Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ மலையேற்றத்துக்கு சிறந்தது மகாலிதுர்கா மலை

மலையேற்றத்துக்கு சிறந்தது மகாலிதுர்கா மலை

மலையேற்றத்துக்கு சிறந்தது மகாலிதுர்கா மலை

மலையேற்றத்துக்கு சிறந்தது மகாலிதுர்கா மலை

ADDED : மே 14, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
பெங்களூரில் ஐ.டி.,யில் பணிபுரியும் பலரும் வார விடுமுறை நாட்களை செலவழிக்க திட்டமிடுவர். இவர்கள் வித்தியாசமான இடங்களுக்கு சுற்றுலா செல்வதை விரும்புவர். அப்படி, ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் இடம் தான் மகாலிதுர்கா மலை.

பெங்களூரில் வசிக்கும் சாகசப்பிரியர்களுக்கு ஏற்ற இடம் தான் இந்த மகாலிதுர்கா மலை. பெங்களூரில் இருந்து 60 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.

பெங்களூரு ரூரல், தொட்டபல்லாபூருக்கு அருகில் உள்ளது மகாலிதுர்கா கிராமம். இந்த கிராமத்தில் தான் உள்ளது பிரம்மாண்டமான மகாலிதுர்கா மலை. இதன் மீது பழங்காலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய அளவிலான கோட்டை பாழடைந்த நிலையில் உள்ளது.

அங்கு ஒரு சின்ன சிவன் கோவிலும் உள்ளது. இந்த மலை தரைமட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் உள்ளது.

இந்த மலை கர்நாடக வனப்பகுதியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலைக்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் மலை ஏற்றத்திற்காக வருகை தருகின்றனர்.

இவர்களில் பலரும் பெங்களூரில் பணிபுரிபவர்களே. இந்த மலையேற்றம் அதிகம் ரிஸ்க் இல்லை. இதனால், மலையேறி பழக்கமில்லாதவர்கள் கூட வருகை தரலாம். புதியவர்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மலை மீது ஏறும்போது நிறைய, அழகான இடங்களை பார்க்கலாம். அதுவும் நண்பர்களுடன் இணைந்து ஏறும்போது, சுவாரஸ்யம் அதிகரிக்கும். மலையேற்றத்தின்போது ஷீ, டி ஷர்ட், டிராக் பேன்ட் போன்றவை அணிவது முக்கியம். மேலும், சன் ஸ்கிரீன், சன் கிளாசஸ், தண்ணீர், தின்பண்டங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.

அவசியம்


ஏனெனில், இங்கு அத்தியாவசிய பொருட்களுக்கான கடை எதுவும் இல்லை. இதனால், தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து வருவது அவசியம்.

இந்த மலை வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், ஒரு நபருக்கு 250 ரூபாய் கட்டணமாக வனத்துறையினர் வசூலிக்கின்றனர். இந்த பணம், மலை பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.இங்கு மலையேற காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

இரவில் மலையேற அனுமதி கிடையாது. முக்கியமாக, லைட்டர், சிகரெட், மது, பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

காலை நேரம் சிறந்தது


மலையேற விரும்புவோர் காலையிலே வந்து விடுவது சிறப்பு. அப்போது, தான் வெயிலிலிருந்து ஓரளவு தப்பிக்க முடியும்.

மலையேற்ற தூரம் மொத்தம் 4 கி.மீ.; மூன்று மணி நேரத்தில் மலையின் உச்சியை அடையலாம். அங்கு சென்றவுடன், நகரத்தின் அழகை பார்த்து ரசிக்கலாம்.

மலை உச்சியில் உள்ள சிவனை தரிசிக்கலாம். நீங்கள் கொண்டு செல்லும் உணவை, நண்பர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழலாம். ஆனால், மலையை அசுத்தம் செய்ய கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.

மலையின் அடிவாரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது.

எப்படி செல்வது?

ரயில்: பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் மகாலிதுர்கா ரயில் நிலையத்திற்கு செல்லவும். அங்கிருந்து சிறிது துாரம் நடந்து சென்று மலைக்கு செல்லலாம்.சாலை: இந்த பகுதியில் செல்வதற்கு சரியான பஸ் வசதி கிடையாது. எனவே, தங்கள் சொந்த வாகனங்களில் செல்வதே சிறந்தது.



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us