்தானி, குஜராத் பகுதி மக்கள் வர்த்தகத்துக்காக குடியேறத்துவங்கினர். இவர்களின் மொழி, கலாசாரமும் சென்னைத் தமிழுக்குத் தங்களின் பங்களிப்பைச் செலுத்தத் தவறவில்லை.
பன்மொழிச் சொற்களின் கலப்பு, பல்வேறு இனத்தவர்களின் கலாசாரத் தொடர்பு காரணமாக, சென்னைத் தமிழ் இன்றுள்ள வடிவை எடுத்திருக்கிறது. திரைப்படங்களின் வாயிலாகவே சென்னைத் தமிழ் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கு ஓரளவு பரிச்சயமாகி இருக்கிறது. சென்னைத் தமிழின் பல்வேறு பரிமாணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.


