உளுந்தூர்பேட்டை அருகே வீடு புகுந்து நகைகள் திருட்டு
உளுந்தூர்பேட்டை அருகே வீடு புகுந்து நகைகள் திருட்டு
உளுந்தூர்பேட்டை அருகே வீடு புகுந்து நகைகள் திருட்டு
ADDED : ஆக 23, 2011 10:36 PM

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே ஒரு வீட்டில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருடு போனது,
உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனசூர்கோட்டையை சேர்ந்தவர் அப்துல்ஜபார்,45.
நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி கொண்டு முன்பகுதியில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டு இருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்தது. அறைக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் 10 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் துணிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. தகவலறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எலவனசூர்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், உலகநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்துல்ஜபார் வீட்டில் திருடிய 2 சூட்கேஸ்களை ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடத்தில் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அங்கு துணிகள் மற்றும் சூட்கேஸ்களை வீசிவிட்டு சென்றுள்ளனர். மேலும் 2 சூட்கேஸ்களை 2 கிலோ மீட்டர் தூரத்தில் உடைத்து வீசிவிட்டு சென்றுள்ளனர். விழுப்புரம் கைரேகை நிபுணர்கள் வெங்கடேசன், சதீஷ் சம்பவ இடத்தில் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் மிஷ்டி, அப்துல்ஜபார் வீட்டில் இருந்து வயல் வெளி வழியாக திருக்கோவிலூர் மெயின் ரோட்டை வந்தடைந்தது. புகாரின் பேரில் எலவனசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அலட்சியம்: திருடர்களின் நடமாட்டத்தை அறிந்த தெரு நாய்கள் அதிகாலை 2 மணியளவில் குரைத்துள்ளன. அதனை அப்பகுதி மக்கள் பெரிதாக எடுத்து கொள்ளாததால் திருடர்கள் கைவரிசையை காட்டி தப்பினர்.