/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/2 ஆண்டுகள் முடிந்தும் இன்னும் பாலத்தை ஒப்படைக்கவில்லை2 ஆண்டுகள் முடிந்தும் இன்னும் பாலத்தை ஒப்படைக்கவில்லை
2 ஆண்டுகள் முடிந்தும் இன்னும் பாலத்தை ஒப்படைக்கவில்லை
2 ஆண்டுகள் முடிந்தும் இன்னும் பாலத்தை ஒப்படைக்கவில்லை
2 ஆண்டுகள் முடிந்தும் இன்னும் பாலத்தை ஒப்படைக்கவில்லை
தூத்துக்குடி:தூத்துக்குடி 3ம் கேட் மேம்பாலம் திறந்து இரண்டு ஆண்டுகள் முடிந்தும் இன்னும் நெடுஞ்சாலைத்துறை மாநகராட்சியிடம் பாலத்தை ஒப்படைக்காததால் அதனை பராமரிக்க முடியாமல் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி 3ம் கேட் ரயில்வே மேம்பாலம் நீண்ட கால இழுபறிக்கு பிறகு கட்டி முடிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த மேம்பாலத்தின் வழியாக சென்று கொண்டிருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தில் உள்ள மின் விளக்குகள் அடிக்கடி எரியாமல் போய்விடுகிறது.
நெடுஞ்சாலைத்துறை திருநெல்வேலி திட்டங்கள் வட்டம் (புராஜெக்ட் சர்கிள்) மூலம் மூன்றாம் கேட் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.கட்டி முடிக்கப்பட்ட பாலத்திற்கு திறப்பு விழா அன்று இந்த துறையினர் வந்தனர். அதன் பிறகு அவர்கள் இந்த பாலத்தை பற்றி கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் முறைப்படி சம்பந்தப்பட்ட துறையிடமும் அவர்கள் ஒப்படைக்காததால் தான் தற்போது பிரச்னை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக பாலங்கள் கட்டும் பணியினை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் வட்டம் பிரிவு கட்டி முடித்தவுடன் அந்த பாலம் எந்த பகுதியில் உள்ளதோ அந்த பகுதியில் உள்ள அரசுத்துறையிடம் ஒப்படைத்துவிடும். அதன்படி மூன்றாம் கேட் மேம்பாலத்தை தூத்துக்குடி மாநகராட்சியிடம் நெடுஞ்சாலைத்துறை ஒப்படைக்க வேண்டும். ஆனால் இன்னும் நெடுஞ்சாலைத்துறை அதனை ஒப்படைக்கவில்லை. இதனால் பாலத்தில் எந்த சிறிய பராமரிப்பை கூட மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட முடியாத நிலை உள்ளது.
அப்படி பராமரிப்பு செய்தால் அதற்கு ஆகும் செலவினத்தை மாநகராட்சி செலவழித்ததால் தணிக்கை தடை (ஆடிட் அப்ஜெக்சன்) வந்துவிடும். மாநகராட்சிக்கு வராத சொத்துக்களுக்கு ஏன் செலவு செய்யப்பட்டது என்று கூறி, அந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வசூல் செய்ய வேண்டும் என்று ஆடிட்டில் எழுதி விடுவார்கள்.இதனால் இதில் சிறிய பராமரிப்பு பணியை கூட மேற்கொள்ள முடியாமல் மாநகராட்சி திணறி வருவதாக மாநகராட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மேம்பாலத்தில் உள்ள தெருவிளக்குகள் திடீர், திடீர் என்று எரியாமல் போய்விடுகிறது. தெருவிளக்குகள் மேம்பாலத்தில் அடிக்கடி எரியாமல் போவதால் இரவில் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், சில நேரங்களில் விபத்துஏற்படுவதால். மக்கள் கடும் சோதனைக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மாநகராட்சி மீது மக்கள் அதிருப்தியடைந்தனர்.
மாநகராட்சி சார்பிலும் நெடுஞ்சாலைத்துறைக்கு பாலத்தை ஒப்படைப்பு செய்யுமாறு பல முறை கேட்டும் அவர்கள் அதனைப்பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பதாக மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் மாநகராட்சி சார்பில் நெடுஞ்சாலைத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் உடனடியாக லைட்டுகளை சரி செய்ய வேண்டும். இதனால் பாலத்தை எங்களிடம் ஒப்படைக்குமாறு அதில் கூறப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நெடுஞ்சாலைத்துறையில் இருந்து பாலத்தில் லைட்டுகள் அமைத்தது எங்கள் துறை அல்ல. பொதுப்பணித்துறையில் உள்ள எலக்டிரிக்கல் பிரிவு என்று தெரிவிக்கப் பட்டது.
இந்த பதிலால் அதிர்ச்சியடைந்த மாநகராட்சி தங்கள் துறை உயர் அதிகாரிகளிடம் பேசி மேம்பாலத்தில் உள்ள எரியாத பியூஸ் போய் உள்ள மெர்குரி லைட்டுகளை முழுமையாக மாற்றும் வகையில் சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் வரை செலவு செய்து அதனை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெடுஞ்சாலைத்துறை உடனடியாக 3ம் கேட் மேம்பாலத்தை தூத்துக்குடி மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷீ ஷ்குமார் இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவாக 3ம் கேட் மேம்பாலத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.