Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கடல் பசுக்களை பாதுகாக்க "ரேடியோ அலைவரிசை' : மத்திய அரசுக்கு கோரிக்கை

கடல் பசுக்களை பாதுகாக்க "ரேடியோ அலைவரிசை' : மத்திய அரசுக்கு கோரிக்கை

கடல் பசுக்களை பாதுகாக்க "ரேடியோ அலைவரிசை' : மத்திய அரசுக்கு கோரிக்கை

கடல் பசுக்களை பாதுகாக்க "ரேடியோ அலைவரிசை' : மத்திய அரசுக்கு கோரிக்கை

ADDED : ஜூலை 13, 2011 01:01 AM


Google News

கடல் வாழ் உயிரினங்களில் அழிவின் உச்சத்திற்கு கடல் பசு இனம் தள்ளப்பட்டுள்ளது.

'சொற்ப எண்ணிக்கையில் காணப்படும் கடல் பசுக்களை பாதுகாக்க, அதன் வால் பகுதியில், 'ரேடியோ அலைவரிசை பட்டையை' கட்டிவிட்டு, ஜி.பி.எஸ்., கருவிகள் மூலம் அதன் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு கடல் ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடல் வளம் செழித்திருந்தால் மழை பொழியும். சுத்தமான ஆக்சிஜன் காற்று கிடைக்கும். கடலில் மாசு படிந்தால் உயிரினங்கள் அழியும். எனவே, கடல் வாழ் உயிரினங்கள் அதிகமாக வாழ வேண்டும் என்பது கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் விருப்பம்.



கடலில் தடை செய்யப்பட்ட உயிரினமாக கடல் பசு இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் அழிந்து கொண்டிருக்கும் கடல்வாழ் பாலூட்டி உயிரினங்களில் இது முதன்மை வகிக்கிறது. கடலில் உள்ள புல்களே கடல் பசுவின் உணவாக விளங்குகிறது. கடல்பசு இரண்டரை அடி உயரம், 10 அடி நீளம் கொண்டவையாக விளங்குகிறது. சாம்பல் நிறம் கொண்ட கடல்பசு, 20 ஆண்டு முதல் 30 ஆண்டுகள் வரை வாழும். ஒரு குட்டி தான் பிரசவிக்கும். சுவாசிப்பதற்காக கடல் மேல் மட்டத்திற்க 15 நிமிடத்திற்கு ஒரு முறை வந்து செல்லும். கடல் பசு, அப்பாவி உயிரினமாக கருதப்படுகிறது. இரவில் தான் உணவு தேடி கடலோரத்திற்கு வரும். பகல் நேரத்தில் வருவதில்லை. பவளப் பாறைகள் அதிகம் கொண்ட பகுதியில் தான் கடல் புல்கள் காணப்படும். எனவே, பவளப்பாறைகளை சுற்றியுள்ள பகுதிகளில் கடல் பசுக்கள் வாழ்கின்றன. கடல் பசுவை, 'டியூகாங்' என அறிவியல் பெயராக அழைக்கப்படுகிறது.



இந்தியாவில், கல்ப் ஆப் கச் (குஜராத் கடல்), பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா (ராமநாதபுரம் கடல்), அந்தமான் தீவு கடலில் மட்டுமே கடல் பசுக்கள் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் அதிக எண்ணிக்கைகளில் வாழ்ந்து வந்தன. தற்போது குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கின்றன. கடல் பசுவை தேடிப் பிடித்து, சமைத்து சாப்பிடும் பழக்கம், ராமநாதபுரம் பகுதியில் காணப்படுகிறது. கடல்பசு உணவு மிகுந்த சுவையாக இருக்கும் என்றும், இந்த கறிக்காக குடும்பத்தகராறு எல்லாம் ஏற்படும் என கடல் வளஆராயச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



'சீக்கிரம் அழியும் இனப்பட்டியலில் கடல் பசு இடம் பெற்றுள்ளது' என, சர்வதேச இயற்கை வளங்களை பாதுகாக்கும் அமைப்பு (ஐ.யு.சி.என்.,) எச்சரிக்கை மணி அடிக்கிறது. உலகளவில் ஆஸ்திரேலியாவில் கடல் பசுக்கள் அதிகமாக வாழுகின்றன. தாய்லாந்திலும் ஓரளவு வாழ்கின்றன. இந்த உயிரினம் இந்தியாவில் காணப்படுவது பெருமையாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் கடல் பசுக்களின் எண்ணிக்கை இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை.



இது குறித்து, இந்திய விலங்கியல் ஆய்வகத்தின் ஓய்வு பெற்ற விஞ்ஞானி தண்டபாணி கூறியதாவது: கடந்த 1997ம் ஆண்டில் பத்து கடல் பசுக்களை மட்டுமே கணக்கெடுக்க முடிந்தது. கடல் புல் (உணவு) கிடைக்காமலும், திருக்கை மீன் வலைகளில் சிக்கியும் கடல் பசுக்கள் இறக்கின்றன. வேலிகாத்தான் மரத்துண்டுகளை கடலுக்குள் வீசிவிடுவர். அந்த மரத்துண்டுகளிலிருந்து வரும் மணம், கடல் புல்களின் மணம் போல் காணப்படும். அந்த மணத்தை தேடி வரும் கடல் பசுவை வெடி மூலம் வெடிக்க வைத்து, பிடிக்கும் வழக்கம் உள்ளது. கடல் பசுக்களை பிடிப்பதை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அந்தக் கமிட்டியில் மீனவர்கள், கடலோர காவல் படையினர், வனத்துறையினர் கொண்ட உறுப்பினர்களை அமைக்க வேண்டும்.



கடல்பசு காணப்படும் பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் சர்வே எடுக்க வேண்டும். கணக்கெடுக்கப்படும் பகுதிகளை மிதக்கும் சிகப்பு விளக்குகளை அமைத்து பாதுகாக்க வேண்டும். அப்போது தான் கடல்பசு வசிக்கும் பகுதிகளுக்கு மீனவர்களின் படகுகள் செல்வதை தடுக்க முடியும். கடல் பசுவை தேசிய பாலூட்டி வகை இனமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். கடல் புல்கள் காணப்படும் பகுதிகளை செயற்கை கோள் மூலம் கண்டறிந்து, பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும்.



தற்போது சொற்ப எண்ணிக்கையில் காணப்படும் கடல் பசுக்களை பாதுகாக்கவும், வருங்கால சந்ததிகள் இந்த இனத்தைப் பற்றி அறியவும், அந்த இனத்தை பெருக்கும் வகையில் கடல் பசுக்களின் வால் பகுதியில், 'ரேடியோ அலைவரிசை பட்டையை' கட்டிவிட்டு ஜி.பி.எஸ்., கருவிகள் மூலம் அதன் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். இதன் மூலம் கடல் பசுக்களை பாதுகாக்கும் முறையை அரசுக்கு மட்டுமல்லாமல், அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கும் அப்பொறுப்பு அளிக்க வேண்டும். கடல்பசுக்களுக்கு ஆபத்து வருவதை தெரிந்து கொண்டால், அதை தடுக்க பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் லயன் சபாரியைப் போல, கடல் பசுக்கள் சபாரியை உருவாக்கலாம். மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



-எஸ்.சிந்தா ஞானராஜ்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us