சிக்கிய இடத்திலேயே பதிவு எண்களை மாற்றி எழுதும் போலீஸ்: வாகனங்கள் மீது அதிரடி!
சிக்கிய இடத்திலேயே பதிவு எண்களை மாற்றி எழுதும் போலீஸ்: வாகனங்கள் மீது அதிரடி!
சிக்கிய இடத்திலேயே பதிவு எண்களை மாற்றி எழுதும் போலீஸ்: வாகனங்கள் மீது அதிரடி!
ADDED : செப் 14, 2011 12:08 AM

சென்னை:விதிமுறைக்கு மாறாக பதிவு எண்கள் எழுதிய வானங்கள் மீது, போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும், இதுவரை அபராதம் போட்டு வந்த போலீசார், சிக்கிய வாகனங்களின் பதிவு எண்ணை மாற்றி எழுதி, அதற்கான கட்டணத்தை வசூலிக்கின்றனர்.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி தமிழகத்தில், 1.36 கோடி வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களில், பதிவு எண்களை இஷ்டம்போல், விதவிதமாக எழுதி வருகின்றனர். இதனால், வாகனங்களின் பதிவு எண்களைக் கண்டறிவதில் சிக்கல் உள்ளது. குற்ற நிகழ்வுகளின் ஈடுபடும் வாகனங்களையும் இனம் காண முடியவில்லை.இதைக் கருத்தில் கொண்டு, விதிமுறைப்படி வாகன பதிவு எண்களை எழுத வேண்டும் எனவும், விதிமுறைப்படி எண்களை எப்படி எழுத வேண்டுமெனவும், போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியது. ஆக., 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும், பதிவு எண்களை மாற்றாத வாகனங்கள் மீது, போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கையைத் துவக்கினர்.தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை நடந்து வருகிறது. விதிமுறை மீறிய பதிவு எண் எழுதிய வாகனங்களுக்கு, 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது, போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
விதிமுறைக்கு மாறாக பதிவு எண் எழுதிய வாகனங்களை மடக்கிப் பிடித்து, 50 ரூபாய் அபராதம் விதிப்பதோடு, அந்த இடத்திலேயே வாகனத்தின் பதிவு எண்ணை மாற்றி எழுதி, அதற்குரிய கட்டணத்தை அவர்களிடமே வசூலித்து விடுகின்றனர். இதற்காக பிரத்யேகமாக, வாகன எண் எழுதுபவரை ஆய்வு செய்யும் இடத்திலேயே வைத்துள்ளனர்.சென்னையில் இந்த அதிரடி வேட்டை, இரண்டு நாட்களாக துவங்கியுள்ளது. சென்னை, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை அருகே, உதவி கமிஷனர் சந்திரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தாமோதரன், எஸ்.ஐ.,க்கள் குமார், அப்பாண்டைராஜ் உள்ளிட்டோர் கூட்டாக சோதனை நடத்தினர். நேற்று 50 பேர் வரை சிக்கினர். வானங்களின் பதிவு எண்கள் அந்த இடத்திலேயே மாற்றியமைக்கப்பட்டன. சென்னையில் இரண்டு நாட்களில், 400 பேர் வரை சிக்கியுள்ளனர்.
போலீசார் கூறும் போது,'பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பலர் இதையறிந்து, வாகன எண்களை மாற்றி வருகின்றனர். எல்லா வாகனங்களிலும், பதிவு எண்கள் முறையாக எழுத வேண்டும் என்பதே நோக்கம். சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை நடந்து வருகிறது' என்றார்.