Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ 'சின்னஞ்சிறு வண்ணப்பறவை'யின் வியக்க வைக்கும் ஆர்வம்

'சின்னஞ்சிறு வண்ணப்பறவை'யின் வியக்க வைக்கும் ஆர்வம்

'சின்னஞ்சிறு வண்ணப்பறவை'யின் வியக்க வைக்கும் ஆர்வம்

'சின்னஞ்சிறு வண்ணப்பறவை'யின் வியக்க வைக்கும் ஆர்வம்

ADDED : ஜூன் 22, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
இன்றைய காலத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை காட்டுவோரை காண்பது அபூர்வம். பலருக்கு சுற்றுச்சூழல் என்றால், என்னவென்றே தெரியாது. ஆனால் சின்னஞ்சிறு சிறுமி, சுற்றுச்சூழல் மீது காட்டும் அக்கறை, அனைவரையும் வியக்க வைக்கிறது.

மாநிலத்தில் சமீப ஆண்டுகளாக, மனிதர்களின் வாழ்க்கையில் பிளாஸ்டிக் ஒரு அங்கமாக மாறியுள்ளது. ஏதாவது ஒரு விதத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்துகின்றனர். அரசு தடை விதித்தும் பிளாஸ்டிக் பயன்பாடு நிற்கவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து, சிறுமி ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

யு.கே.ஜி.,


ஹூப்பள்ளியின் பவானி நகரில் வசிப்பவர் சந்தன் ஹுத்தார். இவரது மனைவி அக்ஷதா. இவர்களின் மகள் அரசி, 5. இவர் சின்மயி பள்ளியில் யு.கே.ஜி., படிக்கிறார். இவர் 'மிஸ் கர்நாடகா ஜூனியர்' போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றவர். அது மட்டுமின்றி, பல்வேறு விளம்பர படங்களில் நடித்து, மக்களின் மனதில் இடம் பிடித்தவர். பெயருக்கு ஏற்றார் போன்று அழகு, அறிவு நிறைந்தவர். இந்த வயதிலேயே, சுற்றுச்சூழல் ஆர்வலராக சிறுமி திகழ்கிறார்.

சுற்றுச்சூழல் தினத்தை, பலரும் செடிகள் நட்டு, தண்ணீர் ஊற்றி கொண்டாடுவது சகஜம். ஆனால் அரசி, மாறுபட்ட முறையில் சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடி, அனைவரையும் வியக்க வைத்தார். இயற்கைக்கு ஆபத்தான பிளாஸ்டிக் கழிவுகள், பேனர்களை சேகரித்து வந்து, தன் நண்பர்கள் மற்றும் பெற்றோரின் உதவியுடன் அழகான பள்ளி பைகள் தயாரித்தார். இவற்றை தளவாயி, கனகூரு கிராமங்களில் உள்ள தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு வழங்கினார்.

ஆச்சரியம்


தேவையற்ற பொருட்களில் இருந்து, தன்னை போன்று பள்ளி சிறார்களுக்கு பை தயாரித்து கொடுத்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார். ஓடி விளையாடும் வயதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

இது குறித்து, அரசி கூறியதாவது:

சுற்றுச்சூழல் பாதுகாப்பில், எனக்கு உள்ள ஆர்வம் எப்போதும் தொடரும். தற்போதைக்கு தேவையற்ற பிளாஸ்டிக், பேனர்களை பயன்படுத்தி 50 பள்ளி பைகள் தயாரித்து, கனகூரு, தளவாயி பள்ளி சிறார்களுக்கு வழங்கினோம். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. வரும் நாட்களில் என் பெற்றோரின் உதவியுடன், மேலும் அதிகமான பைகள் தயாரித்து, வழங்க வேண்டும் என்பது என் ஆசை.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியின் பெற்றோர் கூறியதாவது:

எங்கள் மகளின் விருப்பத்துக்கு, நாங்கள் ஒத்துழைப்பு அளித்தோம். பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என, நாம் இப்போதிருந்தே குழந்தைகளுக்கு பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது அவர்களின் மனதில், ஆழமாக பதியும்.

மகிழ்ச்சி


குழந்தைகளின் மனம், களி மண் போன்றது. அதில் நாம் நல்ல விதைகளை விதைக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அப்போது எங்கள் மகள், மற்றவருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். மகளின் செயல் எங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

குழந்தைகளுக்கு பாடங்கள் சாராத விஷயங்களையும், நாம் கற்றுத்தர வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் பயன் இல்லாத பொருட்களை வைத்து, பள்ளி பைகளை தயாரிக்க முடியும் என்பதே, எங்களுக்கு தெரியாது. ஆனால் எங்கள் மகள் தன் புத்திக்கூர்மையால் இதை தயாரித்தார். ஹெப்பள்ளி கிராமம் உட்பட, பல பள்ளிகளுக்கு 150 க்கும் மேற்பட்ட பைகளை இலவசமாக வழங்கினோம். மேலும் பல பள்ளிகளுக்கு, இத் தகைய பைகள் வழங்க வேண்டும் என்பது, எங்கள் மகளின் விருப்பம். அதை நாங்கள் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us