/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ சதுப்பு நில காடுகளுக்கு நடுவில் வாக்கிங் போகலாமா? சதுப்பு நில காடுகளுக்கு நடுவில் வாக்கிங் போகலாமா?
சதுப்பு நில காடுகளுக்கு நடுவில் வாக்கிங் போகலாமா?
சதுப்பு நில காடுகளுக்கு நடுவில் வாக்கிங் போகலாமா?
சதுப்பு நில காடுகளுக்கு நடுவில் வாக்கிங் போகலாமா?
ADDED : ஜூன் 26, 2025 12:49 AM

சதுப்பு நில காடுகள் அல்லது அலையாத்தி காடுகள் என்பது கடலுக்கும், நிலத்துக்கும் இடைப்பட்ட சதுப்புநிலப் பகுதியில் தேங்கும் உப்பு நீரில் வளரும் தாவரங்களை கொண்ட காடு ஆகும். இவை கடல் சூழலியல் மண்டலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடற்கரை பகுதிகளை சுனாமி போன்ற பேரலைகளில் இருந்து பாதுகாக்கின்றன.
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, கடலுார் மாவட்டம், பிச்சாவரத்தில் சதுப்பு நில காடுகள் உள்ளன.
கர்நாடகாவில் கடலோர மாவட்டமான கார்வாரில் சதுப்பு நில காடு உள்ளது. இந்த காட்டிற்கு நடுவில் வாக்கிங் செல்லும் வசதி உள்ளது.
கார்வார் டவுனில் காளி ஆறு அரபிக்கடலில் இணையும் பகுதியில் காளி தீவு உள்ளது. இந்த தீவை சுற்றி 3000 ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நில காடு உள்ளது. தீவிற்கு காளி ஆற்றின் கரையில் இருந்து, படகு மூலம் செல்ல முடியும். சதுப்பு நில காடுகளை சுற்றி பார்க்கும் வகையில், காடுகளுக்கு நடுவில் 250 மீட்டர் துாரத்தில் மரப்பலகையால் ஆன, நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
காளி ஆற்றின் கரையில் இருந்து படகில் செல்பவர்கள், தீவின் ஒரு இடத்தில் இறக்கி விடப்படுகின்றனர். அங்கிருந்து மரப்பலகையால் ஆன நடைபாதை வழியாக, சதுப்பு நில காடுகளை பார்த்தபடியே சுற்றுலா பயணியர் நடந்து செல்லலாம். இந்த நடைபாதை முடியும் இடத்தில் காளி கோவில் ஒன்றும் உள்ளது.
சதுப்பு நில காடுகள் பற்றி அறிந்து கொள்வதற்கு வசதியாக, 'க்யூஆர் கோடு உள்ளது. அந்த கோடை ஸ்கேன் செய்து அனைத்து தகவலையும் அறிந்து கொள்ளலாம். காளி ஆற்றின் கரையில் இருந்து தீவுக்கு அழைத்து செல்ல, படகு கட்டணம் சீசனுக்கு, சீசன் மாறுபடுகிறது. சதுப்பு நில காடுகளை சுற்றிப்பார்க்க ஒரு நபருக்கு 20 ரூபாய் கட்டணம்.
- நமது நிருபர் -