வரி ஏய்ப்பு வரிச் சுமையை அதிகரிக்கிறது
வரி ஏய்ப்பு வரிச் சுமையை அதிகரிக்கிறது
வரி ஏய்ப்பு வரிச் சுமையை அதிகரிக்கிறது
ADDED : ஜூலை 26, 2011 08:56 AM

சென்னை: 'வரிச் சுமையை அதிகரிக்க வரி ஏய்ப்பு வழிவகுக்கிறது,'' என்று, கவர்னர் பர்னாலா தெரிவித்தார்.
வருமான வரித்துறையின் 150 ஆண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழா நடந்தது. விழாவில், கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பேசியதாவது: எந்த ஒரு நிறுவனமும், 150 ஆண்டுகள் என்ற மைல் கல்லை தாண்டுவது எளிதல்ல. 1860ம் ஆண்டு வருமான வரித் துறை துவக்கப்பட்ட போது, அதன் வரி வருவாய் வசூல், 30 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது, அதன் வரி வருவாய் வசூல், 4 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. வருமான வரித்துறை வியக்கத்தக்க வகையில் செயல்பட்டு வருகிறது. வரிச் சுமையை அதிகரிக்க வரி ஏய்ப்பு வழிவகுக்கிறது. வருமான வரி, வருமான நசுக்குதல், அடிக்கடி வரி ஏய்ப்பு கடுமையாக கையாளப்பட வேண்டும். சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வருமான வரித்துறையின் தேசிய சிறப்புச் சேவை வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு சுர்ஜித்சிங் பர்னாலா பேசினார்.
விழாவில், தனிப்பட்ட முறையில் அதிகமாக வருமான வரி செலுத்திய ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் லட்சுமி நாராயணன், தொழில் அல்லாததில் அதிகமான வருமான வரி செலுத்திய ராம்தாஸ், தொழில் துறையில் அதிக வருமான வரி செலுத்திய ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் இயக்குனர் வெங்கட கிருஷ்ணன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில், திரைப்பட நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஸ்ரீகாந்த்துக்கு நினைவுப் பரிசு வழங்கினார். நடிகர் கமலஹாசனுக்கு, கவர்னர் பர்னாலா நினைவுப் பரிசு வழங்கினார்.
வருமான வரித்துறையின் தலைமை கமிஷனர் பிரேமா மாலினி வசந்த், வருமான வரித்துறையின் இயக்குனர் ஜெனரல் சுதிர் சந்திரா ஆகியோர் வரவேற்றனர்.