/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இடிந்து விழும் அபாய நிலையில் தொகுப்பு வீடுகள்: ஏக்கத்தில் விவசாயிகள்இடிந்து விழும் அபாய நிலையில் தொகுப்பு வீடுகள்: ஏக்கத்தில் விவசாயிகள்
இடிந்து விழும் அபாய நிலையில் தொகுப்பு வீடுகள்: ஏக்கத்தில் விவசாயிகள்
இடிந்து விழும் அபாய நிலையில் தொகுப்பு வீடுகள்: ஏக்கத்தில் விவசாயிகள்
இடிந்து விழும் அபாய நிலையில் தொகுப்பு வீடுகள்: ஏக்கத்தில் விவசாயிகள்
ADDED : ஆக 29, 2011 11:10 PM
பள்ளிப்பட்டு : இடிந்து விழும் அபாய நிலையிலுள்ள தொகுப்பு வீடுகளில், உயிரை கையில் பிடித்த படி வசித்து வரும் கூலி விவசாயிகள், புதிதாக வீடுகள் கட்டித் தருவது எப்போது என ஏக்கத்தில் உள்ளனர்.
பள்ளிப்பட்டு அடுத்த, ஸ்ரீ காவேரி ராஜுபேட்டை ஊராட்சியில், பொம்மராஜுபேட்டை காலனி உள்ளது. இங்கு, 40 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள், கூலி விவசாயிகளாக உள்ளனர். இவர்களுக்கு, 1999ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி காலத்தில், தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டது.அதன் பின், குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு முன், கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீடுகள், தற்போது பழுதடைந்து விட்டது. ஒவ்வொரு வீட்டின் மேற்கூரையின் உட்புறம் உள்ள சிமென்ட் கலவை, பொல பொல வென உதிர்ந்து வருகிறது. இதனால், கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு தெரிகிறது.சில மாதங்களுக்கு முன்பு, அங்கு வசிக்கும் காத்தவராயன் வீட்டில், மேற்கூரை இடிந்து, வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த, அவரது மகன் தேவதாஸ் மீது, சிமென்ட் கலவைகள் விழுந்து, லேசான காயங்களுடன், உயிர் தப்பினார்.அதேபோல, இங்குள்ள அனைத்து வீடுகளின் மேற்கூரை மற்றும் பக்கச் சுவர்கள் மிகவும் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு, எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழும் அபாய நிலையிலுள்ளது.சென்ற ஆண்டு அக்டோபரில் பெய்த பலத்த மழையினால், நீலம்மாள் என்பவரின், தொகுப்பு வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. அந்நேரத்தில், அவர் வீட்டில் இல்லாததால் உயிர் பிழைத்தார். இதேபோல, அதே நேரத்தில், மழையால் பாதிப்படைந்த வீடுகளை அரசு அதிகாரிகள், தாசில்தார், பி.டி.ஓ.,க்கள் பார்வையிட்டு, அவர்களுக்கு நிவாரண தொகையும் வழங்கி, இடிந்து விழுந்த வீட்டிற்கு பதில், புதிதாக தொகுப்பு வீடு கட்டித் தருவதாக உறுதி கூறி சென்றனர். ஆனால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படவில்லை.அதே கிராமத்தில், அருந்ததியர் காலனி உள்ளது. இங்குள்ளவர்களுக்கு சுடுகாட்டு வசதி இல்லை. அருகிலுள்ள, இருளர் காலனியில் உள்ள தெரு, கரடு முரடான காட்டுப்பாதை போல் உள்ளது. இதை சிமென்ட் சாலையாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.இருளருக்கு கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு வீடு கட்ட, முதல் தவணைத் தொகை வருவதற்கு முன்பாக, அவர்களால் முதலீடு செய்ய போதிய பண வசதி இல்லாததால், வீடுகள் கட்ட முடியவில்லை. திட்டமும் தற்போது செயல்பாட்டில் இல்லை.எனவே, அவர்களுக்கு தொகுப்பு வீடு கட்டித் தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, பள்ளிப்பட்டு பி.டி.ஓ., (ஊராட்சிகள்) சுசீலாவிடம் கேட்ட போது, 'பொம்மராஜுபேட்டை காலனியில் பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அவர்கள் வசித்து வரும் வீட்டின் பட்டா விவரங்கள் சரி பார்க்கப்படும். பின்னர், பட்டா நகல்கள், கலெக்டரின் சிறப்பு கவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்களுக்கு என்று கூடுதல் தொகுப்பு வீடுகளை பெற்று, வரும் நிதியாண்டில் கட்டித் தர ஏற்பாடுகள் செய்யப்படும்' என்றார்.
எம்.டி. கணபதி