/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/30 ஆண்டுகளில் 4,000 பாம்புகளை உயிருடன் பிடித்த பி.எம்.டி.சி., டிரைவர்30 ஆண்டுகளில் 4,000 பாம்புகளை உயிருடன் பிடித்த பி.எம்.டி.சி., டிரைவர்
30 ஆண்டுகளில் 4,000 பாம்புகளை உயிருடன் பிடித்த பி.எம்.டி.சி., டிரைவர்
30 ஆண்டுகளில் 4,000 பாம்புகளை உயிருடன் பிடித்த பி.எம்.டி.சி., டிரைவர்
30 ஆண்டுகளில் 4,000 பாம்புகளை உயிருடன் பிடித்த பி.எம்.டி.சி., டிரைவர்
UPDATED : ஜூன் 01, 2025 07:00 AM
ADDED : ஜூன் 01, 2025 06:44 AM

'பாம்பு என்றால் படையே நடுங்கும்' என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கு அர்த்தம் என்னவென்றால், பாம்பை பார்த்தால் யாராக இருந்தாலும் பயப்படுவர். பாம்பின் விஷம் ஆபத்தானது.
அதனால் பாம்பின் பக்கமே யாரும் செல்வது இல்லை. ஆனால் பாம்புகளை பிடிப்பதற்கு என்றே சிலர், தங்களை பாம்புபிடி வீரர்களாக தயார்படுத்திக் கொள்கின்றனர். எத்தகைய விஷம் கொண்டதாக இருந்தாலும், எவ்வளவு நீளம் இருந்தாலும் தங்கள் சாமர்த்தியத்தால் பிடித்து வருகின்றனர். பாம்பு கடித்து, இறந்த பாம்புபிடி வீரர்களும் உள்ளனர்.
அமெரிக்க குடும்பம்
பி.எம்.டி.சி., டிரைவராக பணி செய்யும் ரங்கநாத், 44, கடந்த 30 ஆண்டுகளாக 4,000 பாம்புகளை உயிருடன் மீட்டு உள்ளார். பாம்பு பிடிப்பது குறித்து ரங்கநாத் கூறியதாவது:
என் சொந்த ஊர் ஷிவமொக்காவின் சாகர். 1996ல் நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பம் சாகருக்கு வந்து, பசுமையான காடுகளை பற்றி ஆராய்ச்சி செய்தது.
தொந்தரவு ஏற்படாத வகையில் பாம்புகளை பிடிக்கவும், அந்த குடும்பத்தினர் பயிற்சி அளித்தனர். நானும், என் வகுப்பு நண்பர்களுடன், அந்த அமெரிக்க குடும்பத்தினருடன் சேர்ந்து காடுகளை பற்றி ஆராய சென்றோம். அப்போது வனவிலங்குகளை நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனால் இயற்கை மீதும், வனவிலங்குகள் மீதும் அதிக ஆர்வம் ஏற்பட்டது. பாம்பு பிடிப்பது பற்றி அமெரிக்க குடும்பத்தினர் கற்றுக் கொடுத்தது எனக்கு ஆர்வத்தை துாண்டியது. அவர்களிடம் இருந்து பாம்பு பிடிக்க கற்றுக் கொண்டேன். எஸ்.எஸ்.எல்.சி., முடித்த பிறகு, ஐ.டி.ஐ., படித்து கொண்டு இருந்தேன்.
அப்போது ரத்த தானம் செய்வதில் எனக்கு ஆர்வம் நிறைய இருந்தது. ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்ற ரத்த தானம் செய்ய சென்றேன். இதனால் ஒரு தேர்வை தவறவிட்டேன். தந்தையை தவிர குடும்பத்தினர் எதிர்த்தனர். தந்தையிடம் இருந்து 1,000 ரூபாய் வாங்கிக் கொண்டு பெங்களூரு வந்துவிட்டேன்.
இங்கு வந்ததும் என்ன செய்வது என்று தெரியவில்லை. பொது கழிப்பறைகளை சுத்தம் செய்வது; குப்பையை பொறுக்குவது உள்ளிட்ட வேலைகளை செய்து சிறிதளவு பணம் சம்பாதித்தேன். பின், குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ந்தேன். 2008ல் திருமணம் செய்தேன்.
கடந்த 2011ல் ஓட்டுநர்களை பி.எம்.டி.சி., பணி நியமனம் செய்தது. ஏற்கனவே கனரக வாகனங்கள் ஓட்டிய அனுபவம், ஓட்டுநர் உரிமம் இருந்ததால் பி.எம்.டி.சி.யில் வேலை கிடைத்தது.
தற்போது சிவாஜிநகரில் இருந்து பிடதி அருகே உள்ள கனகல்லு கிராமம் வரை பஸ்சை இயக்குகிறேன்.
தொந்தரவு
பஸ் ஓட்டுவதற்கு இடையிலும், பாம்புகளை பிடிக்கும் வேலையும் செய்கிறேன். யார் வீட்டிலாவது பாம்பு நுழைந்துவிட்டது என்று தகவல் கிடைத்தால், உடனடியாக கிளம்பி சென்றுவிடுவேன். எனக்கு தெரிந்து 30 ஆண்டுகளில் 4,000க்கும் மேற்பட்ட பாம்புகளை லாவகமாக பிடித்து இருக்கிறேன். ஒரு நாள், கால்நடை கொட்டகைக்குள் ஒரு பாம்பு புகுந்தது.
அதை நான் பிடித்தபோது, அது பசு மாட்டின் மீது விழுந்தது. அந்த பசுவை கடிக்க முயன்றபோது, நான் பிடித்துவிட்டேன். இதனால் என் கையில் கடித்துவிட்டது. அவ்வளவு தான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக அது விஷம் இல்லாத பாம்பு. இது தவிர பாம்பு பிடித்தபோது எந்த அசம்பாவிதமும் நடந்தது இல்லை.
கடவுள் ஆசியால் பி.எம்.டி.சி., டிரைவராக உள்ளேன். பாம்புகள் வீட்டிற்குள் புகுந்ததால், அதற்கு தொந்தரவு செய்ய வேண்டாம். அதன்போக்கில் விட்டால் போய் விடும். பயமாக இருந்தால் கதவை அடைத்துவிட்டு, பாம்பு பிடி வீரர்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார். ரங்கநாத்தின் அர்ப்பணிப்பு பணிக்காக 'கன்னட சேவா ரத்னா', 'கன்னட ராஜ்யோத்சவா', ஆசியா சர்வதேச கலாசார ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் 'கவுரவ முனைவர்' பட்டமும் அவருக்கு கிடைத்துள்ளது.
- நமது நிருபர் -