ஒரே குடும்பத்திற்கு பல சீட்; திருவள்ளூர் அ.தி.மு.க.,வில் கடும் அதிருப்தி
ஒரே குடும்பத்திற்கு பல சீட்; திருவள்ளூர் அ.தி.மு.க.,வில் கடும் அதிருப்தி
ஒரே குடும்பத்திற்கு பல சீட்; திருவள்ளூர் அ.தி.மு.க.,வில் கடும் அதிருப்தி
திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில், அ.தி.மு.க., சார்பாக போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் சிலர் மீது, அக்கட்சியினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இது குறித்து கட்சி மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: கடம்பத்தூர் ஒன்றிய செயலராக இருந்த வலசை சந்திரசேகர், நில அபகரிப்பு புகாரில் சிக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போராட்டம் எழுந்ததும், பா.ம.க., தலைவர் ஜி.கே.மணியின் சம்பந்தியானார். போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்ததும், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு, அவரது மனைவி பத்மாவதி சந்திரசேகருக்கு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில் திருமழிசை பேரூராட்சித் தலைவராக இருந்த ஹேமாவதி ஏழுமலை, பதவியில் இருந்த வரைக்கும் அ.தி.மு.க., தொண்டர்களை மதிக்கவில்லை. அ.தி.மு.க., கூட்டம் எதிலும் கலந்து கொள்வதில்லை. மீண்டும் அவருக்கே சீட் வழங்கப்பட்டுள்ளது. திருத்தணி ஒன்றிய குழு தலைவராக ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக அவரது மனைவி போட்டியிடுகின்றனர். திருத்தணி நகராட்சித் தலைவர் பதவிக்கு சவுந்தராஜனும், கவுன்சிலர் பதவிக்கு அவரது உறவினரும் போட்டியிடுகின்றனர். இப்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு, சீட் கிடைத்துள்ளது. காங்., கட்சியைச் சேர்ந்த முனிநாகம்மாள் என்பவர், பள்ளிப்பட்டு பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட சீட்டு வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்காக உழைத்தவர்கள், நீண்ட நாட்களாக கட்சியில் இருப்பவர்களுக்கு, சீட்டு வழங்காமல், மாற்று கட்சியினருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும், ஒரே குடும்பத்தில் பலருக்கும் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலரின் குளறுபடியே இதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
'மாஜி'க்கள் புறக்கணிப்பு: முன்னாள் எம்.எல். ஏ.,க்களாக இருந்த திருத்தணி அரி, சிருணியம் பலராமன், கும்மிடிப்பூண்டி விஜயகுமாரின் ஆதரவாளர்கள் யாருக்கும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. தாங்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளாக அவர்கள் கருதுகின்றனர். இது குறித்து, தலைமைக்கும் அவர்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -