ADDED : அக் 05, 2011 02:11 AM
குறிச்சி : ''மக்களிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றம், வரும் உள்ளாட்சி தேர்தலில்
எதிரொலிக்கும்,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ பேசினார். கோவை
மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அர்ஜுனராஜ், 95வது வார்டு
வேட்பாளர் வினோதினி, 96வது வார்டு வேட்பாளர் தமிழ்செல்வன், 97வது வார்டு
வேட்பாளர் செல்வராஜ் ஆகியோருக்கு ஓட்டு சேகரித்து, ம.தி.மு.க., பொதுச்
செயலாளர் வைகோ, சுந்தராபுரத்தை அடுத்த காமராஜ் நகரில் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின்போது வைகோ பேசியதாவது: கழகத்தின் சார்பில் மேயருக்கு
போட்டியிடும் அர்ஜுனராஜ், சாதி, மதம், சொந்தம், பந்தங்களை பாராது
கட்சிக்காக பாடுபடுபவர். சோதனையான காலத்திலும், வேறு கட்சிக்கு செல்லாதவர்.
கட்சியினை அழிக்க, கேடுகள் பல செய்ய முன்னாள் முதல்வர் முயன்றார்;
கட்சியினை வளர்த்தோம். தற்போது எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊழலை
ஒழிக்க ம.தி.மு.க., பாடுபடுகிறது. கடந்த 1968லிருந்து எனது குரல் ஒலித்து
கொண்டே இருக்கிறது; நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போதுதான், எனது குரல்
ஒலிக்கவில்லை. ஆனால் ஓய்வெடுக்காமல், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி,
ஸ்டெர்லைட் ஆலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, உடனிருந்தேன். தமிழகத்தின்
நலனுக்காக, பாலாற்றின் குறுக்கே அணை கட்டகூடாது. அமராவதி நீரை மறிக்க
கூடாது என கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. மக்கள் மாற்றத்தை
விரும்பியதால், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டனர். தற்போது விலைவாசி
கடுமையாக உயர்ந்துள்ளது. கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. மணல்
கொள்ளை தாராளமாக நடக்கிறது. தி.மு.க., தலைவர் தனது குடும்பத்துக்காக
பாடுபட்டார்; தற்போது முகவரி மட்டுமே மாறியுள்ளது; அதே நிலைதான் உள்ளது.
ஆட்சியில் அமர்ந்தவுடன், பெற்றோரின் எதிர்ப்புக்கு ஆளாகும் விதத்தில்,
ஐகோர்ட் உத்தரவிட்டும், சமச்சீர் கல்விக்கு எதிராக செயல்பட்டனர்.
குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது; 200 கோடி ரூபாய் மதிப்பிலான
புத்தகங்கள் வீணாகின. தற்போது மக்களிடையே மீண்டும் மனமாற்றம்
ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ம.தி.மு.க.,வுக்கு இளைய சமுதாயத்திடம் ஆதரவு
அதிகரித்து வருகிறது.
நேர்மையான, ஊழலற்ற நிர்வாகம் அமைய, மாநகராட்சியின் மேயராக கட்சியின்
வேட்பாளர் அர்ஜுனராஜுவையும், கவுன்சிலர்களாக செல்வராஜ், வினோதினி,
தமிழ்செல்வன் ஆகியோரையும் வெற்றி பெறச் செய்யவேண்டும். இவ்வாறு, வைகோ
பேசினார். தொடர்ந்து உக்கடம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். உடன் தெற்கு
புறநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார்
உள்பட பலர் பங்கேற்றனர்.


