Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ மனதை பட்டாம் பூச்சியாக்கும் பெங்களூரை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்

மனதை பட்டாம் பூச்சியாக்கும் பெங்களூரை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்

மனதை பட்டாம் பூச்சியாக்கும் பெங்களூரை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்

மனதை பட்டாம் பூச்சியாக்கும் பெங்களூரை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்

ADDED : மார் 27, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
கையில் வெண்ணெயை வைத்து கொண்டு, ஊர் முழுதும் நெய் தேடி அலைகிறார் என்ற பழமொழி ஒன்றுள்ளது. அது போன்று பெங்களூரு அருகிலேயே, அருமையான மலைப்பகுதிகள் இருந்தும், டிரெக்கிங் செய்ய இடம் தேடி அலைந்து, காலத்தை கடத்துகின்றனர்.

பெங்களூரில் வசிக்கும் பலரும், ஒருநாள் விடுமுறை கிடைத்தால் போதும், சுற்றுலா செல்ல பிளான் போடுவர். நகருக்கு அருகில் சுற்றுலா தலங்கள், மலை பிரதேசங்களை தேடுவர். இவர்களை வரவேற்க அற்புதமான இடங்கள் காத்திருக்கின்றன. இவைகள் ஒரே நாள் சுற்றுலாவுக்கு தகுதியான இடங்களாகும்.

சாவனதுர்கா


ராம்நகர் மாவட்டம், மாகடி தாலுகாவில் சாவனதுர்கா மலை உள்ளது. பெங்களூரில் இருந்து 60 கி.மீ., துாரம். சாகச பிரியர்களுக்காகவே உருவான இடம். கடல் மட்டத்தில் இருந்து 4,460 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலையில் அடர்த்தியான, இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதி உள்ளது.

இதன் அருகிலேயே அர்க்காவதி ஆறு, திப்பகொண்டனஹள்ளி அணை, மஞ்சனபெலே அணையை கண்டு ரசிக்கலாம். சாவனதுர்கா சுற்றுப்பகுதியில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்.

எப்படி செல்வது?


பெங்களூரின் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, மாகடி சென்று அங்கிருந்து வேறு பஸ்சில் சாவனதுர்காவை அடையலாம். அரசு, தனியார் பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. சொந்த வாகனத்தில் சென்றால் மேலும் வசதி.

சிவகங்கை


பெங்களூரு ரூரல் மாவட்டத்தில், சிவகங்கை மலை அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து 51.8 கி.மீ., துாரம். கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களில் இதுவும் ஒன்றாகும். டிரெக்கிங் பிரியர்களுக்கு ஏற்ற இடம். சிவகங்கை மலை கடல் மட்டத்தில் இருந்து, 1,380 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மலை அடிவாரத்தில் சிவாலயம், அதை தொடர்ந்து கங்காதரேஸ்வரர் கோவில்களை தரிசிக்கலாம். இங்குள்ள சிவலிங்கத்தின் மீது நெய்யை ஊற்றினால், வெண்ணெயாக மாறும் என்பது ஐதீகம். மலையில் சிறிய சுரங்கம் அமைந்துள்ளது. இதன் வழியாக சென்றால், ஸ்ரீரங்கபட்டணாவை அடையலாம்.

மலை மீது ஏறினால் ஒளகல்லு தீர்த்தம் என்ற இடம் உள்ளது. இங்கு ஆண்டின் 365 நாட்களும் தண்ணீர் கிடைக்கிறதாம். தொடர்ந்து மலை மீது ஏறினால், சிவ பார்வதி கோவில், நந்தி விக்ரகம் உள்ளது. இதை வலம் வருவது பெரிய சாகசம். மலை உச்சியில் கங்காதரேஸ்வரர் கோவிலை தரிசிக்கலாம். மலை உச்சியில் புராதன காலத்து வெள்ளி மணிகள் உள்ளன.

எப்படி செல்வது ?


பெங்களூரு - புனே தேசிய நெடுஞ்சாலையில் வரும் தாபஸ்பேட்டில் இருந்து 6 கி.மீ., தொலைவிலும், துமகூரில் இருந்து 20 கி.மீ., தொலைவிலும் சிவகங்கை உள்ளது. அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயில் போக்குவரத்தும் உள்ளது.

ஸ்கந்த கிரி


பெங்களூரில் இருந்து 60.9 கி.மீ., தொலைவில் ஸ்கந்த கிரி மலை உள்ளது. இது சிக்கபல்லாபூர் மாவட்டத்தின், இயற்கையின் மடியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடம். இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து, 4,429 அடி உயரத்தில் உள்ளது.

மலையில் திப்பு சுல்தான் கட்டிய கோட்டையை காணலாம். ஆங்கிலேயருக்கு எதிராக போராட இந்த கோட்டையை கட்டினாராம். இயற்கை ஆர்வலர்கள், சாகச பிரியர்களுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பல்லாரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை - 7ன் அருகில் ஸ்கந்த கிரி உள்ளது.

எப்படி செல்வது?


பெங்களூரு உட்பட முக்கிய நகரங்களில் இருந்து ஸ்கந்தகிரிக்கு செல்ல, ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ் வசதி உள்ளது. பஸ்சில் பயணித்து சிக்கபல்லாபூரில் இறங்க வேண்டும். அங்கிருந்து மற்றொரு பஸ்சில், மலைக்கு செல்லலாம். சிக்கபல்லாபூருக்கு ரயில்களும் உள்ளன. சொந்த வாகனத்தில் சென்றால் இன்னும் எளிது.

மலை மீது உள்ளூர் மக்கள், ஆம்லெட், குளிர்பானம், காபி, டீ உட்பட தேவையான உணவுகளை தயாரித்து விற்கின்றனர். அதிகாலை 5:00 மணிக்கு மலை உச்சிக்கு சென்றால், சூர்யோதயத்தை காணலாம்.

மந்தாரகிரி மலை


துமகூரு மாவட்டத்தில் மந்தாரகிரி மலை உள்ளது. இந்த மலை பெங்களூரில் இருந்து, 62 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு மயில் வடிவத்தில் வடிவத்தில் உள்ள ஜெயின் மந்திர் உள்ளது. இது 14ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாம். மலையில் மனதுக்கு இதமான அமைதியான சூழ்நிலை உள்ளது. சில மணி நேரம், இயற்கையை ரசித்தபடி இங்கு பொழுது போக்கினால், மன அழுத்தம் மாயமாகும்.

எப்படி செல்வது?


பெங்களூரில் இருந்து மந்தாரகிரிக்கு செல்ல, தரமான சாலை வசதி உள்ளது. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் அருகில் மைடாலா கீர் சரோவர், தேவராயனதுர்கா போக நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.

அந்தரகங்கா


கோலார் மாவட்டத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம் அந்தரகங்கா மலை. பெங்களூரில் இருந்து 68.4 கி.மீ., தொலைவிலும், கோலார் நகரில் இருந்து மூன்று கி.மீ., தொலைவிலும் உள்ளது.

கோலார் மாவட்டத்தில், கோலாரம்மன் கோவில், சோமேஸ்வரர், மார்க்கண்டேயர், கோடி லிங்கேஸ்வரா உட்பட, பல்வேறு கோவில்கள் உள்ளன. இம்மாவட்டம் தீர்த்த தலமாகவும் விளங்குகிறது.

எப்படி செல்வது?


அந்தரகங்கா மலை கோலார் நகரில் இருந்து வெறும் 4 கி.மீ., தொலைவிலும், பெங்களூரில் இருந்து 70 கி.மீ., தொலைவிலும் உள்ளது. பெங்களூரின் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து கோலாருக்கு நேரடி பஸ்கள் உள்ளன. ரயில்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கோலாரில் இறங்கி கால்நடையாகவே அந்தரகங்காவுக்கு செல்லலாம். சிறார்கள் உடன் வந்தால் ஆட்டோவில் செல்லலாம். 300 முதல் 500 படிகளில் ஏறினால், மலை உச்சியை அடையலாம்.

தேவராயன துர்கா


துமகூரு மாவட்டத்தில், தேவராயன துர்கா அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து 73.4 கி.மீ., தொலைவிலும், துமகூரில் இருந்து 16 கி.மீ., தொலைவிலும் உள்ளது. தினமும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இந்த மலையில் கண்களுக்கு, மனதுக்கு இதமளிக்கும் இயற்கை காட்சிகள் உள்ளன. மலையேற்றத்துக்கு தகுந்த இடம்.

பெங்களூரில் வசிக்கும் மக்கள், ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாகும். போக நரசிம்மர், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என, மூன்று பிரசித்தி பெற்ற கோவில்களை தரிசிக்கலாம்.

எப்படி செல்வது:


துமகூரு நகரில் இருந்து 15 கி.மீ., பெங்களூரில் இருந்து 73 கி.மீ., தொலைவில் தேவராயன துர்கா மலை அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து, தேவராயன துர்காவுக்கு அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயில் வசதியும் உள்ளது.

சொந்த வாகனங்களில் சென்றால், ஆங்காங்கே நின்று கோவில்கள், சுற்றுலா இடங்களை பார்த்த பின், பயணத்தை தொடர வசதியாக இருக்கும்.

தேவராயன துர்கா மலைக்கு செல்லும் வழியில், தரமான ஹோட்டல்கள், விடுதிகள் உள்ளன. தங்குவதற்கு பிரச்னை இல்லை. கோடைக்காலம் என்பதால் அதிகாலையிலேயே மலைக்கு செல்வது நல்லது.

மதுகிரி


துமகூரு மாவட்டத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில், மதுகிரி மலையும் ஒன்றாகும். பெங்களூரில் இருந்து 105.5 கி.மீ., தொலைவில் உள்ளது. பாவகடாவில் இருந்து, பல்லாரி வரை விரிவடைந்துள்ள மலையாகும். இந்த மலையும் சுற்றுலா பயணியரை ஈர்க்கும் இடமாகும்.

மலையேறவும், பரபரப்பான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, சிறிது நேரம் நிம்மதியாக பொழுது போக்கவும், மதுகிரி தகுதியான இடமாகும்.

----------- எப்படி செல்வது?


பெங்களூரில் இருந்து 110 கி.மீ., தொலைவில் மதுகிரி அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து துமகூரு வழியாக மதுகிரிக்கு வரலாம். அரசு, தனியார் பஸ்கள், வாடகை வாகனங்கள், ரயில் வசதி உள்ளன. வேறு நகரங்களில் இருந்து விமானத்தில் வருவோர், பெங்களூரு விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து சாலை வழியாக மதுகிரிக்கு வரலாம்.

மதுகிரி மலை கூர்மையான பாறைக்கற்களால் சூழப்பட்டது. டிரெக்கிங் செல்வோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடிநீர், தின்பண்டங்கள், குளுக்கோஸ் கொண்டு செல்வது நல்லது - நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us