/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/அரசு பஸ்கள் பயண தூரம் நீட்டிப்பால் கிராம மக்கள் பாதிப்புஅரசு பஸ்கள் பயண தூரம் நீட்டிப்பால் கிராம மக்கள் பாதிப்பு
அரசு பஸ்கள் பயண தூரம் நீட்டிப்பால் கிராம மக்கள் பாதிப்பு
அரசு பஸ்கள் பயண தூரம் நீட்டிப்பால் கிராம மக்கள் பாதிப்பு
அரசு பஸ்கள் பயண தூரம் நீட்டிப்பால் கிராம மக்கள் பாதிப்பு
ADDED : அக் 09, 2011 11:22 PM
ஸ்ரீபெரும்புதூர் : பஸ் பயண தூரம் நீட்டிக்கப்பட்டதால், கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு இடையே, போந்தூர், வல்லம், வடகால், வல்லக்கோட்டை, மாத்தூர், ஒரகடம், ஆப்பூர், சிங்கபெருமாள் கோவில் உட்பட 30 கிராமங்கள் உள்ளன.
இக்கிராம மக்கள், பல்வேறு தேவைகளுக்காக, ஸ்ரீபெரும்புதூர் அல்லது செங்கல்பட்டு செல்கின்றனர்.செங்கல்பட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு சட்டக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரிகள், மாவட்ட முதன்மை கோர்ட்டுகள் மற்றும் ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதியிலும், ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, ஏராளமானத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து, தினமும் பஸ் மூலம் வேலைக்கு வந்து செல்கின்றனர்.ஸ்ரீபெரும்புதூர் -செங்கல்பட்டு வழித்தடத்தில் உள்ள கிராம மக்களுக்காக, அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், தடம் எண்: 82 சி பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவள்ளூர் பணிமனையிலிருந்து மூன்று பஸ்கள், செங்கல்பட்டு பணிமனையிலிருந்து ஏழு பஸ்கள், மதுராந்தகம் பணிமனையிலிருந்து இரண்டு பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஒரு பஸ் நாளொன்றுக்கு எட்டு முறை வந்து சென்றால், 12 பஸ்கள் 96 முறை, இவ்வழித்தடத்தில் சென்று வந்தன. இதன் மூலம் 20 நிமிடத்திற்கு ஒரு பஸ், பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டது. பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்தனர்.இச்சூழலில், கடந்த வருடம் பிப்ரவரி மாதம், பஸ் பயண தூரம் நீட்டிக்கப்பட்டது. திருவள்ளூரிலிருந்து புறப்படும் தடம் எண் 82 சி, திண்டிவனத்திற்கும், செங்கல்பட்டு பணிமனை மூலம் இயக்கப்படும் பஸ் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வழியாக பழவேற்காடுக்கும், மதுராந்தகம் பணிமனையிலிருந்து புறப்படும் பஸ்கள், செங்கல்பட்டு, ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பூந்தமல்லிக்கும் நீட்டிக்கப்பட்டன.இதனால், திருவள்ளூர் - செங்கல்பட்டு இடை யே, 96 முறை பஸ்கள் சென்று வந்தது, 48 முறையாக குறைந்துள்ளது. தற்போது, 40 நிமிடத்திற்கு ஒரு பஸ் புறப்படுகிறது. பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. டிரைவர்கள், பல கிராமங்களில் பஸ்களை நிறுத்தாமல் செல்கின்றனர். பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.இது குறித்து, பொது மக்கள், திருவள்ளூர் மண்டல போக்குவரத்துக் கழகப் பொது மேலாளரிடம் புகார் மனு அளித்தனர். பஸ் பயண தூரம் நீட்டிப்பை ரத்து செய்ய வலியுறுத்தினர். அதை ஏற்று, கடந்த மாதம் 25 ம் தேதி, செங்கல்பட்டு - திருவள்ளூர் இடையே செல்லும் தடம் எண்: 82 சி பஸ்கள் பயணதூரம் நீட்டிப்பு ரத்து செய்யப்படுவதாக பொது மேலாளர் அறிவித்தார்.அவர் உத்தரவிட்டு ஒரு மாதம் ஆகியும், பஸ்கள் வழக்கம்போல், திண்டிவனம், திருவண்ணாமலை, பழவேற்காடு, பூந்தமல்லி சென்று வருகின்றன. பொதுமக்கள் நலன் கருதி, பொது மேலாளர் உத்தரவை அமல்படுத்த, போக்குவரத்துக் கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


