Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/ஆடுகளம்/ ஆடுகளம் நீச்சல் போட்டியில் அசத்தும் நிரஞ்சன் 

ஆடுகளம் நீச்சல் போட்டியில் அசத்தும் நிரஞ்சன் 

ஆடுகளம் நீச்சல் போட்டியில் அசத்தும் நிரஞ்சன் 

ஆடுகளம் நீச்சல் போட்டியில் அசத்தும் நிரஞ்சன் 

ADDED : மார் 14, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
நீச்சல் என்பது வெறும் பொழுதுபோக்கோ, விளையாட்டோ இல்லை. ஆபத்து காலங்களில் உயிரை காக்கும் தற்காப்புக் கலை. ஏதாவது நீர்நிலையில் குளிக்க செல்லும் போது ஆழமான பகுதிக்கு சென்று தத்தளித்தால், அங்கிருந்து கரைக்கு மீண்டு வர உதவுவது நீச்சல் தான். இதனால் சிறுவயதில் இருந்தே தங்கள் பிள்ளைகளுக்கு, பெற்றோர் நீச்சல் அடிக்க கற்றுகொடுக்கின்றனர்.

நகர பகுதியில் வசிக்கும் குழந்தைகள், நீச்சல் குளத்திற்கு சென்று பயிற்சி எடுக்கின்றனர். நீச்சல் பழகுவது தற்காப்பு மட்டுமின்றி, உடல் உறுப்புகளை வலுப்படுத்தவும் உதவும். இந்நிலையில் உடல் உறுப்புகளை வலுப்படுத்த, நீச்சல் வகுப்பிற்கு சென்று, நீச்சலில் சாதனை படைத்த ஒருவரை பற்றி பார்க்கலாம்.

பெங்களூரு பனசங்கரியை சேர்ந்தவர் நிரஞ்சன் முகுந்தன், 30. இவர் பிறக்கும் போதே அவரின் முதுகு தண்டு, கால் பாதத்தில் பாதிப்புடன் பிறந்தார்.

இதனை சரிசெய்ய அவருக்கு 16 அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கால் பாதம் வளர்ச்சி அடைய நீச்சல் பயிற்சிக்கு சேர்த்து விடும்படி நிரஞ்சனின் பெற்றோரிடம், டாக்டர்கள் கூறினர்.

அதன்படி அவரை நீச்சல் வகுப்பில் பெற்றோர் சேர்த்து விட்டனர். நீச்சலை நிரஞ்சன் ஆர்வமாக கற்று கொண்டார். இதனை பார்த்த ஜான் கிறிஸ்டோபர் என்ற பயிற்சியாளர், நிரஞ்சனுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, நீச்சல் போட்டிகளில் பங்கேற்க வைத்தார்.

கடந்த 2004, 2005ம் ஆண்டுகளில் மும்பை, கோல்கட்டாவில் நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 50 மீட்டர் பிரிவில், வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். 2007ல் பெங்களூரில் நடந்த மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார். 2012ம் ஆண்டு நிரஞ்சனுக்கு மறக்க முடியாததாக அமைந்தது.

அந்த ஆண்டு சென்னையில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், மூன்று தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். அதே ஆண்டு ஜெர்மனில் நடந்த 200 மீட்டர் போட்டியில் வெற்றி பெற்று, வெண்கல பதக்கம் வென்றார். அவர் வென்ற முதல் சர்வதேச பதக்கம் அது தான்.

2014ல் இங்கிலாந்தின் ஸ்டோக் மாண்டிவில்லேயில் நடந்த உலக ஜூனியர் விளையாட்டு போட்டியில் மூன்று தங்கம், மூன்று வெள்ளி, இரண்டு வெண்கலம் வென்று அசத்தினார்.

நிரஞ்சன் திறமையை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 2015ம் ஆண்டு கர்நாடக அரசு, ராஜ்யோத்சவ பிரசாஸ்தி விருது வழங்கி கவுரவித்தது. அதே ஆண்டில் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய அரசிடம் இருந்து சிறந்த மாற்றுத்திறனாளி வீரர் விருதும் பெற்றார்.

கடந்த 2016 ல் கர்நாடக அரசின் ஏகலைவா விருதும் பெற்றார். அவரது நீச்சல் பயண சாதனை மென்மேலும் தொடர நாமும் வாழ்த்தலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us