/உள்ளூர் செய்திகள்/சென்னை/"உணவில் புழு நெளிவது வழக்கம்': விடுதி மாணவியர் குற்றச்சாட்டு"உணவில் புழு நெளிவது வழக்கம்': விடுதி மாணவியர் குற்றச்சாட்டு
"உணவில் புழு நெளிவது வழக்கம்': விடுதி மாணவியர் குற்றச்சாட்டு
"உணவில் புழு நெளிவது வழக்கம்': விடுதி மாணவியர் குற்றச்சாட்டு
"உணவில் புழு நெளிவது வழக்கம்': விடுதி மாணவியர் குற்றச்சாட்டு
சென்னையில் உள்ள கல்லூரி மாணவியருக்கான பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதிகளில் சுகாதாரமற்ற உணவு, பாதுகாப்பற்ற குடிநீர் வழங்கப்படுவதால் மாணவியர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இது பற்றி மாணவியர் கூறியதாவது: எங்கள் விடுதியில் அடிபம்பில் அடித்து தான் உப்புத் தண்ணீர் பிடிக்க முடியும். நல்ல தண்ணீர் மாநகராட்சியிலிருந்து வாங்குகிறார்கள். எங்களுக்கு கொடுக்கின்ற தண்ணீரை, கொதிக்க வைத்து கொடுப்பதில்லை. இதனால், எங்களுக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. சில நேரம் அடிபம்பு ரிப்பேராகி விடுவதால், தண்ணீருக்காக கஷ்டப்படுவோம். இரண்டு, மூன்று நாளுக்குப் பிறகு தான் வந்து சரிசெய்வார்கள். சமையலுக்கு தனியாக ஒருவரை நியமித்திருக்கிறார்கள். ஆனால், மாணவியர் பலரும் சேர்ந்து தான் சமையல் செய்வோம். சமையலுக்கு தினமும் நல்ல காய்கறிகள் வருகின்றன. இருந்தாலும் ருசியே இல்லாமல் தான் சமையல் செய்கின்றனர். இதனால் பல மாணவியர், விடுதியில் சாப்பிடுவது இல்லை. சாப்பாட்டில் அடிக்கடி புழுவை பார்க்கலாம்.
பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவியர், எங்கள் விடுதியில் அதிகம் பேர் உள்ளனர். அவர்களை, விடுதியில் வேலை செய்கிறவர்கள் மதிப்பதில்லை. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையிலிருந்து ஆய்வுக்கு வரும் போது, திடீரென வராமல், விடுதி காப்பாளரிடம் சொல்லி விட்டு, வருகின்றனர்.விடுதி காப்பாளர், மாணவியரை விடுதியை சுத்தப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுத்துவார். ஆய்வுக்கு வருகின்ற அதிகாரிகளும் மாணவியரிடம் குறைகளை கேட்பதில்லை. வார்டனிடம் மட்டுமே பேசிவிட்டுச் செல்கின்றனர். இதனால் எங்கள் குறைகளை யாரிடம் முறையிடுவது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் விடுதியில் கழிவறை மோசமாகவே இருக்கும். அடிக்கடி திருடர்கள் எங்கள் விடுதிக்கு வருகின்றனர். எந்த நேரமும் எங்கள் பொருட்கள் திருடுபோவதற்கு வாய்ப்பு இருக்கிறது. விடுதியைச் சுற்றி உள்ள சுற்றுச் சுவர்கள் உயரம் குறைவாக இருப்பதால்,வெளி ஆட்கள் உள் ளே வருவதற்கு, நிறைய வாய்ப்புகள் உள்ளன. விடுதியில் தங்கி உள்ள எம்.பில்., மாணவியரை கோடைகாலங்களில் தங்குவதற்கு அனுமதிப்பதில்லை. இதனால், ஆய்வை நிறைவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக, மாணவியரை விடுதிகாப்பாளர் மதிப்பதில்லை. இப்படி பல்வேறு பிரச்னைகள் இருந்ததால் தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்டிரைக்கில் ஈடுபட்டோம். திரும்பவும் அதே பிரச்னைகள் தலைதூக்கி உள்ளன. இவ்வாறு விடுதி மாணவியர் தெரிவித்தனர்.
மாணவியரின் குற்றச்சாட்டுகள் குறித்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் இயக்குனர் சந்திரசேகரிடம் கேட்ட பொழுது, ''உடனடியாக நானே ஆய்வுக்குச் செல்கிறேன்'' என்றார். அதன்படி, அவர் ஆய்வு மேற்கொண்டு, மாணவியரிடம் குறைகளை கேட்டுள்ளார். ஆய்வுக்கு பின் அவரிடம் கேட்டபோது, ''விடுதியில் உள்ள குறைபாடுகள் குறித்து, அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த குறைகள் சரிசெய்யப்படும்'' என்று தெரிவித்தார். ஆனால், இன்றுவரை மாணவியர் குறைகள் மட்டும் தீராமல் தொடர்ந்து வருகிறது.
- அ.ப.இராசா -