Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ ஹாவேரி பிரமாண்டம் ருத்ராட்ச மாலைகளுக்கு 'மவுசு'

ஹாவேரி பிரமாண்டம் ருத்ராட்ச மாலைகளுக்கு 'மவுசு'

ஹாவேரி பிரமாண்டம் ருத்ராட்ச மாலைகளுக்கு 'மவுசு'

ஹாவேரி பிரமாண்டம் ருத்ராட்ச மாலைகளுக்கு 'மவுசு'

ADDED : மார் 15, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
ஹாவேரி ஏலக்காய்க்கு மட்டுமல்ல, ருத்ராட்ச மாலைகளுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. இங்கு ஒரு குவிண்டால் எடையுள்ள மாலைகளும் கிடைக்கின்றன. ஹாவேரி ருத்ராட்சமாலைகளுக்கு, நல்ல மவுசு உள்ளது.

ஏலக்காய் என்றவுடன், நமக்கு சட்டென நினைவுக்கு வருவது ஹாவேரி. இம்மாவட்டம் ருத்ராட்ச மாலைகளுக்கும் பெயர் பெற்றதாகும். ஷிகாவியின் நாராயணபேட் கிராமத்தில், பிரம்மாண்டமான ருத்ராட்ச மாலைகள் தயாராகின்றன. குவிண்டால் எடையுள்ள மாலைகளும் இங்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாராயணபேட் கிராமத்தில் ரவி பங்காபுரா என்பவர், பிரம்மாண்ட ருத்ராட்சை மாலைகள் தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் மாலைகள், ரதங்கள், கோவில்களின் விக்ரகங்கள், பசவேஸ்வரர் விக்ரகங்களுக்கு அணிவிக்கப்படுகின்றன.

சிறப்பு மகத்துவம்


ஹிந்து மதத்தில் ருத்ராட்சைக்கு, சிறப்பு மகத்துவம் உள்ளது. ருத்ராட்சம் என்றால் சிவனின் கண் என்று அர்த்தம். மாலையை கையில் வைத்துக் கொண்டு, சிவ மந்திரங்கள் பாராயணம் செய்யப்படுவது வழக்கம்.

ருத்ராட்ச மாலை உருவாக்குவது புராதன கலை என்றாலும், ரவி பங்காபுரா இதற்கு புதிய வடிவம் கொடுத்துள்ளார். லட்சக்கணக்கான ருத்ராட்சைகளை கோர்த்து, ரதத்துக்கு போடும் அளவுக்கு, பிரம்மாண்ட மாலைகளை இவர் தயாரிக்கிறார்.

ரவி பங்காபுரா அதிக கடவுள் பக்தி கொண்டவர். ஒரு முறை கோவிலின் திருவிழாவுக்கு, பூமாலை தயாரித்து, கொண்டு சென்றார். இந்த மாலை அறுந்து, பூக்கள் சிதறின. அதன்பின் ருத்ராட்சையில் ஐந்து இழைகள் கொண்ட மாலை தயாரித்து கொண்டு சென்றார். அதுவும் அறுந்து ருத்ராட்சைகள் சாலையில் விழுந்தன. கலக்கமடைந்த அவர், பல ஆண்டுகள் நீடிக்கும் திறன் கொண்ட மாலைகளை தயாரிக்க முடிவு செய்தார்.

நேரமின்மை


கிராமத்தினர் உதவியுடன் பிளாஸ்டிக் பைப், கம்பிகள், ருத்ராட்ச, முத்து, பல்வேறு பிளாஸ்டிக் பூக்களால் ஆறு அடி உயர ருத்ராட்ச மாலை தயாரித்து, கடவுள் சிலைக்கு அர்ப்பணித்தார். இது அற்புதமாக இருந்தது. அதன்பின் திரும்பி பார்க்க நேரம் இல்லாமல், அவருக்கு ஆர்டர்கள் குவிந்தன. ஆறு, எட்டு, 12 அடி உயரமான ருத்ராட்சை மாலைகள் தயாரித்து தருகிறார். ஆண்டுக்கு ஆண்டு, இவரது மாலைகளுக்கு மவுசு அதிகரிக்கிறது.

இதுவரை ஏராளமான கோவில்கள், நுாற்றுக்கணக்கான ரதங்கள், மடாதிபதிகளுக்கு ருத்ராட்ச மாலைகள் தயாரித்து வழங்கி உள்ளார். ருத்ராட்ச மாலைக்கு தேவையான பொருட்களுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும். இது தவிர அதிக பணம் வாங்குவது இல்லை. இவரது கை வண்ணத்தில் தயாரான மாலைகள், கர்நாடகாவின் பல்வேறு இடங்களில், கடவுளை அலங்கரிக்கின்றன.

பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளாவுக்கு, ரவி பங்காபுரா சென்றிருந்தார். அங்கு சிறிய அளவில் ருத்ராட்ச மாலைகள் தயாரித்து அர்ப்பணித்தார்.

10 - 12 ஆண்டுகள்


காசியில் இருந்து ருத்ராட்சைகளை வரவழைக்கும் இவர், அவற்றை நீரில் நனைத்து வைக்கிறார். அதன் நிறம் மாறிய பின், வெயிலில் உலர்த்துகிறார். நன்றாக உலர்ந்ததும் மாலை தயாரிக்கிறார், இத்தகைய மாலைகள், 10 முதல் 12 ஆண்டுகள் நன்றாக இருக்குமாம்.

இது குறித்து ரவி பங்காபுரா கூறியதாவது:

நான் தயாரிக்கும் ருத்ராட்ச மாலைகளை நீரில் கழுவினாலும் எதுவும் ஆகாது. நான் வியாபாரியாக இருந்தாலும், ருத்ராட்ச மாலைகள் தயாரிக்க பணம் வாங்குவது இல்லை. மாலை தயாரிக்க தேவையான பொருட்கள் வாங்குவதற்கு மட்டும், பணம் பெறுகிறேன்.

என் பணிக்கு குடும்பத்தினர், நண்பர்கள், கிராமத்தினர் உதவுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக, இப்பணியை செய்து வருகிறேன்.

ஆறு ஆண்டுகளாக, பிரம்மாண்ட ருத்ராட்ச மாலைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. ஹிந்து மதத்தில் ருத்ராட்சைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. 21 முகங்கள் உள்ள ருத்ராட்சங்கள் உள்ளன. ஒன்று, இரண்டு முகங்கள் கொண்ட ருத்ராட்சங்களுக்கு அதிக மவுசு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us