Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/இலவச பொருட்கள் கொடுத்த தி.மு.க.,வேட்பாளர் மீது வழக்கு: போலீஸ் வலை

இலவச பொருட்கள் கொடுத்த தி.மு.க.,வேட்பாளர் மீது வழக்கு: போலீஸ் வலை

இலவச பொருட்கள் கொடுத்த தி.மு.க.,வேட்பாளர் மீது வழக்கு: போலீஸ் வலை

இலவச பொருட்கள் கொடுத்த தி.மு.க.,வேட்பாளர் மீது வழக்கு: போலீஸ் வலை

ADDED : அக் 10, 2011 01:04 AM


Google News
ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி, 12வது வார்டு பகுதியில், வீடுதோறும் வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் கொடுத்த தி.மு.க., வேட்பாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக தேடிவருகின்றனர்.ஆத்தூர் நகராட்சி, 12வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களாக, அ.தி.மு.க.,வில் சுமதி, தி.மு.க.,வில் துணை சேர்மன் ரவி, தே.மு.தி.க., செந்தில்குமார், காங்., சரவணன், சுயேட்சை வேட்பாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முக சுந்தரம் ஆகிய ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.

துணை சேர்மனும், தி.மு.க., நகர இளைஞர் அணி அமைப்பாளருமான ரவி, நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில், 12வது வார்டுக்குட்பட்ட ஆண்டாள் தெரு, ஆரியர் தெரு பகுதியில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, 300 ரூபாய் மதிப்பிலான பித்தளை முலாம் பூசப்பட்ட பூஜை கூடையுடன், மஞ்சள், குங்குமம் மற்றும் தாலிக் கயிறு ஆகியவற்றை இலவசமாக கொடுத்துள்ளார்.

அதுகுறித்து தகவலறிந்த தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர் வேட்பாளர் ரவி உள்ளிட்ட கட்சியினர், இலவச பொருட்கள் கொடுத்து ஓட்டு கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அதையடுத்து, இலவச பொருட்களை பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கிய தி.மு.க., வேட்பாளர் மீது, இரு பிரிவுகளின்க கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.மேலும், தலைமறைவான தி.மு.க., வேட்பாளரை, போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கைதி.மு.க., மேயர் வேட்பாளர் உத்தரவாதம்

சேலம்: ''சேலம் மாநகராட்சியில், தினமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்,'' என, தி.மு.க., மேயர் வேட்பாளர் கலையமுதன் உறுதி தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சி தி.மு.க., மேயர் வேட்பாளர் கலையமுதன், நேற்று, 35, 36, 9, 10, 11, 32, 33, 34 ஆகிய வார்டுகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் கலையமுதன் பேசியதாவது:சேலம் மாநகராட்சியில், குடிநீர் பிரச்னை தீர குழு அமைத்து, அவர்கள் மூலம் தினமும் கண்காணித்து சீரான குடிநீர் வழங்கப்படும். மின் தடை ஏற்பட்டால், ராட்சத ஜெனரேட்டர்கள் மூலம் சீரான குடிநீர் கிடைக்க வழிவகை செய்வேன். சேலத்தில், நான்கு இடங்களில், 40 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்சத தரை தொட்டிகள் கட்டி, தண்ணீரை தேக்கி வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.பாதாள சாக்கடை திட்டத்தின் காரணமாக, அம்மாப்பேட்டை பகுதியில், பல இடங்களில் சாலைகள் பெயர்ந்து கிடக்கிறது. நான் வெற்றி பெற்று மேயர் ஆனால், புதிய சாலை அமைத்து தரப்படும். சாலையின் இரண்டு பக்கத்தில் உள்ள சாக்கடைகள் புதுப்பிக்கப்படும்.மாநகர பகுதியில், தினமும் குடிநீர் கிடைக்க முழு வீச்சில் செயல்படுவேன். அதேபோல, சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவை உயர்த்தப்படமாட்டாது. சேலம் மாநரை சேர்ந்த சலவையாளர்களுக்கு, பனமரத்துப்பட்டி ஏரியில் சலைவை துறை கட்டித்தருவேன். அங்கு, அவர்கள் ஓய்வு எடுக்கவும் அறை கட்டப்படும்.இவ்வாறு பேசினார்.பிரச்சாரத்தின்போது, தி.மு.க., வேட்பாளர்கள் ஆரிவுன்னிஷா, ராமகிருஷ்ணன், ஆட்டோ மாணிக்கம், வக்கீல் தெய்வலிங்கம், ஜெயகோபால், சாந்தாராம், உமையபானு, கபீர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us