Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான நிதி உதவி 3 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு

விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான நிதி உதவி 3 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு

விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான நிதி உதவி 3 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு

விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான நிதி உதவி 3 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு

ADDED : ஆக 05, 2011 02:36 AM


Google News

சென்னை : விலங்குகளால் ஏற்படும், மனித உயிரிழப்புகளுக்கான நிதியுதவியை, மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது: மக்கள் தொகை பெருக்கத்தாலும், தொழில்மயமாக்கலாலும், விலங்குகளின் இயற்கை வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன.

இதன் விளைவாக வன விலங்குகள் அடிக்கடி, காடுகளை விட்டு வெளியேறி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைவதால், மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். விலங்குகளின் வாழ்விடங்களை மேம்படுத்துவது, அவை விரும்பி உண்ணும் பயிர்களை காட்டுப் பகுதிகளிலேயே வளர்ப்பது, காடுகளின் எல்லை ஓரமாக தடைகளை அமைப்பது, மனித உயிருக்கும், விவசாயப் பயிர்களுக்கும், உடமைகளுக்கும் விலங்குகளால் ஏற்படும் பாதிப்பிற்கு, உடனடியாக இழப்பீடு வழங்குவது போன்ற பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். இப்பணிகளுக்காக, முதல் கட்டமாக, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.



மனித உயிரிழப்பிற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை, ஒன்றரை லட்சம் ரூபாயிலிருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சுற்றுச்சூழலின் சமநிலையை நிலை நிறுத்த, நாம் சார்ந்திருக்கும் உயிர்ச்சூழல் அமைப்புகளை, முறையாக பாதுகாப்பது அவசியமாகிறது. பெருகி வரும் சதுப்பு நிலங்களையும் அதைச் சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை சீராக்கி பாதுகாக்க. விரிவானத் திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தும்.



முதன் முறையாகவோ அல்லது மறுசுழற்சி மூலமோ தயாரிக்கப்படும், 60 மைக்ரானுக்குத் குறைவான பாலிதீன் பைகளுக்கு, தடை விதிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளைத் திரட்டி, சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதையும், அதனை முறையாக அகற்றுவதையும், மாநிலம் தழுவிய ஒரு மக்கள் இயக்கமாக மேற்கொள்ள, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக, சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி, சோதனை அடிப்படையில், சாலைகள் அமைப்பதற்காக, 50 கோடி ரூபாய் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சோதனை முறையில் சாலைகள் அமைக்க, இத்தகைய பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இந்த நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us