தலைமையாசிரியரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி : ஐகோர்ட் உத்தரவு
தலைமையாசிரியரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி : ஐகோர்ட் உத்தரவு
தலைமையாசிரியரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி : ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 03, 2011 07:59 PM

மதுரை : மதுரை மாவட்டம் பொதும்பு அரசு உயர்நிலை பள்ளியில் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கில் முன்ஜாமின் கோரிய தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
இப்பள்ளியில் ஏழாவது வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக ஆரோக்கியசாமி மற்றும் அமலரோஸி, சண்முகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆரோக்கியசாமி முன்ஜாமின் கோரிய மனு நேற்று நீதிபதி ஆர்.மாலா முன் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வக்கீல் ராமர், முன்ஜாமினில் விட ஆட்சேபம் தெரிவித்தார். வழக்கில் புகார்தாரர் வீர்சாமி சார்பில் வக்கீல் நிர்மலாராணி தாக்கல் செய்த ஆட்சேபனை மனுவில், தலைமையாசிரியர் ஏராளமான மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். பெற்றோரிடம் கூற கூடாது என மாணவிகளை மிரட்டியுள்ளார். அவருக்கு முன்ஜாமின் வழங்க கூடாது, என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரரை கைது செய்யாதது குறித்து அரசு தரப்பினரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை. முன்ஜாமின் வழங்க இயலாது, என குறிப்பிட்டார். இவ்வழக்கில் அமலரோஸி உட்பட இருவர் ஏற்கனவே முன்ஜாமின் பெற்றுள்ளனர்.