Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ யு.பி.எஸ்.சி., தேர்வில் வெல்வதற்கு உதவிய 'கன்னட நாளிதழ்கள்'

யு.பி.எஸ்.சி., தேர்வில் வெல்வதற்கு உதவிய 'கன்னட நாளிதழ்கள்'

யு.பி.எஸ்.சி., தேர்வில் வெல்வதற்கு உதவிய 'கன்னட நாளிதழ்கள்'

யு.பி.எஸ்.சி., தேர்வில் வெல்வதற்கு உதவிய 'கன்னட நாளிதழ்கள்'

ADDED : மே 18, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
தன் யு.பி.எஸ்.சி., தேர்வு பயணம் குறித்து பிரீத்தி மனம் திறந்து கூறியதாவது:

என் சொந்த ஊர் மைசூரு சாலிகிராமம் அருகே உள்ள அங்கனஹள்ளி கிராமம். தந்தை பெயர் சன்னபசப்பா, தாய் நேத்ராவதி. தந்தை விவசாயம் செய்கிறார். ஒன்றாம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை, அங்கனஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்தேன்.

பி.யு.சி., படிப்பை கே.ஆர்.அரசு கல்லுாரியில் படித்து முடித்தேன். பின், மாண்டியா பல்கலைக்கழகத்தில் வேளாண் துறையில் இளங்கலை பட்டமும், வாரணாசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றேன்.

உன்னால் முடியும்


சிறுவயதில் இருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்ற, ஆசை எனக்கு இருந்தது. என் ஆசையை நிறைவேற்ற, தந்தை நிறைய ஊக்கம் அளித்தார். 'உன்னால் முடியும்' என்று எப்போதும் ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பார்.

கடந்த 2020ல் தான் முதல்முறை யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாரானேன். ஏற்கனவே இரண்டு முறை தேர்வில் தோல்வி அடைந்தேன். தற்போது மூன்றாவது முறையாக, தேர்வு எழுதி வெற்றி பெற்று இருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த வேலைக்கு செல்லவில்லை. தேர்வுக்கு மட்டுமே தயாராகி கொண்டு இருந்தேன்.

தேர்வுக்கு தயாராக கோச்சிங் சென்டருக்கு கூட சென்றது இல்லை. யு.பி.எஸ்.சி.,யில் இதற்கு முன்பு வெற்றி பெற்றவர்கள் கூறும் 'டிப்ஸ்களை' சமூக வலைத்தளங்களில் பார்த்து கொண்டு இருப்பேன். நுாலகத்திற்கு சென்று நிறைய புத்தகங்களை எடுத்து வந்து படிப்பேன்.

தினமும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை படிப்பேன். இரண்டு முறை தேர்வில் தோல்வி அடைந்ததால், மூன்றாவது முறை தேர்வு எழுத எனக்கு விருப்பம் இல்லை. வேலைக்கு செல்லாமல் தந்தைக்கு கஷ்டம் கொடுக்கிறோம் என்று தோன்றியது. ஆனாலும் கடைசியாக ஒரு முறை முயற்சி செய் என்று தந்தை என்னிடம் கூறினார்.

இம்முறை, 300 இடங்களுக்குள் நீ வெற்றி பெறுவாய் என்றும், எனக்கு தைரியம் அளித்தார். அவர் கூறியது போல 263 வது இடத்தை பிடித்து வெற்றி பெற்று உள்ளேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாளிதழ்கள்


அரசு பள்ளியில் கன்னட வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, யு.பி.எஸ்.சி., தேர்வை நம்மால் எழுத முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. கண்டிப்பாக அது முடியும். நானும் கன்னட வழியில் தான் படித்தேன். யு.பி.எஸ்.சி., தேர்வை கன்னட வழியில் எழுதினேன்.

நேர்காணலிலும் கன்னடத்தில் தான் உரையாடினேன். யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயார் செய்வோர் தினமும் நாளிதழ்கள் படிக்க வேண்டும். அப்போது தான் நாட்டு நடப்பு தெரியும். ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வது என் குறிக்கோள்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us