/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ குளுகுளுவென பயணிக்க அழகிய சார்மாடி வனப்பகுதி சாலை குளுகுளுவென பயணிக்க அழகிய சார்மாடி வனப்பகுதி சாலை
குளுகுளுவென பயணிக்க அழகிய சார்மாடி வனப்பகுதி சாலை
குளுகுளுவென பயணிக்க அழகிய சார்மாடி வனப்பகுதி சாலை
குளுகுளுவென பயணிக்க அழகிய சார்மாடி வனப்பகுதி சாலை
ADDED : ஜூன் 19, 2025 03:37 AM

கர்நாடகாவில் வழக்கமாக ஏப்ரல் மாதம் துவங்கும் கோடை, இம்முறை மார்ச் இறுதியில் முன்கூட்டியே துவங்கியது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாநிலத்தில் கடும் வெயில் வெட்டி வதைத்தது. வெயில் முடிந்து எப்போது பருவமழை துவங்கும் என்று, மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
கோடையைப் போலவே பருவமழையும் இம்முறை முன்கூட்டியே துவங்கி உள்ளது. வழக்கமாக ஜூன் மாதத்தில் துவங்கும் பருவமழை இம்முறை மே 20ம் தேதியே துவங்கியது. தற்போது கடலோர, மலைநாடு மாவட்டங்களில் கனமழை பெய்கிறது.
இந்த கனமழையால் சிக்கமகளூரு மூடிகெரே கொட்டிகேஹாராவில் இருந்து, தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி வரை உள்ள சார்மாடி வனப்பகுதி சாலையில், பாறைகள் மீது திடீர் நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன.
இந்த வழியாக செல்பவர்கள் வாகனங்களை நிறுத்தி, நீர்வீழ்ச்சி முன் நின்று 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர்.
தற்போது சாலை முழுதும் மூடுபனியாக காட்சி அளிக்கிறது. மதியம் 12:00 மணி கூட அதிகாலை 4:00 மணியோ என்று எண்ணும் சூழ்நிலையில் உள்ளது. அந்த அளவுக்கு வனப்பகுதி சாலையில் கடும் பனி கொட்டுகிறது.
வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி, சுற்றுலா பயணியர் குளுகுளுவென இந்த சாலையில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த சாலையின் துாரம் 57 கி.மீ., ஆகும். சாலை முழுதும் பசுமையான புதர்கள், நீரோடைகள், நீர்வீழ்ச்சியை கொண்டது.
மாநிலத்தின் மற்ற வனப்பகுதி சாலைகளை ஒப்பிடும்போது, சார்மாடி வனப்பகுதி சாலை மிகவும் குறுகலானது. இதனால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டியது அவசியம்.
அடர்ந்த வனப்பகுதி சாலை என்பதால் அவ்வப்போது வனவிலங்குகள் சாலையில் வந்து நிற்கும். இது சுற்றுலா பயணியர் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கும்.
வெள்ளை அன்னம், பருந்து உள்ளிட்ட பறவை வகைகளையும் இங்கு காணலாம்.
பெங்களூரில் இருந்து சார்மாடி வனப்பகுதி சாலை 290 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து சிக்கமகளூரின் மூடிகெரே, கொட்டிகேஹாராவுக்கு, அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அந்த இரண்டு இடங்களுக்கும் சென்று, அங்கிருந்து வாடகை கார்களை எடுத்துக் கொண்டு இயற்கையின் அழகை கண்டு ரசிக்க செல்லலாம்.
சிக்கமகளூரில் இருந்து மங்களூரு செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் சென்றாலும், சார்மாடி வனப்பகுதியின் இயற்கை சுவாசத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும்
- நமது நிருபர் -.