விதிமீறலை கண்டித்த போலீஸ் மீது தாக்குதல் : மதுரையில் துப்பாக்கிச்சூடு : இருவர் காயம்
விதிமீறலை கண்டித்த போலீஸ் மீது தாக்குதல் : மதுரையில் துப்பாக்கிச்சூடு : இருவர் காயம்
விதிமீறலை கண்டித்த போலீஸ் மீது தாக்குதல் : மதுரையில் துப்பாக்கிச்சூடு : இருவர் காயம்
ADDED : செப் 11, 2011 11:23 PM

மதுரை: மதுரையில் சரக்கு லாரியில் பரமக்குடி செல்ல முயன்றவர்களை தடுத்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் சுட்டதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமுற்ற கும்பல் பஸ், லாரிகளை சேதப்படுத்தியது. பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த நேற்று, மதுரை பொட்டப்பாளையம் அருகே பாட்டத்தைச் சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் 60 பேர் சரக்கு லாரியில் சென்றனர். இவர்களுடன் 3 வேன்களில் 40க்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்தனர். திருப்புவனம் வழியாக செல்வதுதான் இவர்களுக்கு எளிய வழி. ஆனால், ரிங் ரோடு வழியாக செல்ல சிந்தாமணி போலீஸ் அவுட்போஸ்ட்டிற்கு சென்றனர். அங்கு, அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மற்றும் 15 போலீசார் நின்றனர்.
போலீஸ் மீது தாக்குதல் : 'திறந்த வாகனத்தில் செல்வது விதி மீறல்' என போலீஸ் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், 3 வேன்களை மட்டும் செல்ல அனுமதித்தனர். அவர்கள் சில அடி தூரம் சென்று திடீர் மறியலில் ஈடுபட, போக்கு
வரத்து பாதித்தது. அவர்களை கலைந்து செல்லுமாறு கூறிய போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ரோட்டோர மரக்கிளைகளை உடைத்து பெண் போலீஸ் காளியம்மாள் முதுகில் தாக்கினர். தடுத்த இன்ஸ்பெக்டர் கஜேந்திரனின் தலையிலும், சிறப்பு எஸ்.ஐ., சண்முகத்தின் வலது கையிலும் தாக்கினர். பின், 5 அரசு, தனியார் பஸ்கள், 3 லாரிகள், ஒரு கார் கண்ணாடியை கல்வீசி சேதப்படுத்தினர்.
துப்பாக்கிச்சூடு : இதைதொடர்ந்து, கஜேந்திரன் கைத்துப்பாக்கியால் இருமுறை சுட்டதில், பாட்டத்தை சேர்ந்த ஜெயபிரசாந்த்,19, க்கு வலது கை, விலா பின்பகுதியிலும், பாலகிருஷ்ணன், 19,க்கு வலது நெஞ்சிலும் குண்டு பாய்ந்தது. அங்கு சென்ற எஸ்.பி. ஆஸ்ரா கர்க்கையும் அக்கும்பல் தாக்க முயன்றதால், தடியடி நடத்தி கலைக்கப்பட்டது.
குண்டடிப்பட்ட இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். காயமுற்ற போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெறுகின்றனர். சம்பவ இடத்தை கலெக்டர் சகாயம், டி.ஆர்.ஓ., முருகேஷ் பார்வையிட்டனர்.
15 பஸ்கள் சேதம் : கலெக்டர் கூறுகையில், ''மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடக்கிறது,'' என்றார்.
எஸ்.பி., ஆஸ்ரா கர்க் கூறுகையில், ''அவரவர் பாதையில் சென்றிருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. தோப்பூர், சிந்தாமணியில் 15 அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன,'' என்றார். தாக்குதல் தொடர்பாக, பாட்டத்தை சேர்ந்த முனீஷ், 29, சந்திரசேகரன், அய்யனார், பாலா, வேல்மணி, சுந்தர்,18, சுதாகர், மோகன், மண்ணாடிமங்கலம் ரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டனர்.
ஆஸ்பத்திரியில் முற்றுகை : மதுரை அரசு ஆஸ்பத்திரியில் காயமுற்றவர்களை விசாரித்துவிட்டு, வார்டு எண் 99 லிருந்து கலெக்டர் சகாயம் வெளியே வந்தார். அப்போது அவரை உறவினர்கள் முற்றுகையிட்டு, 'உங்கள் அனுமதி இன்றி போலீசார் எப்படி சுடலாம்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமரசம் செய்தவாறு, காரில் கலெக்டர் ஏறினார். 'முடிவு தெரியாமல் செல்லவிட மாட்டோம்' என்றுக்கூறி, கார் முன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 'கலெக்டர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்' என சக உறவினர்கள் சமரசம் செய்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.