Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு : விருப்புரிமை ரத்தாகியும் சலுகை தொடர்ந்த மர்மம்

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு : விருப்புரிமை ரத்தாகியும் சலுகை தொடர்ந்த மர்மம்

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு : விருப்புரிமை ரத்தாகியும் சலுகை தொடர்ந்த மர்மம்

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு : விருப்புரிமை ரத்தாகியும் சலுகை தொடர்ந்த மர்மம்

ADDED : செப் 19, 2011 01:54 AM


Google News

வீட்டுவசதி வாரிய மனைகளை அரசின் விருப்புரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் முறை, கடந்த ஜனவரி 7ம் தேதி ரத்து செய்யப்பட்டது.

ஆனால், இதன் பின்னர் சோழிங்கநல்லூர் பகுதியில், 20 பேருக்கு விருப்புரிமையின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது, இப்போது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் புதிதாக உருவாக்கும் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில், 85 சதவீதம் பொது ஏலம் மூலம் உரியவர்களுக்கு ஒதுக்கப்படும். எஞ்சிய 15 சதவீதம், அரசின் விருப்புரிமை அடிப்படையில், சமூக சேவகர்கள், ஆதரவற்ற பெண்கள், தியாகிகள் உள்ளிட்ட சமூகத்தில், சிறப்பான வகையில் சாதனை புரிந்தவர்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசின் மூலம் நேரடியாக ஒதுக்கப்படும். இவ்வாறு ஒதுக்கியதில், கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக, புகார்கள் வந்தன. குறிப்பாக, முன்னாள் முதல்வருக்கு நெருக்கமாக இருந்த போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள், பணியாளர்கள், உறவினர்கள் ஆகியோர் சமூக சேவகர்கள், அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்ற அடிப்படையில், விதிகளுக்குப் புறம்பாக ஒதுக்கீடு பெற்றனர்.



இவ்வாறு ஒதுக்கீடு பெற்ற மனைகள், வீடுகளை, இவர்களில் பலரும் அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடி செய்ததாக, புகார்கள் வந்தன. ஒதுக்கீடு ரத்து: இந்த புகார்கள் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய முந்தைய அரசு, அதற்கு பதிலாக, விருப்புரிமை ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடிவு செய்தது.

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரை துவக்கி வைத்து, கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி, கவர்னர் ஆற்றிய உரையின் 50வது பக்கத்தில், விருப்புரிமை ஒதுக்கீடு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கவர்னர் உரையில், ''தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அரசின் விருப்புரிமை அடிப்படையில் மனைகள், வீடுகளை ஒதுக்கீடு செய்வது, கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த முறைக்கு, இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து, அனைத்து மனைகள், வீடுகளும் வீட்டுவசதி வாரியத்தில், பொது ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது.



ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், விருப்புரிமை ஒதுக்கீடு முறையை மீண்டும் கொண்டு வருவதா, இல்லையா என்பது குறித்து, புதிய அரசு இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. மீண்டும் ஒதுக்கீடு: இந்த நிலையில், வீட்டுவசதி வாரியத்தில் பெசன்ட் நகர் கோட்டத்துக்குட்பட்ட சோழிங்கநல்லூர் மூன்றாவது திட்டப் பகுதியில், அரசின் விருப்புரிமையின் கீழ் மனைகள் ஒதுக்கப்பட்ட விவரங்கள் குறித்து, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு, வீட்டுவசதி வாரியத்தின் பொது தகவல் அதிகாரி, கடந்த 12ம் தேதியிட்ட கடிதத்தில் பதில் அளித்துள்ளார். அதன் விவரம்: சோழிங்கநல்லூர் மூன்றாவது திட்டப் பகுதியில், 2006ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல், 2009ம் ஆண்டு வரை, 29 பேருக்கு அரசின் விருப்புரிமையின் கீழ் மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 18 பேருக்கு உயர் வருவாய் பிரிவினருக்கான மனைகளும், மூன்று பேருக்கு நடுத்தர வருவாய் பிரிவினருக்கான மனைகளும், எட்டு பேருக்கு குறைந்த வருவாய் பிரிவினருக்கான மனைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.



இதே திட்டப் பகுதியில், சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளில், 52 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் வரை, 32 பேருக்கு அரசின் விருப்புரிமையின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்டன. 2011ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி, சோழிங்கநல்லூர் திட்டத்தில் 20 பேருக்கு, அரசின் விருப்புரிமையின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த பதிலில், பொது தகவல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அரசின் விதி மீறல்: அதாவது, அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டு முறை உடனடியாக கைவிடப்படுவதாக, இந்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி, சட்டசபையில் கவர்னர் அறிவித்தார். அதன் பின் அதே மாதத்தில், 20ம் தேதி ஒரே நாளில் 20 பேருக்கு நடைமுறையில் இல்லாத, அரசின் விருப்புரிமையின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது குறித்து விசாரித்த போது, ''இது முற்றிலும் முந்தைய அரசின் முடிவு சார்ந்த விஷயம், வீட்டுவசதி வாரியம் நிர்வாக ரீதியான பணியை மட்டுமே மேற்கொள்கிறது'' என, பெயர் குறிப்பிட விரும்பாத வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us