மரண தண்டனையை ரத்து செய்யக்கோரிசுப்ரீம் கோர்ட்டில் கசாப் மேல்முறையீடு
மரண தண்டனையை ரத்து செய்யக்கோரிசுப்ரீம் கோர்ட்டில் கசாப் மேல்முறையீடு
மரண தண்டனையை ரத்து செய்யக்கோரிசுப்ரீம் கோர்ட்டில் கசாப் மேல்முறையீடு
UPDATED : ஜூலை 31, 2011 02:50 AM
ADDED : ஜூலை 29, 2011 11:46 PM

புதுடில்லி:மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளான்.மும்பையில், 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த பயங்கர சம்பவத்தில், நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அஜ்மல் கசாப் என்ற ஒரு பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.
கசாப் அடைக்கப்பட்ட மும்பை ஆர்தர் ரோடு சிறையிலேயே சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டு, மும்பை தாக்குதல் வழக்கு நடந்தது. இதில், நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் அடிப்படையில், அஜ்மல் கசாபுக்கு சிறப்பு கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.இதையடுத்து, அஜ்மல் கசாப் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணையை ரத்து செய்யக்கோரி, மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தான்.
அந்த மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட், கசாபின் மனுவை தள்ளுபடி செய்து, மரண தண்டனையை கடந்த பிப்ரவரி மாதம் உறுதி செய்து உத்தரவிட்டது.இந்நிலையில், மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி, அஜ்மல் கசாப், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளான். மும்பையில், தான் அடைக்கப்பட்டுள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலை அதிகாரிகள் மூலம், இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் கசாப் தாக்கல் செய்துள்ளான்.