Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழக உள்ளாட்சி தேர்தலில் எல்லா கட்சிகளும் தனித்து போட்டி

தமிழக உள்ளாட்சி தேர்தலில் எல்லா கட்சிகளும் தனித்து போட்டி

தமிழக உள்ளாட்சி தேர்தலில் எல்லா கட்சிகளும் தனித்து போட்டி

தமிழக உள்ளாட்சி தேர்தலில் எல்லா கட்சிகளும் தனித்து போட்டி

UPDATED : செப் 18, 2011 12:18 AMADDED : செப் 17, 2011 11:26 PM


Google News
Latest Tamil News
தமிழகத்தில் பல ஆண்டுகளுக்குப்பின், முதன் முறையாக, வரும் உள்ளாட்சி தேர்தலில், பெரும்பாலான அரசியல் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.

இதனால், பலமுனைப் போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ள இந்த புதிய காட்சி காரணமாக, தமிழக கட்சிகளின் உண்மையான பலம் என்ன என்பது, தேர்தல் முடிந்ததும் தெரிந்து விடும்.

வழக்கமாக, உள்ளாட்சி தேர்தலின்போது, சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சி கூட்டணி அப்படியே இருக்கும். ஆனால், இம்முறை தலைகீழ் மாற்றமாக உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் தி.மு.க., - காங்கிரஸ், பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றிருந்தன. அந்த கூட்டணி, சட்டசபை தேர்தலோடு காணாமல் போய் விட்டது. வரும் உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., - காங்கிரஸ், பா.ம.க., - ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் இன்னமும் முடிவை அறிவிக்கவில்லை. அவர்களை தங்களுடன் இணையும்படி பா.ம.க., அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பை, விடுதலைச் சிறுத்தைகள் ஏற்கவும் இல்லை; நிராகரிக்கவும் இல்லை.



அ.தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு.க., - தே.மு.தி.க., - இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. மாநகராட்சி மேயர் பதவிக்கு, அ.தி.மு.க., தன்னிச்சையாக தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்தது, கூட்டணிக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.



தே.மு.தி.க., இரண்டு மாநகராட்சி மேயர் பதவிகளையாவது தங்களுக்கு வழங்க வேண்டும் என, கோரியிருந்தது. தற்போது, ஒரு மேயர் பதவி கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தே.மு.தி.க., ஏற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியினரும், மேயர் பதவியை எதிர்பார்த்து, ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே, அ.தி.மு.க., கூட்டணியும் சிதறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.



சட்டசபை தேர்தலின்போதும், கூட்டணி முடிவாவதற்கு முன்பாகவே, வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க., வெளியிட்டு, கூட்டணிக் கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்தது. சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்ததுபோல், தற்போது மேயர் வேட்பாளர்களை அ.தி.மு.க., அறிவித்துள்ளது. அப்போது தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, கூட்டணிக் கட்சிகள் அமைதியாக இருந்தன. தற்போது, உள்ளாட்சி தேர்தலில், யாரும் யாரையும் நம்ப வேண்டிய சூழல் இல்லாததால், ஒவ்வொரு கட்சியும் தனித்தனியே முடிவெடுக்க உள்ளன.



அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், பன்முனைப் போட்டி ஏற்படும். இக்கட்சிகளுடன், காங்கிரஸ், பா.ஜ., போன்ற கட்சிகளும், தனித்து களம் இறங்குவதால், சட்டசபை, லோக்சபா தேர்தலை விட, உள்ளாட்சி தேர்தலில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடும்போது, அக்கட்சிகளுக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு உண்மை நிலவரம் தெரியவரும். எனவே, வெற்றிக்கு அனைத்துக் கட்சிகளும், கடுமையாக உழைக்கும் என்பதால், மக்களும் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.



தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே, எந்த கட்சியும் எந்த தேர்தலையும் தனித்து சந்தித்ததே கிடையாது. ஏதாவது ஒரு கூட்டணியில் இடம் பெற்று ஒரு சில தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டன. இதனால், தமிழகத்தில் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பது தெரியாமலேயே இருந்தது. இப்போது முதல் முறையாக எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட உள்ளதால், கட்சிகளின் உண்மையான பலம் தெரியவரும். அடுத்த தேர்தல்களில், கூட்டணி பேரத்திற்கு இந்த பலம் உதவும்.



- நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us