ADDED : செப் 22, 2025 04:12 AM

திருநங்கைகள் தெருவில் பிச்சை எடுக்கின்றனர். பாலியல் தொழில் செய்கின்றனர் என பலரும் குற்றம் சாட்டுவர். ஆனால், ஒரு சிலரை தவிர நிறைய பேர் கஷ்டப்பட்டு உழைத்து, சிறு தொழில்கள் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இன்னும் சிலர், படித்து பட்டம் பெற்று பல நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்த வரிசையில் உள்ள ஒரு திருநங்கை பற்றி எடுத்துரைக்கிறது இந்த கட்டுரை.
ராய்ச்சூர் லிங்கசுகூர் தாலுகா, தொண்டிஹால் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுவர் திருநங்கை பூஜா. இவரே, ராய்ச்சூர் மாவட்டத்தில் முதன் முதலில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்த திருநங்கை என்ற பெருமைக்குரியவர்.
இவர், ஆசிரியர் பணி மட்டுமின்றி, கிராமத்தில் வீடு, வீடாக சென்று பெற்றோரிடம் மாணவர்களின் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். மாணவர்கள் பள்ளியிலிருந்து இடையில் நிற்க கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறார். பள்ளியிலிருந்து பாதியில் நின்ற குழந்தைகளின் பெற்றோரிடம் பேசி, அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் மாணவர்களை பள்ளியில் சேர்த்து விடுகிறார்.
அரசு தரும் சம்பளத்துக்கு அதிகமாகவே வேலை செய்கிறார். இதனால், இவரை பெற்றோர், மாவட்ட கல்வி அதிகாரிகள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
கிண்டல் ஆயினும், இவரது வாழ்க்கை வலிகள் நிறைந்தது. ராய்ச்சூர் மான்வி தாலுகாவை சேர்ந்தவர் பூஜா. அப்போது அஸ்வத்தாமன் எனும் ஆணாக இருந்தார். இவருக்கு சிறுவயதிலேயே பெண் தன்மை அதிகமாக இருந்து உள்ளது. இதனால், பலராலும் கேலி, கிண்டல் செய்யப்பட்டு உள்ளார்.
இவர், ராய்ச்சூரில் உள்ள கல்வி நிலையங்களில் தன் பள்ளி, கல்லுாரி படிப்பை முடித்தார். இதற்கிடையில், பெண் மாதிரி நடந்து கொள்வதால், வீட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார். 2018ல் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து, தனது பெயரை பூஜா என மாற்றி கொண்டார்.
வாழ்வாதாரத்திற்காக பிச்சை கூட எடுத்து உள்ளார். அப்போது, பலரும் சொன்ன வார்த்தைகளை கேட்டு ஆத்திரம் அடைந்தார். இதனால், பலரும் போற்றும் வேலைக்கு செல்ல வேண்டும் என நினைத்தார். இதனால், ஆசிரியராக முடிவு செய்தார். இதற்காக பயிற்சி பெற்றார். 2022ல் ஆசிரியர் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தன் சொந்த மாவட்டத்திலேயே பணி பெற்றார்.
தற்போதைய நிலை குறித்து பூஜா கூறியதாவது:
எனது பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் என்னை சமமாக நடத்துகின்றனர். பள்ளி கூடமே எனது வீடாக மாறிவிட்டது. மாணவர்களே என் உறவினர்களாக மாறி விட்டனர். இந்த கிராம மக்களும் என்னை தங்கள் வீட்டு பிள்ளை போல பார்க்கின்றனர்.
கல்லுாரியில் விரிவுரையாளராக வேண்டும் என்பதை லட்சியமாக வைத்து உள்ளேன். இதற்காக தயாராகி வருகிறேன். என்னை ஒதுக்கி வைத்த எனது வீட்டார் தற்போது என் நிலையை பார்த்து பெருமை அடைகின்றனர். நான் என்னை போன்ற பல திருநங்கைகளுக்கும் முன் உதாரணமாக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -