ADDED : ஆக 09, 2011 01:19 AM
பழநி : போலி கிரெடிட் கும்பலின் தொந்தரவால் தனது மகள் இறந்ததாக, ஓசூர் உள்ளாடை நிறுவன உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.
பழநி புதுநகரை சேர்ந்தவர் சொக்கநாதன்,62 , ஓசூரில் உள்ளாடை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரேகாவிற்கும், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்த ஆனந்துக்கும், 2003 ல், திருமணம் நடந்தது. ஐந்து வயது மகள் உள்ளார். கடந்த ஆண்டு ஏப்., 17 ல், ரேகா தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், போலி கிரெடிட் கார்டு கும்பலை சேர்ந்த கணவர் ஆனந்தின் துன்புறுத்தலால் ரேகா இறந்ததாக, டி.ஐ.ஜி., சஞ்சய்மாத்தூரிடம், சொக்கநாதன் புகார் அளித்துள்ளார்.
அவர் கூறியது: ரேகா தற்கொலையில் சந்தேகம் இருந்தபோதும், பேத்தியின் எதிர்காலத்தை எண்ணி புகார் செய்யவில்லை. ஆனந்த், போலி கிரெடிட் கார்டு மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர். மனைவியை மோசடிக்கு பயன்படுத்தி, பல பகுதிகளுக்கு அனுப்பியுள்ளார். அவரது கும்பல், ரேகாவிற்கு பாலியல் தொல்லை காடுத்துள்ளனர். துன்புறுத்தியதால் ரேகா இறந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


