/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி பனிமயமாதா திருவிழா கொடியேற்றம் கோலாகலம்தூத்துக்குடி பனிமயமாதா திருவிழா கொடியேற்றம் கோலாகலம்
தூத்துக்குடி பனிமயமாதா திருவிழா கொடியேற்றம் கோலாகலம்
தூத்துக்குடி பனிமயமாதா திருவிழா கொடியேற்றம் கோலாகலம்
தூத்துக்குடி பனிமயமாதா திருவிழா கொடியேற்றம் கோலாகலம்
ADDED : ஜூலை 27, 2011 02:10 AM
தூத்துக்குடி : இந்தியாவில் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதனை தொடர்ந்து அன்னைக்கு பொன்மகுடம் சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பங்கு இறைமக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா என்றழைக்கப்படும் தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் உலகப் பிரசித்தி பெற்றதாகும்.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இலங்கை, வளைகுடா நாடுகள் போன்றவற்றிலும் இருந்து ஏராளமான பங்கு இறைமக்கள் தூய பனிமய மாதாவை வணங்குவதற்காக ஆண்டுதோறும் வருகை தருவார்கள். பனிமய மாதா ஆலயத்தை போப் ஆண்டவர் பசிலிக்கா பேராலயம் என்ற உயரிய அந்தஸ்தினை வழங்கி கௌரவித்துள்ளார். பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் பங்கு இறைமக்களால் நடத்தப்படும் பெருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும். ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் மாதாவின் திருவுருவ பவனியுடன் நிறைவு பெறும்.
இந்த விழாவின் போது லட்சக்கணக்கான பொதுமக்கள் பேராலயத்திற்கு வருகை புரிவார்கள்.தூய பனிமய மாதா பேராலயத்தின் 429வது பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கொடி பவனி நடந்தது. கொடி பவனியின் போது வசூலிக்கப்பட்ட காணிக்கையினை ஆலய பங்குத் தந்தை வில்லியம் சந்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று காலை 6.30 மணிக்கு மூன்றாம் திருப்பலி நடந்தது.அதனை தொடர்ந்து பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கொடி ஆலய வளாகத்தை சுற்றி கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் பிஷப் இவோன் அம்புரோஸ் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன், முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள், மறைமாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களை சேர்ந்த பங்குதந்தைகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து 9 மணிக்கு திருப்பலி நடந்தது. மதியம் 12 மணிக்கு அடுத்த முக்கிய நிகழ்ச்சியான அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சலேசிய மாநில சபைத் தலைவர் ஆல்பர்ட் ஜான்சன் அன்னைக்கு பொன்மகுடத்தை அணிவித்தார். கொடியேற்றம் மற்றும் பொன்மகுடம் சூட்டும் நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பங்கு இறைமக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றம் மற்றும் பொன்மகுடம் சூட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி ஏ.எஸ்.பி.,சோனல் சந்திரா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோவில் வளாகத்தில் 7 இடங்களில் சிசி.,கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கூட்டத்தை கண்காணித்தனர். அதேபோல் கோவில் வளாகத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து பைனாகுலர் மூலம் போலீசார் கூட்டத்தை கண்காணித்தனர். பீச் ரோட்டில் வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது. மாலை 5.30 மணிக்கு இளையோருக்கான திருப்பலியும், 7.15 மணிக்கு செபமாலை மற்றும் நற்கருணை ஆசீரும் நடந்தது. விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை காந்திநகர், லூர்தம்மாள்புரம், ரத்தினபுரம் பங்கு இறைமக்கள் மற்றம் தஸ்நேவிஸ்மாதா தொடக்கப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், முதியோர்களுக்கும் சிறப்பு திருப்பலி நடக்கிறது.மாலை 5.30 மணிக்கு எம்.சவேரியார்புரம், முத்தையாபுரம் பங்கு இறைமக்களுக்காவும் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இரவில் ஆலய வளாகத்தில் 'வானகத்தின் திறவுகோல்' என்ற தலைப்பில் புன்னைகாயல் பங்குத் தந்தை ஜான்செல்வம் மறையுரையாற்றுகிறார்.