Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/விஸ்வரூபம் எடுக்கும் 20 எம்ஜிடி : வற்றிப்போகும் தாமிரபரணி

விஸ்வரூபம் எடுக்கும் 20 எம்ஜிடி : வற்றிப்போகும் தாமிரபரணி

விஸ்வரூபம் எடுக்கும் 20 எம்ஜிடி : வற்றிப்போகும் தாமிரபரணி

விஸ்வரூபம் எடுக்கும் 20 எம்ஜிடி : வற்றிப்போகும் தாமிரபரணி

ADDED : செப் 15, 2011 11:51 PM


Google News

ஸ்ரீவைகுண்டம் : விஸ்வரூபம் எடுக்கும் 20 எம்ஜிடி திட்டத்தால் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் விவசாயம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குடிநீருக்கே திண்டாட்டம் ஏற்படும்போது தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் தண்ணீரை கடல்நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்ப்பு இயக்கத்தினரின் சத்தம் பலமாக ஒலிக்க துவங்கியுள்ளது. உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனம் செய்வோம், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பு... இந்த வாக்கியங்கள் எல்லாம் விவசாயத்தையும், விவசாயிகளையும் உயர்த்தி பிடித்து செல்கிறது. வார்த்தைகள் மட்டும்தான் உள்ளதே தவிர தற்போது விவசாயின் நிலைமை, பிச்சைக்காரர்களை விட மோசமாகிவிட்டது என்றால் வருத்தத்தைத்தான் அளிக்கிறது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஆகும். மருதூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இரண்டு அணைக்கட்டுகளில் இருந்து பிரியும் மேலக்கால், கீழக்கால், வடகால், தென்கால் நான்கு கால்வாய்களில் இருந்து சுமார் 46 ஆயிரத்து 10 ச.ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. இருபோக சாகுபடி நடந்து வந்த இந்த விவசாயப்பகுதிகள் தற்போது ஒருபோகம் கூட நடக்காமல் உள்ளது.



8 தொழிற்சாலைகளுக்கு தினமும் 9 கோடி லிட்டர் தண்ணீர் : 20 எம்ஜிடி திட்டம் தூத்துக்குடி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 20 மில்லியன் காலன் தண்ணீர் வழங்கும் திட்டத்தை அரசு ஆணை எண்.2259 படி 12.11.1970ன் படி 4 கோடியே 70 லட்சம் செலவில் 1975 வருடம் நிறைவேற்றப்பட்டு துவங்கப்பட்டது. இந்த 20 எம்ஜிடி திட்டம் ஆணை எண்.48 28.2.95ன் படி தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திற்கு 7 மில்லியன் காலன் தண்ணீரும், டாக் நிறுவனத்திற்கு 1 மில்லியன் காலன் தண்ணீரும், கனநீர் ஆலைக்கு 0.60 மில்லியன் காலனும், அனல்மின் நிலையத்திற்கு 5 மில்லியன் காலனும் சிறுதொழில் பேட்டை சிப்காட்டிற்கு 2.75 மில்லியன் காலனும், டைட்டானியம் தொழிற்சாலைகளுக்கு 0.15 மில்லியன் காலன் தண்ணீரும், ஸ்டெர்லைட் தொழிற்சாலைகளுக்கு 2.50 மில்லியன் காலனும் ஆக மொத்தம் 8 தொழிற்சாலைகளுக்கு 20 மில்லியன் காலன் தண்ணீர் அதாவது 3 மில்லியன் கனஅடி 9 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் தாமிரபரணி ஆறு வடகால் மூலம் ஆறுமுகமங்கலம் குளத்தில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.



இத்தகைய தண்ணீர் வழங்க அரசின் வருவாய் நிலை ஆணைகள் தொகுதி (1) ன் இணைப்பில் 4வது படிவத்தில் கண்காணிப்பு பொறியாளர் தொழில் பயன்பாட்டிற்கு தண்ணீர் வேண்டுமென விண்ணப்பதாரரிடமிருந்து உடன்படிக்கை பெறவேண்டும். அத்துடன் மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்தவிதமான உடன்பாடுகள் ஏதும் செய்து கொள்ளப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இதுபோன்ற அரசின் உடன்படிக்கை ஏதும் இல்லாமல் குடிநீர் வடிகால் வாரியம் தண்ணீர் எடுப்பது விதிமுறைகளை மீறும் செயலாகும். இவ்வாறு பெறும் உடன்படிக்கைகளில் நீர்பாசன ஆதாரங்கள் பொறியியல் பணித்துறையின் பொறுப்பில் இருக்குமானால் மாவட்ட கலெக்டரின் ஆலோசனை பெற்று உரிமம் வழங்க அதிகாரம் பெற்றவர்களாகின்றனர்.



72 கோடியே 88 லட்சத்து 58ஆயிரத்து 594 ரூபாய் பாக்கி : இவ்வாறு செய்த உடன்படிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படவேண்டும் பெறப்படும் தண்ணீருக்கு முன்பாக்கிகள் இருந்தால் அவை வசூல் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் 20 எம்ஜிடி திட்டத்திற்கு எத்தகைய உரிமம் வழங்கப்பட்டது என இதுவரை விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற விவசாயிகளின் குற்றச்சாட்டையும் புறக்கணித்துவிட முடியாது. இதுவரை எந்த உரிமமும் வருடம்தோறும் புதுப்பிக்கப்படவில்லை. கட்டணபாக்கிகள் வசூல் செய்யப்படவில்லை. பொதுப்பணித்துறையிடம் இருந்து அரசு விலை நிர்ணயப்படி 1000 லிட்டர் தண்ணீர் 50 பைசாவிற்கு குடிநீர் வடிகால் வாரியம் பெற்று அதனை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு 15 ரூபாய்க்கு விற்றுள்ளதாக கூறுகிறது. இந்த 1000 லிட்டருக்கு 50 பைசா வீதம் இதுவரை 35 ஆண்டுகளில் 72 கோடியே 88 லட்சத்து 58 ஆயிரத்து 594 ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இதுவரை பாக்கி உள்ளதொகை வசூல் செய்ய அரசு துறை அதிகாரிகள் எந்தவிதமான அடிப்படை நடவடிக்கையும் எடுத்ததாகவும் தெரியவில்லை. பொதுப்பணித்துறையோ குளங்களை, அணைக்கட்டை தூர்வாற அரசு பணம் ஒதுக்கீடு செய்யவில்லை என கூறுகிறது. தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் ஒப்பந்தபடி இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக கூறும்போது இதற்கான அணையில் இன்று வெளியேறும் அளவிற்கோ பம்பிங் செய்யப்படும் இடத்தில் உள்ள அளவிற்கோ அளவீடுகள், மீட்டர்கள் ஏதும் வைக்கப்படவில்லை, பராமரிக்கபடவில்லை.

வரவேண்டிய பணம் வந்து சேர்ந்ததா என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை.



ஆனால் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல் ஏதோ ஒருவிஷயத்தை மறைத்து விட்டு தற்போது விவசாயத்திற்கு தண்ணீர் மறுக்கப்படுவதால் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாமிரபரணி தண்ணீர் 1000 லிட்டருக்கு 50 பைசா வீதம் விலைக்கு வாங்கும் குடிநீர் வடிகால் வாரியம் சுத்திகரிப்பு செய்து 8 தொழிற்சாலைகளுக்கு 1000 லிட்டர் 15ரூபாய்க்கு அதாவது நாள் 1 க்கு 20 மில்லியன் காலன் 9 கோடி லிட்டர் தண்ணீர் என்றால் வருடத்திற்கு 3 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 800 கன அடிமீட்டர். 1 கன அடிமீட்டர் என்பது 1000 லிட்டர் அப்படியென்றால் 3 ஆயிரத்து 300 கோடி லிட்டர். லிட்டருக்கு தாமிரபரணி தண்ணீர் 1 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 300 ரூபாய்க்கு மலிவு விலையில் தான் விற்பனை செய்துள்ளது. சென்னை மாநகரத்தில் கடல்நீரை குடிநீராக்கி 1000 லிட்டர் தண்ணீர் 49 ரூபாய்க்கு வழங்குகிறது. இதன்படி வருடம் ஒன்றுக்கு 20 எம்ஜிடி திட்டத்தில் அரசுக்கு 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு என ஆரம்பித்தால் 35 வருடத்தில் 3500 கோடி என பெரிய இழப்பு ஆகும். பெரிய தனியார் தொழிற்சாலைகளுக்கும் அரசு தொழிற்சாலைகளுக்கும் விவசாயத்திற்கு பயன்படும் தண்ணீரை அவர்களுக்கு வழங்காமல் 46 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விவசாயம் இன்றி தரிசு போட்டு விட்டு வருடத்திற்கு 100 கோடி வருவாய் இழப்பு அவசியம் தானா? என விவசாயிகள், அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.



வந்தாச்சு 23 எம்ஜிடி திட்டம் வற்றிப்போனது தாமிரபரணி : இதுவரை ஒப்பந்தம், மீட்டர் மறுபரிசீலனை, ஒப்பந்த நீட்டிப்பு, வசூல் ஏதும் செய்யாமல் அதிகாரிகள் அவரவர் இடத்திற்கு அரசின் பணத்தை நஷ்டபடுத்தியிருப்பது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் போல 20 எம்ஜிடி ஊழல் என்று தனி விசாரணை கமிஷன் அரசு போடவேண்டிய நிலை வந்தாலும் வரலாம். இது இவ்வாறு ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோது 20 எம்ஜிடி திட்டத்தை 3 எம்ஜிடி கூட்டி 23 எம்ஜிடி திட்டமாக்கி 28 கோடி செலவில் அணைகட்டுக்குள்ளே ராட்சத குழாய்கள் பதித்து எடுத்து செல்ல அரசாணை பிறப்பித்து வேலைகள் முடிவடைந்து தற்போது தண்ணீர் எடுத்து செல்கின்றனர். வற்றாத ஜீவநதியின் கடைசி அணைக்கட்டு தற்போது இந்த ராட்சத மோட்டார்களால் வற்றி போய்விடுகிறது. விவசாயம் அடியோடு அழியும் அபாயத்தில் உள்ளது. நிலத்தடி நீரோட்டம் அடியோடு பாதிக்கப்படும் ஆபத்து காத்திருக்கிறது என்று அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை விவசாயிகள் சுமத்த ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் அவைகளை நோட்டு கட்டுகள் சரிசெய்தது. அன்று விவசாயிகள் ஏதோ தண்ணீர் எடுத்து செல்ல குழாய்கள் பதிக்கிறார்கள் என்று நினைத்துவிட்டு விட்டனர். மோட்டாரின் ஸ்விட்சை தட்டியதும் அணையில் தண்ணீர் தினமும் வற்றதொடங்கியதும் விவசாயிகளின் கண்களில் கண்ணீர் பொங்க தொடங்கியது. அணைக்கட்டுகள் விவசாயத்திற்கு கட்டப்பட்டதா? தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க கட்டப்பட்டதா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தற்போது அணைக்கட்டிலே நேரடியாக தண்ணீர் உறிஞ்சபட்டு அணை வற்றும் அபாய நிலைக்குவந்த போதுதான் இதன் பேரபாயத்தை விவசாயிகள் உணரத்துவங்கி உள்ளனர்.



தவிர்க்க முடியாத போராட்டம் ஆரம்பம் : இதனால் தொடர் போராட்டங்கள் உருவெடுத்துள்ளது. தண்ணீரின் வரத்து அணைக்கு குறைவாக உள்ள போது இதுபோன்ற விவசாயத்தை அழிக்கும் திட்டத்திற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதுதான் சாலச்சிறந்தது. ஆனால் அரசின் பொதுப்பணித்துறையோ, குடிநீர் வடிகால் வாரியமோ இதனை சட்டை செய்வதாக தெரியவில்லை. கடந்த மாதம் மா.கம்யூ., மற்றும் விவசாயிகள் குழுக்கள் இணைந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்திய போராட்டத்தின் விளைவால் ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்தில் ஒருமோட்டாரை மட்டும் 15 நாட்கள் இயக்குவது என தீர்மானிக்கப்பட்டது. இரண்டு மூன்று நாட்கள் கூட முடியவில்லை விதிமுறை, ஒப்பந்தத்தை மீறி இரண்டு ராட்சத மோட்டாரும் ஸ்ரீவைகுண்டம் பம்பிங் ஸ்டேஷனில் இயக்கப்பட்டது. இதுகுறித்து கம்யூ., கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் நேரடியாக பார்வையிட்டு சென்றார். பின்னர் அவர் கூறியதாவது, அரசு மக்கள் விரோத போக்கை செய்கிறது. அதிகாரிகள் மக்கள் முன்பு செய்த ஒப்பந்தத்தை, படித்தவர்கள் மீறினால் மக்கள் பெரும் போராட்டத்தை வேறுவிதமாக நடத்த வேண்டி வரும் என்று எச்சரித்தார். தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு குழு தலைவர் நயினார் குலசேகரன் கூறுகையில், இதுபோன்ற விவசாய விரோத போக்கை தொடர்ந்து அரசுதுறை அதிகாரிகள் செய்து கொண்டு இருக்கின்றனர். அரசு அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் நடக்கும் இந்த இடைவெளி வெளியுத்தம் அரசுக்கு தெரியவில்லை எனவே அமைச்சர்கள், முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு விவசாய விரோத போக்கையே தன் தலையாய கொள்கையாக கொண்ட இந்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என கூறினார்.



மா.கம்யூ., கட்சி ஒன்றிய செயலாளரும் விவசாயிகளின் போராட்ட குழுவில் உறுப்பினருமான கந்தசாமி கூறுகையில் அரசு செய்யும் இந்த விதமான மக்கள், விவசாயிகள் விரோத போக்கு கண்டிக்க தக்கது. விவசாயிகள் பலலட்சம் பேர் நலிவடைந்துள்ளனர். வருங்காலங்களில் வற்றாத ஜீவநதியினை தாமிரபரணி 20 எம்ஜிடி திட்டத்தால் ஓடையாக மாறிவிட கூடும் என்ற அச்ச உணர்வு தற்போது ஏற்பட்டுள்ளது. என கூறினார். பா.ஜ.க., கோட்ட பொறுப்பாளர் ராஜா கூறுகையில் அணைக்கட்டை தூர்வாற சென்றால் வனத்துறை தடை செய்கிறது. விவசாயத்திற்கு தண்ணீர் என்று பார்த்தால் குடிநீர் வடிகால் வாரியம் தடை செய்கிறது.



இதுபோன்ற அரசு துறைகளுக்குள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் நலன் கருதியே திட்டங்கள் தீட்டப்படவேண்டுமே தவிர தனியார் கம்பெனிகளின் நலன் கருதி செயல்படக்கூடாது என கூறினார். மதிமுக., ஒன்றிய செயலாளர் ராசகோபால் கூறியபோது விவசாயம்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று ஏட்டளவில் கூறினால் போதாது விவசாயத்திற்கு தேவையான நீர் பங்கீடு போன்ற விஷயங்களில் அரசு கருத்துடன் செயல்பட்டு விவசாயத்தையும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் ஆவண செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் முதுகெலும்பு என்று ஏட்டில் எழுதி பேசுவதற்கு பொறுத்தமாகவும், பெயரளவில் செயல்படுவது விவசாயிகளை மீண்டும் மீண்டும் வேதனைக்குள்ளாக்கும் செயலாகும் என கூறினார். தனித்தமிழர் சேனை மாநில கொள்கைபரப்பு செயலாளர் பேரூர் அன்பழகன் கூறுகையில் வலுத்தவன் வாழ்வான் என்பது போல அவரவர் அரசியல் பலத்திற்கு தகுத்தாற் போல பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டியது அரசின் தலையாய கடமையாகும் என கூறினார். சமத்துவ மக்கள் கட்சி நகர பொருளாளர் காளியப்பன் கூறியதாவது, தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டியது அவசியமானாலும், குடிநீர், விவசாயம் என்பது அதை விட இன்றியமையாதது. அதற்குதான் முக்கியத்துவம் வழங்க வேண்டும். தவிர தொழிற்சாலைகளுக்கு மாற்று ஏற்பாட்டை அரசு செய்து கொடுக்க வேண்டும் என கூறினார்.



பாமக., மாநில கொள்கை விளக்க அணி தலைவர் ஆழ்வை வியனரசு கூறுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 46 ஆயிரம் ஏக்கர் விவசாயம் இந்த 20 எம்ஜிடி திட்டத்தால் பாதிக்கப்படும் என்று சொன்னால் அந்த திட்டத்தை தகர்த்தெறிய வேண்டும். விவசாயிகளின் வாழ்வை அழிக்கும் எந்த திட்டத்தையும் அரசு செய்யக் கூடாது என கூறினார்.

தேமுதிக., நகர செயலாளர் சின்னத்தம்பி கூறுகையில் குடிநீர் ஆதாரம் மிகவும் இன்றியமையாதது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு சுமார் 4 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாக உள்ளது. இதில் உள்ள 20 எம்ஜிடி கிணறு ஒரே அடியாக அனைத்தையும் உறிஞ்சு கொண்டு சென்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூர், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆழ்வார்திருநகரி, சாயர்புரம் மற்றும் அனைத்து பகுதிகளும் குடிநீர் இன்றி வாடும் அவல நிலை எதிர்காலத்தில் ஏற்படும் என்பது நிதர்சன உண்மை என்றார். இவ்வாறு அரசியல் கட்சிகள், விவசாய பிரதிநிதிகள் ஒருபுறம் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.



அரசு என்ன செய்யலாம்... : அரசின் திட்டமான 20 எம்ஜிடி திட்டத்தின் மூலம் நாள் 1க்கு 20 மில்லியன் காலன் தண்ணீர் வழங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து மாற்ற வேண்டும். ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேல்பகுதியில் நேரடியாக தண்ணீர் எடுப்பதை தவிர்த்து அணைக்கு கிழக்கே தடுப்பணை கட்டி அங்கிருந்து நீர் உறிஞ்ச வேண்டும். இதுவரை தரவேண்டிய 73 கோடி ரூபாய் பாக்கி தொகையை வசூல் செய்து தாமிரபரணி பாசனத்தில் தூர்ந்து போன மாவட்ட குளங்கள், அணைக்கட்டுகளை தூர்வாற வேண்டும். தடுப்பணையில் கூட மழைகாலங்களில் கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை மாற்று ஏற்பாடுகள் மூலம் ராட்சத குழாய்கள் அமைத்து அணைக்கு கிழக்கே தண்ணீரை திருப்பி தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகள், பெரியகுளங்கள் அமைத்து சேகரித்து வைத்து கொள்ளுதல் நல்லது. வெள்ள காலங்களில் கடலுக்கு அதிகமான தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் மழை காலங்களில் கடலுக்கு வீணாக போகும் தண்ணீரின் அளவை குறைக்கலாம். சென்னை நகரத்தை போல கடல்நீரை குடிநீராக மாற்றி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோன்ற பல மாற்று திட்டங்கள் இருக்கும் போது தொடர்ந்து அதிகாரிகள் மாற்று திட்டங்களை பரிசீலனை செய்யாமல் விவசாயிகளின் வாழ்க்கையிலே விளையாடுவது சரிதானா... சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து.. விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றுவார்களா..









      Our Apps Available On




      Dinamalar

      Follow us