Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு முறை

மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு முறை

மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு முறை

மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு முறை

ADDED : ஜூலை 14, 2011 01:43 AM


Google News

நாமக்கல் : 'மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்' என, எருமப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் அசோகன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: எருமப்பட்டி வட்டாரத்தில் சில பகுதிகளில் பப்பாளியில், மாவுப்பூச்சி தாக்குதல் கண்டறியப்பட்டது. பின் இப்பூச்சியானது மரவள்ளி, காட்டாமணக்கு, செம்பருத்தி, கொய்யா, தேக்கு, வெண்டை, கத்தரி, தக்காளி, பருத்தி போன்ற பயிர்களிலும் பார்த்தீனியம் போன்ற களைச் செடிகளிலும் பரவி, தற்போது மல்பரி செடிகளையும் தாக்கத் துவங்கி உள்ளது. அதை கடுப்படுத்த ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவுப்பூச்சிகள் களைச்செடிகளில் அடைக்கலம் புகுவதால், பயிர் சாகுபடி வயல்களை களையின்றி வைத்துக்கொள்ள வேண்டும். பப்பாளி மாவுப்பூச்சி தாக்கப்பட்ட பகுதியில் இருந்து நாற்றுகள், விதை கரணைகளை பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு அருகில் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள பயிர்களில் மாவுப்பூச்சிகள் தாக்குதல் உள்ளதா? என கண்காணித்து தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு மிகக்குறைவாக இருந்தால், பாதிக்கப்பட்ட இலை, தண்டுகளை பாலிதீன் பைகளில் சேகரித்து எரிக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருந்தால் ஒட்டுமொத்தமாக அடிவெட்டு செய்து, செடிகளை தீயிட்டு அழிக்க வேண்டும். அடிவெட்டு செய்தவுடன், வேப்பெண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மி.லி., வீதம் அல்லது ரோகார் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மி.லி., வீதம் அல்லது குளோர்பைரிபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐந்து மி.லி., வீதம் அல்லது டைகுளோர்வாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மி.லி., அல்லது புரபனோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மி.லி., என்ற அளவில், ஏதேனும் ஒன்றை பத்து நாட்கள் இடைவெளியில் மூன்று முறையாவது மாறி மாறித் தெளித்து உடனடியாக மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், புதிய தொழில் நுட்பமாக நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலமாக, ஒட்டுண்ணிகளை பெற்று பாதிக்கப்பட்ட வயல்களில் விட்டு இயற்கை வழியிலும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். வேளாண் அறிவியல் மையத்தை தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து, முன்னுரிமை அடிப்படையில் ஒட்டுண்ணிகளை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us