திக்வேஷ் ரதியை 'ட்ரோல்' செய்யும் பெங்களூரு ரசிகர்கள் பட்டாளம்
திக்வேஷ் ரதியை 'ட்ரோல்' செய்யும் பெங்களூரு ரசிகர்கள் பட்டாளம்
திக்வேஷ் ரதியை 'ட்ரோல்' செய்யும் பெங்களூரு ரசிகர்கள் பட்டாளம்
ADDED : மே 30, 2025 06:20 AM

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. வரும் 3 ம் தேதி இறுதி போட்டி நடக்க உள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில், அதிக கவனத்தை ஈர்த்தவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, வலது கை சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி, 25.
தனது பந்து வீச்சின் மூலம் விக்கெட் எடுக்கும் போது, 'நோட், புக் செலிபிரேஷன்' செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதற்காக சில முறை அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த 27 ம் தேதி நடந்த போட்டியில் பெங்களூரு - லக்னோ அணிகள் மோதின. பரபரப்பான கடைசி நேரத்தில், பெங்களூரு கேப்டன் ஜிதேஷ் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி, வழக்கம்போல நோட், புக் செலிபிரேஷனில் ஈடுபட்டார். ஆனால் அவர் விக்கெட் எடுத்த பந்து 'நோ பால்' என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக வீசிய பந்தில், ஜிதேஷ் சர்மா சிக்சர் அடிக்க, திக்வேஷ் ரதியின் முகம் சோர்ந்து போனது.
முன்னதாக ஜிதேஷ் சர்மா பேட்ஸ்மேன் எதிர்முனையில் நின்ற போது, பந்து வீச ஓடி வந்த திக்வேஷ் ரதி, 'மன்கட்' முறையில் ஜிதேஷ் சர்மாவை அவுட் செய்ய முயன்றார். ஆனால் அது நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டதுடன், மன்கட் முறை அவுட் ஆனதற்கு செய்ய அப்பீலையும், லக்னோ கேப்டன் ரிஷப் பன்ட் திரும்ப பெற்றார்.
இதனால் தற்போது பெங்களூரு ரசிகர்களின், சமூக வலைத்தள ட்ரோலுக்கு ஆளாகி உள்ளார் திக்வேஷ் ரதி. 'நீங்கள் கையெழுத்து போட்டு கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டது. நீங்களும் பவுன்ஸ் ஆகிவிட்டீர்கள்' என்று ஒரு ரசிகர் கிண்டல் செய்து உள்ளார். இதுபோன்று நோட் புக் செலிபிரேஷன் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் வில்லியம்சுக்கு, விராட் கோலி தனது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்தார்.
அந்த வீடியோவையும், திக்வேஷ் ரதியின் செலிபிரேஷன் வீடியோவையும் இணைத்தும், ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அடுத்த ஆண்டு ஐ.பி.எல்., போட்டிகளில், திக்வேஷ் ரதி நோட், புக் செலிபிரேஷன் செய்வாரா என்று கேள்வி எழுந்து உள்ளது. ஒவ்வொரு பந்து வீச்சாளரும் விக்கெட் எடுக்கும் போது தங்கள் ஸ்டைலில் செலிபிரேஷன் செய்வர். திக்வேஷ் ரதியும் அப்படி தான் செய்தார், இளம் வீரரான அவரை கிண்டல் செய்வது நியாயமா என்றும், சிலர் ஆதரவு கருத்து பதிவிடுகின்றனர்.
- நமது நிருபர் -