"அட்டாக்' பாண்டியை போலீஸ்காவலில் விட கோரிய மனு:மாஜிஸ்திரேட் தள்ளுபடி
"அட்டாக்' பாண்டியை போலீஸ்காவலில் விட கோரிய மனு:மாஜிஸ்திரேட் தள்ளுபடி
"அட்டாக்' பாண்டியை போலீஸ்காவலில் விட கோரிய மனு:மாஜிஸ்திரேட் தள்ளுபடி
ADDED : ஜூலை 20, 2011 05:34 AM
மதுரை:மதுரையில், வீடு அபகரிப்பு புகாரில் கைதான தி.மு.க.,வைச் சேர்ந்த விவசாய விற்பனைக் குழு முன்னாள் தலைவர் 'அட்டாக்' பாண்டி உட்பட மூவரை பத்து நாட்கள் போலீஸ் காவலில் விடக் கோரிய மனுவை முதலாவது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் முத்துக்குமார் தள்ளுபடி செய்தார்.மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த ஈஸ்வரலால் மனைவி கல்பனா. இவரது கணவருக்குச் சொந்தமான, மகால் அருகேவுள்ள ரூ.ஒரு கோடி மதிப்புள்ள வீட்டை, போலி பத்திரம் தயாரித்து அபகரிக்க முயன்றதாக மாரிமுத்து, அவரது மைத்துனர் 'அட்டாக்' பாண்டி, தி.மு.க., மாணவரணி துணைச் செயலர் திருச்செல்வத்தை, போலீசார் கைது செய்தனர். மூவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
'அட்டாக்' ஆஜர்:அவர்களை, பத்து நாட்கள் போலீஸ் காவலில் விடக் கோரி, இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தார். இதற்காக, திருச்சியில் இருந்து நேற்று பகல் 1.30 மணிக்கு 'அட்டாக்' பாண்டி உட்பட மூவர் அழைத்து வரப்பட்டனர். போலீஸ் மனு குறித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பரிசீலிக்க, மாஜிஸ்திரேட் முத்துக்குமார் அவகாசம் வழங்கினார்.பின், மாலையில் மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களைக் காவலில் விடக் கோரி இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் வாக்குமூலம் அளித்தார். மூவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமசாமி மற்றும் மணிகண்டன், ''ஏற்கனவே வீடு குறித்து முதன்மை மாவட்ட முன்சீப் கோர்ட்டில் இரு வழக்குகள் 2008 முதல் நிலுவையில் உள்ளன. சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கோர்ட்டில் உள்ளன. மனுதாரர்களிடம் ஆவணங்கள் இல்லை. விசாரிக்க ஒன்றுமில்லை,'' என்றனர். அரசு உதவி வழக்கறிஞர் ஆனந்தியிடமும் மாஜிஸ்திரேட் விசாரித்தார்.மனு தள்ளுபடி:இன்ஸ்பெக்டர் மனுவை தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட், '''அட்டாக்' பாண்டி உட்பட மூவரின் குற்ற ஈடுபாடு, வழக்கு விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள, மீண்டும் விசாரிக்க வேண்டியிருப்பதாக இன்ஸ்பெக்டர் பொதுவாக சாட்சியமளித்தார். என்ன விவரம் குறித்து அறிய வேண்டியது என, தெளிவுபடுத்தவில்லை. தங்களிடம் ஆவணங்கள் இல்லை என மூவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு சங்கதி, சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மூவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அரசுத் தரப்பு அனுமதி கோருவது ஏற்புடையதல்ல,'' என்றார்.இதையடுத்து, 'அட்டாக்' பாண்டி உட்பட மூவரும் திருச்சி சிறைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டனர்.
ஐகோர்ட் உத்தரவு: 'அட்டாக்' பாண்டி ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''அவனியாபுரத்தில் ஒரு நிலத்தை இருளாண்டியிடமிருந்து வாடகைக்குப் பெற்று அனுபவித்து வருகிறேன். அதை, சொந்தம் கொண்டாடி கருப்பசாமி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் புகாரின்படி, போலீசார் விசாரணை என தொந்தரவு செய்வர். போலீசார் தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும்,'' என கோரினார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் என்.சதீஷ்பாபு ஆஜரானார். நீதிபதி ஆர்.மாலா, ''விசாரணை என்ற பெயரில் போலீஸ் தொந்தரவு கூடாது,'' என உத்தரவிட்டார்.