இறுதி கட்டத்தை எட்டிய 'செக்கரா' கிரிக்கெட் போட்டி
இறுதி கட்டத்தை எட்டிய 'செக்கரா' கிரிக்கெட் போட்டி
இறுதி கட்டத்தை எட்டிய 'செக்கரா' கிரிக்கெட் போட்டி
ADDED : மே 15, 2025 11:29 PM

கர்நாடகா - கேரள மாநில எல்லையில் உள்ள, குடகு மாவட்டத்தில் கொடவா சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இந்த சமூகத்தின் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும், 'செக்கரா' என்ற பெயரில், கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் 23வது ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் 6ம் தேதி கோணிகொப்பா அருகே ஹுடிகேரி கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. டென்னிஸ் பந்தில் நடக்கும் இந்த கிரிக்கெட் போட்டி 6 ஓவர்களை கொண்டது. அதில் 2 ஓவர் பவர் பிளே ஆகும்.
மச்சமடா, பொல்லங்கடா, சன்னுவாண்டா, மந்தன்கண்டா, சிரியபண்டா, மூக்கலேரா உட்பட பல அணிகள் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. வரும் 19ம் தேதி இறுதி போட்டி நடக்க உள்ளது.
நேற்று நடந்த முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மச்சமடா அணி 6 ஓவர்களில் 130 ரன்கள் குவித்து அசத்தியது. எதிரணியான பொல்லங்கடா அணியால் ஆறு ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மச்சமடா அணிக்காக பேட்டிங், பந்துவீச்சில் போபண்ணா என்ற வீரர் சிறப்பாக செயல்பட்டார்.
இரண்டாவது போட்டியில் அச்ச பாண்டா - காளிமடா அணிகள் மோதின. காளிமடா அணி 35 ரன்களுக்குள் சுருண்டது. வெறும் 36 ரன்கள் இலக்கை அச்சபாண்டா அணி 3.4 ஓவர்களில் எட்டியது. இந்த அணியின் மிதுன் 11 பந்தில் 27 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். மூன்றாவது போட்டியில் சன்னுவாண்டா - மந்தன்கண்டா அணிகள் மோதின.
முதலில் ஆடிய மந்தன்கண்டா அணி ஆறு ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்தது. 67 ரன்கள் இலக்கை துரத்திய சன்னுவாண்டா அணி 5.1 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 68 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இன்று கரவத்திகர் - ஆலமேங்காடு; மணவட்டிரா - முக்காட்டிர்; கானதாண்டா - பொட்டங்காடு; ஒடியாண்டா - அம்மாதாண்டா அணிகள் மோத உள்ளன
. - நமது நிருபர் -