/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ ஐ.ஏ.எஸ்., ஆக இலவசமாக வழிகாட்டும் தமிழ் அதிகாரி ஐ.ஏ.எஸ்., ஆக இலவசமாக வழிகாட்டும் தமிழ் அதிகாரி
ஐ.ஏ.எஸ்., ஆக இலவசமாக வழிகாட்டும் தமிழ் அதிகாரி
ஐ.ஏ.எஸ்., ஆக இலவசமாக வழிகாட்டும் தமிழ் அதிகாரி
ஐ.ஏ.எஸ்., ஆக இலவசமாக வழிகாட்டும் தமிழ் அதிகாரி
ADDED : செப் 13, 2025 11:15 PM

கல்வி தான் உலகில் தலைசிறந்த ஆயுதம் என்ற பழமொழியை படித்திருப்போம். அப்படிப்பட்ட கல்வியை அனைவரும் பெறுவதற்காகவே மத்திய, மாநில அரசுகள் ஏராளமான சலுகைகளை மாணவர்களுக்கு வாரி வழங்குகின்றன.
ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் செருப்பு கூட போட முடியாத சூழலில் வளர்ந்தாலும் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தி, கல்விக்கு மட்டுமே உண்டு, அதன் சிறப்பை உணர்ந்ததாலேயே, மழைக்கு கூட பள்ளிக்கு ஒதுங்காத பெற்றோர் கூட, தங்கள் பிள்ளைகளை எப்படியாவது கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர்.
வழிகாட்டி இப்படிப்பட்ட பெற்றோர், கஷ்டப்பட்டு பள்ளி வரை தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்துவிடுவர். ஆனால், கல்லுாரி என்று வரும்போது அவர்களுக்கு தங்கள் பிள்ளைகளை என்ன படிக்க வைப்பது? எங்கு படிக்க வைப்பது என்பது தெரியாது.
அதே போல கல்லுாரியில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாது. காரணம், அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். இப்படி வழிதெரியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருக்கும் மாணவர்களுக்கு ஒளியாக, வழிகாட்டியாக கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் உள்ளது.
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் ஐ.ஏ.எஸ்., ஆக ஆசைப்படு எனும் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் இலவசமாக மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஆவதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சி நடத்துவது முக்கியமல்ல; வழிகாட்டுவதும் முக்கியமல்ல; மாறாக எது முக்கியமேன்றால் அந்த வழிகாட்டி யார் என்பதே முக்கியம்.
அப்படிப்பட்ட வழிகாட்டியாக மாணவர்களுக்கு தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பெங்களூரு குடிநீர் வாரியத்தின் தலைவருமான ராம்பிரசாத் மனோகர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார். இந்த வழிகாட்டும் நிகழ்ச்சியின் முதல் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள அக்ரிகல்சுரல்ஸ் இன்ஸ்டிடியூஷனில் நடந்தது. இதில், 25க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பங்கேற்றனர்.
3 முறை தோல்வி அவர்கள் முன்னிலையில் ராம்பிரசாத் மனோகர் பேசியதாவது:
ஐ.ஏ.எஸ்., ஆக ஆசைப்படுவோரான நீங்கள், உங்கள் வாழ்வில் முதல் படியை எடுத்து வைத்துள்ளீர்கள். முதலில் நீங்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும். வாழ்க்கையில் கண்டிப்பாக ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்ற எண்ண வேண்டும்.
நான் தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தேன். கல்லுாரி படிப்புக்காக முதல் முறையாக சென்னைக்கு சென்றேன். பெரிய கட்டடங்கள், ஆங்கிலத்தில் பேசும் மக்கள் அனைவரையும் கண்டேன். அதுபுதுவிதமான அனுபவமாக இருந்தது.
அச்சமயத்தில்இளம் விஞ்ஞானிகளுக்கான நேர்முகத் தேர்வு நடந்தது. ஆனால், கல்லுாரியில் நடந்த போராட்டத்தால் ரத்தானது. அப்போது வறுத்தமாக இருந்தது. அதே சமயம் நாம் ஏன் ஐ.ஏ.எஸ்., ஆகக்கூடாது என்று நினைத்தேன். நினைத்ததை முடித்தேன்.
மூன்று முறை ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி தோல்வியுற்றேன். நான்காம் முறையே ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றேன். 2010ல் கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணிபுரிந்தேன். 15 ஆண்டுகளில் பல திட்டங்களை வெற்றிகரமாக செய்துள்ளேன்.
ஐ.ஏ.எஸ்., ஆக சிறந்த திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும். நீங்கள் அனைத்துத் துறைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை என்று நினைக்க வேண்டாம். நான் இருக்கிறேன் என்பதை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.
ஒவ்வொரு தோல்வியின் போதும் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். விடா முயற்சியோடு வெற்றியை நோக்கி செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவது எப்படி? நேர்முக தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சி மீண்டும் நடக்க உள்ளது.
தொடர்புக்கு:
karnataka tamiljournalists@ gmail.com
- நமது நிருபர்-