Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/ஆடுகளம்/ சர்வதேச அளவில் டென்னிசில் கலக்கும் தமிழ் மாணவி

சர்வதேச அளவில் டென்னிசில் கலக்கும் தமிழ் மாணவி

சர்வதேச அளவில் டென்னிசில் கலக்கும் தமிழ் மாணவி

சர்வதேச அளவில் டென்னிசில் கலக்கும் தமிழ் மாணவி

ADDED : ஜூன் 13, 2025 07:05 AM


Google News
Latest Tamil News
கர்நாடகாவில் பணியாற்றி வரும் தமிழ் ஐ.எப்.எஸ்., தம்பதியின் மகள், தேசிய, சர்வதேச அளவில் டென்னிசில் சாதனை படைத்து வருகிறார்.

புதுச்சேரியை சேர்ந்தவர்கள் டாக்டர் ரமேஷ் குமார் - டாக்டர் மாலதி பிரியா தம்பதி. ஐ.எப்.எஸ்., அதிகாரிகளான இருவரும், கர்நாடகாவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, மைசூரு புலிகள் திட்ட வன பாதுகாவலராக ரமேஷ் குமாரும்; மைசூரு சர்க்கிள் வன பாதுகாவலராக மாலதி பிரியாவும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களின் மகள் பத்மபிரியா, 14. எக்ஸல் பப்ளிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான டென்னிஸ் விளையாட்டில், தேசிய, சர்வதேச அளவில் அசத்தி வருகிறார். நாட்டின் சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக மாறும் கனவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

6வது இடம்


தற்போது, தேசிய அளவில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில், ஒருவர் பிரிவில் பதக்கம் பெற்றார்; இருவர் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

சமீபத்தில் திரிபுராவின் அகர்தலாவின் மாலன்ச நிவாசில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கு, 'ஆசிய யூ - 14' போட்டியிலும்; ஜூனியர் ரேங்கிங் டென்னிஸ் போட்டியிலும்; பஹ்ரைனில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெற்றி பெற்றார்.

அத்துடன், ஆசியன் டென்னிஸ் பெடரேஷன் சார்பில் கஜகஸ்தானின் ஷிம்கென்டில் நடந்த, 'ஏ.டி.எப்., யூ - 12' குழு போட்டி 2024'ல், இந்தியாவுக்காக பங்கேற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பத்மபிரியா கூறியதாவது:

பல்லாரியில் இருந்த போது, பேட்மின்டன் விளையாடி கொண்டிருந்தேன். ஆனால், அதில் எனக்கு திருப்தி இல்லை. எனவே, ஆறு வயதில் இருந்து போலீஸ் ஜிம்கானாவில், டென்னிஸ் விளையாட துவங்கினேன்.

நாளடைவில் இவ்விளையாட்டின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. எனக்கு சிறந்த பயிற்சியாளரும் கிடைத்து விட்டார். பயிற்சி பெற்ற சில மாதங்களில், டென்னிசில் என் திறமை அதிகரிப்பதை உணர்ந்தேன். அதன்பின், தொழில் முறையில் விளையாட துவங்கினேன்.

உத்வேகம்


டென்னிசில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ள அர்யனா சபலெங்காவிடம் இருந்தும், 24 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற நோவக் ஜோகோவிச்சிடம் இருந்தும் நிறைய உத்வேகத்தை பெறுகிறேன்.

தினமும் காலை 6:00 முதல் 7:30 மணி வரை உடற்பயிற்சியில் கவனம் செலுத்துகிறேன். மஹாராஜா கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள ரகுவீர் டென்னிஸ் அகாடமியில் மதியம் 2:30 முதல் மாலை 5:30 மணி வரை டென்னிஸ் பயிற்சி பெறுகிறேன்.

தற்போது, ஜூனியர் அளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறேன். விரைவில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு போட்டிகளில் அதிகமாக விளையாட துவங்கி, சர்வதேச அளவில் முதல் 20 இடங்களுக்குள் வரவேண்டும் என்பதே என் குறிக்கோள்.

தற்போது, இருவர் பங்கேற்கும் விளையாட்டில் ஈடுபட்டாலும், என் கவனம் முழுதும் ஒற்றையர் பிரிவில்தான் உள்ளது. சில மாதங்களாக இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதால், என் பெயர் வெளியே தெரிய ஆரம்பித்து உள்ளது. அது எனக்கு உத்வேகத்தை அளிக்கிறது.

போட்டி காரணமாக, பள்ளிக்கு செல்ல முடியாமல் போகும் போது, என் நண்பர்கள் எனக்கு குறிப்புகளை பகிர்ந்து கொள்கின்றனர். இதனால் படிப்பிலும் என்னால் கவனம் செலுத்த முடிகிறது.

போட்டி நடக்கும் ஊர்களுக்கு என் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகளையும் எடுத்து செல்கிறேன். ஓய்வு நேரத்தில் படிப்பேன். என் பள்ளியும், முதல்வர் மேத்யூவும் எனக்கு உறுதுணையாக உள்ளார். என் பெற்றோர் எனக்கு மிகப்பெரிய பலமாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us