/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ சிறார்களுக்கு பிடித்தமான டைனோசர் பூங்கா சிறார்களுக்கு பிடித்தமான டைனோசர் பூங்கா
சிறார்களுக்கு பிடித்தமான டைனோசர் பூங்கா
சிறார்களுக்கு பிடித்தமான டைனோசர் பூங்கா
சிறார்களுக்கு பிடித்தமான டைனோசர் பூங்கா
ADDED : மே 28, 2025 11:09 PM

பெங்களூரு கெம்பே கவுடா நகர் நஞ்சாம்பா அக்ரஹாராவில் அமைந்து உள்ளது ஜிங்கே பூங்கா. பெங்களூரின் கான்கிரீட் கட்டடங்களுக்கு இடையே மறைந்திருக்கும் ரத்தினம்.
அகலமான நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தால், எகிப்தின் பிரபலான, 'கிரேட் ஸ்பிங்க்ஸ் ஆப் கிசா' சிலையை காணலாம். அதன் அருகில் நின்றும், முன் பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்தும் புகைப்படம் எடுத்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.
இடது புறமாக திரும்பி நடந்தால், இரு பக்கமும் அமர்ந்து ஓய்வெடுக்க கல் நாற்காலிகள் போடப்பட்டு உள்ளன. வலதுபுறம் காலை, மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வதற்கான நவீன திறந்தவெளி ஜிம் அமைக்கப்பட்டு உள்ளது.
அதை தொடர்ந்து நடந்தால், குழந்தைகள் விளையாடுவதற்கான அனைத்து விதமான சாதனங்களும் உள்ளன. அங்கிருந்து சென்றால், நகர் பகுதிகளில் நாம் பார்க்கும் பாலத்தின் மீது ரயில் போகும் போது, நாம் கீழ் பகுதியில் வாகனத்தில் கடந்து செல்வது போன்று, பொம்மை ரயில் வைத்துள்ளனர்.
அங்கிருந்து சென்றால், இளம் தலைமுறையினர் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் பேட்மின்டன் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் நாம் திரைப்படத்தில் பார்த்து பிரமித்த 'டைனோசர்'களை நம்மை மிரட்டும் வகையில் சிலைகளாக அமைத்து உள்ளனர். இதன் அருகில் கர்நாடகாவில் பிரபலமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மார்பளவு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு மிருகங்கள் அருகிலும் படிக்கட்டுகள் அமைத்து உள்ளனர். அதன் மீது நின்று புகைப்படம் எடுத்து கொள்ளலாம். இதற்கு எதிர் திசையில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அரங்கம் அமைத்து உள்ளனர். அதன் அருகில், குடிநீரை சுத்திரிகரிக்கும் மையம் அமைந்து உள்ளது.
குழந்தைகளுக்கு நாம் குடிக்கும் குடிநீர், எவ்வாறு நமக்கு சுத்தமாக வருகிறது என்பதை அவர்கள் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பூங்காவின் 50 படிக்கட்டுகள் ஏறி சென்றால், பசுமையான மரங்களை காணலாம். பூங்காவுக்கு பின்புறத்தில் பிரசித்தி பெற்ற கெம்பாம்புதி ஏரி அமைந்து உள்ளது.
மீண்டும் பூங்காவுக்குள் நுழைந்தால், விதவிதமான வகையில் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம். அதன் அருகில் இசை நிரூற்றும், அதை பார்ப்பதற்கான பார்வையாளர் பகுதியும் அமைக்கப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து நடந்து வந்தால், மீண்டும் ஆரம்பித்த இடமான நுழை வாயிலுக்கு வந்தடைவீர்கள்.
தினமும் காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை பூங்கா திறந்திருக்கும். உங்களுக்கு பிடித்தமான தின்பண்டங்களை எடுத்து செல்லுங்கள். பூங்காவை சுத்தமாக வைத்து கொள்ளவதில் உங்களின் பங்கும் முக்கியம். மரங்கள் நிறைந்திருந்தாலும், நீண்ட துாரம் நடக்க வேண்டும் என்பதால் தண்ணீர் பாட்டில் வைத்து கொள்ளுங்கள். நடப்பதற்கு ஏற்ற வகையில் காலணிகள் அணிந்து கொள்ளவும். பூங்காவில் உள்ள விதிமுறைகளை கடைபிடியுங்கள்
- நமது நிருபர் -.