அனைவருக்கும் திருப்தியளிக்கும் தொழில் கொள்கை
அனைவருக்கும் திருப்தியளிக்கும் தொழில் கொள்கை
அனைவருக்கும் திருப்தியளிக்கும் தொழில் கொள்கை
ADDED : செப் 20, 2011 06:20 PM

சென்னை: 'தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க, நிலம் கையகப்படுத்தும் முறையில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில், அனைத்து தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது'' என, தொழில்துறை அமைச்சர் வேலுமணி கூறினார்.
'தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் 2025ம் ஆண்டை எதிர்நோக்கி' என்ற தலைப்பிலான, தொழில் நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் நடந்தது. கூடுதல் தலைமைச் செயலர் சூசன் மேத்யூ வரவேற்றுப் பேசுகையில், 'முதல்வர் ஜெயலலிதா அறிவித்த,'விஷன் 2025 டாக்குமென்ட்' வெகு விரைவில் வெளியிடப்பட உள்ளது. தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, டாக்குமென்ட் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இந்த புதிய கொள்கையின் மூலம், தொழில் வளர்ச்சியில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக விளங்கும்' என்றார்.
தொழில்துறை அமைச்சர் வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூறியதாவது: தமிழகம் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக, 'விஷன் 2025' திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தனியார் முதலீடுகளை அதிகம் கவரும் வகையில், தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, தொழிற்சாலைகள் அமைக்க நிலம் எடுக்கும் விஷயத்தில், சில சிக்கல்கள் உள்ளன. இப்பிரச்னையில் அனைத்து தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் வகையில், புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் முதலீடு மேலும் அதிகரிக்கும். 'விஷன் 2025' திட்டத்தின் படி, தமிழகத்தில் எரிசக்தி, துறைமுகங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, தனியார் முதலீடு செய்ய விரும்பும் மாநிலமாக தமிழகம் மாறும். இவ்வாறு வேலுமணி கூறினார்.
தொழில் துறை முதன்மை செயலர் சுந்தரதேவன் மற்றும் பலர், இதில் கலந்து கொண்டனர்.