Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: மது விற்காத நாட்கள் அதிகரிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: மது விற்காத நாட்கள் அதிகரிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: மது விற்காத நாட்கள் அதிகரிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: மது விற்காத நாட்கள் அதிகரிப்பு

UPDATED : செப் 10, 2011 12:31 AMADDED : செப் 08, 2011 11:17 PM


Google News
Latest Tamil News
சென்னை: மது விற்பனை இல்லாத நாட்களின் எண்ணிக்கையை, தமிழக அரசு, மேலும் மூன்று நாட்கள் அதிகரித்துள்ளது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழகத்தில் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்த நாள், மகாவீர் ஜெயந்தி மற்றும் வள்ளலார் நினைவு நாள் என, ஐந்து நாட்களில் மது விற்பனை செய்யப்படுவதில்லை. முதல்வர் உத்தரவுப்படி, சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம் ஆகிய மூன்று நாட்களும், மதுபானம் விற்பனை இல்லாத நாட்களாக அறிவிக்கப்படுகிறது. ஆண்டுக்கு, 8 நாட்கள் மது விற்பனை இருக்காது. டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடையில், பணியாற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, 500 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு, 400 ரூபாயும், பார் உதவியாளர்களுக்கு, 300 ரூபாயும், சம்பள உயர்வு வழங்கப்படும். இதன் மூலம், 4,500 ரூபாய் தொகுப்பூதியம் பெறும் மேற்பார்வையாளர்கள் 5,000 ரூபாயும், 3,200 ரூபாய் பெறும் விற்பனையாளர்கள், 3,600 ரூபாயும், 2,400 ரூபாய் சம்பளம் பெறும் பார் உதவியாளர்கள், 2,700 ரூபாயும் சம்பளம் பெறுவர்.



தமிழகம் முழுவதும், மதுவின் தீமைகளை மக்களுக்கு விளக்கும் வகையில், ஒரு கோடி ரூபாயில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தமிழகத்தில், 15 போதை மீட்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மூன்று கோடி ரூபாயில், மேலும், மூன்று போதை மீட்பு மையங்கள் அமைக்கப்படும். இயங்கி வரும் மீட்பு மையங்கள், இரண்டு கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்து சிறைத் தண்டனை பெற்றவர்கள் மறுவாழ்வு பெறும் வகையில், சுய தொழில் தொடங்க, நிதி உதவி செய்யப்பட உள்ளது. இதற்காக, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும். டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகளுக்கு, குளிர்சாதனப் பெட்டி வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார்.



நிரந்தர அறிவிப்பு இல்லை: டாஸ்மாக் சங்கம் வேதனை: 'டாஸ்மாக் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான,'பணிநிரந்தரம்' குறித்த அறிவிப்பை அரசு வெளியிடாதது வேதனையை அளிக்கிறது' என, தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழக டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சவுந்தரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், 'சட்டசபையில், டாஸ்மாக் பணியாளர்களில், மேற்பார்வையாளர், விற்பனையாளர், பார் உதவியாளர்களுக்கு முறையே,500, 400, 300 ரூபாய் ஊதிய உயர்வு மற்றும் எட்டு நாட்கள் விடுமுறை என, அறிவித்தது வரவேற்கத்தக்கது. ஆனால், நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம் பற்றிய அறிவிப்பு இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு, 'டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகள் நிறைவேறும் காலம் வெகு தொலைவில் இல்லை' என தமிழக முதல்வர் கூறியிருந்தார். மானியக் கோரிக்கையின் போது,'பணி நிரந்தரம்' பற்றிய அறிவிப்பு வரும் என, டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், அறிவிப்பு வராதது வேதனையளிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us