ADDED : செப் 09, 2011 12:20 AM
எழுமலை: மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் பிளக்ஸ் போர்டு வைப்பதில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
உத்தபுரத்தில் நிழற்குடை அமைக்க, கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதில் இரு பிரிவினர் இடையே பல ஆண்டாக பிரச்னை உள்ளது. 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. பாதுகாப்புக்காக, நிரந்தர புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வ.உ.சி., பிறந்த நாளை முன்னிட்டு கடந்த செப்.,5ல் பிளக்ஸ் போர்டு வைக்க ஒரு பிரிவினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். செப்.,14ல் இமானுவேல் சேகரன் குருபூஜை சம்பந்தமான பிளக்ஸ் போர்டு தெற்குத்தெரு நுழைவு வாயில் முன் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருபிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் அய்யம்பிள்ளை, 60, மணி, 30, கணேசன், 30, காயமடைந்தனர். எஸ்.பி., ஆஸ்ராகர்க் விசாரணை நடத்தினார். ஆர்.டி.ஓ., புகழேந்தி, பேரையூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வருவாய் பிரிவினர் முகாமிட்டுள்ளனர். டி.எஸ்.பி., குமார் தலைமையில், எழுமலை எஸ்.ஐ., பாஸ்கரன் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.