ஒரே ஆண்டில் 14,464 குழந்தை தொழிலாளர் மீட்பு : சிறப்பு பள்ளிகளில் சேர்ப்பு
ஒரே ஆண்டில் 14,464 குழந்தை தொழிலாளர் மீட்பு : சிறப்பு பள்ளிகளில் சேர்ப்பு
ஒரே ஆண்டில் 14,464 குழந்தை தொழிலாளர் மீட்பு : சிறப்பு பள்ளிகளில் சேர்ப்பு
ADDED : செப் 14, 2011 01:00 AM

சென்னை :தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை, படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும், 14 ஆயிரத்து, 464 குழந்தைகள் மீட்கப்பட்டு, சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 4.19 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பள்ளி செல்லாத குழந்தைகளுக்காக தமிழக அரசு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தை துவக்கியது. குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். 2003ம் ஆண்டு கணக்கெடுப்பில், குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை 70,344 ஆக குறைந்தது.தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்த குழந்தைத் தொழிலாளர்கள், சட்ட ரீதியாக மீட்கப்பட்டு, நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பயனாக, குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை, வெகுவாக குறைந்தது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பில், குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை, 28,410 ஆக குறைந்துள்ளது.கடந்த நிதியாண்டில் மட்டும், குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் படையினர், 1.84 லட்சம் நிறுவனங்களில் ஆய்வு நடத்தி, 3.32 லட்ச ரூபாய் அபராதத் தொகை வசூலித்துள்ளனர். மொத்தம் 14,464 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, 334 சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலம் என்ற இலக்கை அடையும் வகையில், பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என, தொழிலாளர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், அரசு தெரிவித்துள்ளது.