சரக்கு ரயிலில் அடிபட்டு கண்டமானது கோதுமை லாரி
சரக்கு ரயிலில் அடிபட்டு கண்டமானது கோதுமை லாரி
சரக்கு ரயிலில் அடிபட்டு கண்டமானது கோதுமை லாரி
ADDED : ஆக 29, 2011 10:49 PM

சென்னை : ராயபுரம் ரயில் நிலையம் அருகே, பின்னோக்கிச் சென்ற சரக்கு ரயிலில், கோதுமை ஏற்றி வந்த லாரி சிக்கி சின்னாபின்னமானது. லாரி டிரைவர் கண்ணிமைக்கும் நேரத்தில் குதித்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சென்னை ராயபுரம் ரயில் நிலையம் துறைமுகத்தை ஒட்டியுள்ளதால், சரக்கு ரயில்கள் அதிகம் வந்து செல்கின்றன. ராயபுரம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள எண்ணெய் நிறுவனத்தில், எண்ணெய் நிரப்புவதற்காக காலி வேகன்களுடன் கூடிய சரக்கு ரயில், வண்ணாரப்பேட்டையிலிருந்து ராயபுரம் ரயில் நிலையம் நோக்கி, பின்னோக்கி வந்து கொண்டிருந்தது.புதிய பிரதான டிராக்கில் ரயில் வந்தது. ராயபுரம் யார்டு பகுதியிலிருந்து, 200 கோதுமை மூட்டைகள் ஏற்றிக் கொண்டு, அவ்வழியே வேகமாக வந்த லாரி, ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடக்க வேகமாக வந்தது. அங்கு நின்ற ஊழியர்கள் சத்தம் போட்டதும், லாரி டிரைவர் கீழே குதிக்க, லாரி டிராக்கைக் கடந்தது. எண்ணெய் வேகனுடன் வந்த ரயில், லாரியில் மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி சின்னாபின்னமாகி, இரும்புத் துண்டுகளாக மாறியது. கோதுமை மூட்டைகள், அந்தப் பகுதி முழுவதும் பரவிக் கிடந்தன. அதிர்ஷ்டவசமாகத் தப்பிய லாரி டிரைவர் முருகன் தலைமறைவாகி விட்டார். மீட்பு இன்ஜின் உதவியுடன், இரு எண்ணெய் வேகன்கள் கழற்றி விடப்பட்டு, ரயில் புறப்பட்டுச் சென்றது. விபத்து குறித்து, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.