ADDED : செப் 20, 2011 01:03 AM
கெங்கவல்லி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கெங்கவல்லி தாலுகா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட தலைவர் கருத்தாப்பிள்ளை, அம்மாசி ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், புறம்போக்கு, கோவில் நிலத்தில் குடியிருந்து வருபவர்கள், சொந்த வீடு இல்லாதவர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பூமிதான நிலம், மலைவாழ் மக்கள் மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒதுக்கிய நிலத்தை, ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்க வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறித்து புதிய கணக்கெடுப்பு நடத்தி, சிறு, குறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும். வீரகனூரில் இலங்கை தமிழருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை கைது செய்து, நிலத்தை மீட்டுத் தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜகோபால், வட்ட செயலாளர் வெங்கடாஜலம் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


