ஜெயின் துறவி நினைவு தபால்தலை வெளியீடு
ஜெயின் துறவி நினைவு தபால்தலை வெளியீடு
ஜெயின் துறவி நினைவு தபால்தலை வெளியீடு
ADDED : செப் 27, 2011 06:19 PM

கோவை: ஜெயின் துறவி ஆச்சார்யா ஜெயமால்ஜி மகராஜின் நினைவு தபால்தலை வெளியீட்டு விழா, கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கில் நடந்தது.
மணி பஹன் கீர்த்திலால் மேத்தா ஆராதனா பவன் மற்றும் அகில இந்திய ஜயமால் ஸ்ராவக் சங்கம் சார்பில் விழா நடந்தது. மகாவீர்ஸ் துணிக்கடை நிர்வாக இயக்குனர் பால்சந்த் வரவேற்றார்.
தமிழக தொழில்துறை அமைச்சர் வேலுமணி மற்றும் தமிழ்நாடு சர்க்கிள் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சாந்தி ஆகியோர் இணைந்து, ஜெயின் துறவி ஆச்சார்யா ஜெயமால்ஜி மகராஜின் நினைவு தபால்தலையை வெளியிட்டனர்.
அமைச்சர் வேலுமணி பேசுகையில், ''ஜெயின் துறவி ஆச்சார்யா ஜெயமால்ஜி மகராஜின் நினைவு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஜெயின் மத துறவிகளின் வாழ்க்கை, மிகக்கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டது. சூரியன் மறைந்த பின் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள். இத்தகைய கட்டுப்பாடுகளை கொண்ட துறவிகளின் போதனைகள் கேட்டு அதன்படி நடந்தால் நம் எல்லோருடைய வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும், வெற்றியும் கிடைக்கும்,'' என்றார்.
ஆச்சார்யா ஜெயமால்ஜி மகராஜ் குறித்து சுகல்சந்த் ஜெயின் பேசியதாவது: மகாவீரரின் சீடர்களில் முக்கியமானவரான ஆச்சார்யா ஜெயமால்ஜி மகராஜின் பிறந்த தினம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஆச்சார்யா ஜெயமால்ஜி மகராஜின் 304 வது பிறந்த தினத்தை நாடு முழுவதும் உள்ள ஜெயின் சமூகத்தினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அவரின் நினைவு தபால்தலை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆச்சார்யா ஜெயமால்ஜி மகராஜ், தான் வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த உடன்கட்டை ஏறுதல் மற்றும் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட சமூக பழக்க வழக்கங்களுக்கு எதிராகப் போராடினார்; பெண்களின் மேம்பாட்டுக்காக சேவையாற்றினார். தனது வாழ்நாள் முழுமையையும் சமூக நலனுக்காக அர்ப்பணித்து, அமைதி மற்றும் சமாதானம் என்னும் உயரிய நோக்கத்துடன் சேவையாற்
றியவர். இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், கோவை எம்.பி., நடராஜன், மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் ராஜேந்திர தர்தா, கர்நாடகா அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி தனஞ்ஜெய் குமார், எம்.பி., ஸ்ரீதிலிப்காந்தி, மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் நந்தா, எம்.எல்.ஏ., சேலஞ்சர் துரை, அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் வேலுசாமி, மகாராஷ்ட்ர பிரதேஷ் காங்கிரஸ் பொது மேலாளர் பிரகாஷ் முக்தியா, இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் தவுலத் ஜெயின், சுகல்சந்த் ஜெயின், பிரேம்சந்த் முனோத், கீர்த்திலால்ஸ் நிர்வாக இயக்குனர் சாந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.