Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/தீபாவளிக்கு கூடுதல் பஸ்களை இயக்க எதிர்பார்ப்பு : ட்முன்பதிவு செய்யாத பயணிகள் விருப்பம்

தீபாவளிக்கு கூடுதல் பஸ்களை இயக்க எதிர்பார்ப்பு : ட்முன்பதிவு செய்யாத பயணிகள் விருப்பம்

தீபாவளிக்கு கூடுதல் பஸ்களை இயக்க எதிர்பார்ப்பு : ட்முன்பதிவு செய்யாத பயணிகள் விருப்பம்

தீபாவளிக்கு கூடுதல் பஸ்களை இயக்க எதிர்பார்ப்பு : ட்முன்பதிவு செய்யாத பயணிகள் விருப்பம்

ADDED : செப் 27, 2011 10:58 PM


Google News

தீபாவளிப் பண்டிகைக்கு, அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்பவர்களுக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், முன்பதிவு செய்யாத பயணிகளின் தீபாவளிப் பயணத்திற்கு, அரசு போக்குவரத்துக் கழகங்கள் போதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை, வரும் அக்டோபர் மாதம் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, சென்னையில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, வரும் அக்., 24 மற்றும் 25ம் தேதிகளிலேயே, தென் மாவட்ட பயணிகள் அதிகளவில் புறப்பட்டுச் சென்று விடுவர். அரசு விரைவு பஸ்களில், இந்த நாட்களுக்கான முன்பதிவு தற்போது முடிந்துள்ளது.

குறிப்பாக திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கும்பகோணம் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்பவர்களுக்கான முன்பதிவு முடிந்துள்ளது. ஆனால், தற்போது முன் பதிவு செய்தவர்களை விட, முன்பதிவு செய்யாத பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கிறது. பயணிகள் வாக்குவாதம்: இதன் எதிரொலியை, கடந்த பண்டிகைகளின் போது, கோயம்பேடு பஸ் நிலையத்தில் பார்க்க முடிந்தது. குறிப்பாக ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி பண்டிகைகள் சேர்ந்து வந்த போதும், அதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு கிழமைகளுடன் முகூர்த்த நாள் சேர்ந்து வந்த போதும், பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. அப்போது, அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தினர் சமாளிக்க முடியாமல் இருந்ததால், பயணிகள் விடிய விடிய பஸ் நிலையத்திலேயே காத்திருக்க நேரிட்டது. அவர்கள் நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதே போல, ஒவ்வொரு பண்டிகையின் போதும் இந்த நிலை தொடருகிறது.

குறிப்பாக, கடந்த தீபாவளி பண்டிகையை பலர் பஸ் பயணத்திலேயே கொண்டாடும் அளவிற்கு பஸ் பற்றாக்குறையும், காலதாமதமும் ஏற்பட்டது. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளும், உரிய நேரத்தில் பஸ் வராததால், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது.



சிறப்பு பஸ்கள் தேவை: கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் அனேக பகுதிகளுக்கும், மற்ற சில மாநிலங்களுக்கும், 456 பஸ்கள் இயக்கப்படும் நிலையில், தற்போது கூடுதல் சிறப்பு பஸ்களின் சர்வீஸ் தேவைப்படுகிறது. இதற்காக, முன்கூட்டியே முறையான திட்டமிடல் வேண்டும். சிறப்பு பஸ்களை கூடுதலாக இயக்குவதன் மூலமாக மட்டுமே, பயணிகளின் கூட்டத்தை ஓரளவு சமாளிக்கலாம். இதே போல, தீபாவளி பண்டிகையின் போது, அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு உதவியாக, விழுப்புரம் மற்றும் கும்பகோணம் கோட்டங்களில் இருந்து, நூற்றுக்கணக்கான சிறப்பு பஸ்களை இயக்குவர். அவர்கள் தரப்பிலும் சிறப்பு பஸ்களை அதிகரிக்கும் பட்சத்தில் நிலைமையை, மேலும் ஓரளவு சமாளிக்கலாம். இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கடந்த தீபாவளிப் பண்டிகையின் போது 100 சிறப்பு பஸ்களை இயக்கியும், நிலைமையை சமாளிக்க முடியவில்லை. இந்த முறை குறைந்தபட்சம் 200 சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, தமிழகத்தில், 23 டிப்போக்களில் இருந்தும் பஸ்களை பெற உள்ளோம்.

குறிப்பாக, தென் மாவட்ட பகுதிகளில் கூட்டம் இல்லாத மற்ற பகுதிகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் செல்லும் பஸ்களை, அன்றைய தினம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதியளித்தார்.



பஸ்சில் கொண்டாடிய தீபாவளி : அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்து கொண்டு, தங்களது பயணத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பயணிகள், ஆண்டுதோறும் சிக்கலுக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கான பஸ், குறித்த நேரத்திற்கு பஸ் நிலையத்திற்கு வராததும், புறப்படாததும் தான் காரணம். இது குறித்து, கடந்த தீபாவளிப் பண்டிகையை பஸ்சிலேயே கொண்டாடிய நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், 'கடந்த ஆண்டு தீபாவளி முந்தைய நாள், ரிசர்வேசன் டிக்கெட்டுடன் கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்தேன். இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய எங்களது பஸ், பஸ் நிலையத்திற்குள் வந்ததே 12 மணிக்கு தான். பின்னர், பஸ் நிலைய நெரிசலில் நிலையத்தை விட்டு வெளியேறவே, ஒரு மணி நேரம் ஆனது. பல போராட்டங்களுக்குப் பின் புறப்பட்ட பஸ், பாண்டிச்சேரியை அடைவதற்குள்ளே பொழுது விடிந்து விட்டது. பஸ்சிலேயே தீபாவளி கொண்டாட வேண்டி வந்தது. அதே நேரத்தில், முன்பதிவு செய்யாத என் நண்பன், சிறப்பு பஸ்சில் குறித்த நேரத்திற்கு சொந்த ஊர் சென்று விட்டான்'' என ஆதங்கப்பட்டார்.



- எஸ்.விவேக் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us