ADDED : மே 30, 2025 11:27 PM

தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, துாத்துக்குடியில் பனங்கிழக்கு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் படையலிடும்போது பனங்கிழங்கையும் வைப்பது வழக்கம். பனங்கிழங்கு சாப்பிடுவதில் பல நன்மைகள் உள்ளன.
நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன. மலச்சிக்கல், ரத்தச்சோகை, நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் பனங்கிழங்கு தீர்வு வழங்குகிறது.
எலும்பு, தசை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பனங்கிழங்கை அவித்து சாப்பிட்டு இருப்பதை தான் பார்த்து இருப்போம். ஆனால் பனங்கிழங்கில் அல்வா கூட செய்யலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் பனங்கிழங்கு துண்டுகள்
ஒரு கப் பனங்கருப்பு கட்டி
கால் கப் நெய்
ஏலக்காய் பவுடர் அரை டீஸ்பூன்
முந்திரி கால் கப்
உலர் திராட்சை கால் கப்
செய்முறை
பனங்கிழங்கை நன்கு கழுவி தோலை நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டி, நைசாக பொடி செய்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பனங்கருப்பு கட்டியை தனியாக எடுத்து வைக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பனங்கருப்பு கட்டியை கரைத்து வடிகட்டி எடுக்கவும்.
வாணலியில் நெய்யை ஊற்றி சூடாக்கி, முந்திரி, உலர் திராட்சை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இதனுடன் பொடி செய்து வைத்திருந்த பனங்கிழங்கை சேர்த்து வதக்கவும்.
பின், பனங்கருப்பு கட்டி கரைசலை சேர்த்து நன்கு கலக்கவும். ஏலக்காய் பவுடர் சேர்த்து அல்வா கெட்டியாகும் வரை நன்கு கிளறவும். இறுதியாக வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கலக்கி அடுப்பை ஆப் செய்யவும்.
சூடு ஆறிய பின் பிளேட்டில் போட்டு அல்வாவை பரிமாறுங்கள். மாலை நேரத்தில் சூப்பர் டிஷ் ஆக இருக்கும்.
பள்ளி சென்று வரும் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர்
- நமது நிருபர் -.