/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ விவசாயத்தில் பெண்களை ஊக்கப்படுத்தும் நந்தினி ஐ.ஏ.எஸ்., விவசாயத்தில் பெண்களை ஊக்கப்படுத்தும் நந்தினி ஐ.ஏ.எஸ்.,
விவசாயத்தில் பெண்களை ஊக்கப்படுத்தும் நந்தினி ஐ.ஏ.எஸ்.,
விவசாயத்தில் பெண்களை ஊக்கப்படுத்தும் நந்தினி ஐ.ஏ.எஸ்.,
விவசாயத்தில் பெண்களை ஊக்கப்படுத்தும் நந்தினி ஐ.ஏ.எஸ்.,
ADDED : செப் 15, 2025 04:21 AM

பொதுவாக அரசு அதிகாரிகள், தங்களின் கடமையை செய்வதே பெரிய விஷயம். சில அதிகாரிகள் அதற்கு விதி விலக்காக உள்ளனர். மக்களுடன் மக்களாக கலந்து பணியாற்றுகின்றனர். இத்தகைய அதிகாரிகளில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி நந்தினியும் ஒருவர்.
மாண்டியா மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரியாக பணியாற்றுபவர் நந்தினி. இவர் மற்ற அதிகாரிகளை விட, மாறுபட்ட அதிகாரியாக திகழ்கிறார். மக்களுக்கு குறிப்பாக, பெண்களுக்கு மிகவும் பிடித்தமான அதிகாரி. அதிகாரிகள் பலரும் ஏ.சி., அறையில் அமர்ந்து பணியாற்றுகின்றனர். வெளியே சென்று மக்களின் பிரச்னைகளை காண்பது இல்லை. ஆனால் நந்தினி அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றாமல், மக்களை சந்திக்கிறார்.
பெண்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகளை, கிடைக்க செய்வதில் ஆர்வம் காட்டுகிறார். பெண்களுக்கு விவசாயத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். சில நாட்களுக்கு முன், மாண்டியா பஞ்சாயத்து, விவசாயத்துறை சார்பில், இயந்திரத்தால் நெல் நாற்று நடும் பணி நடந்தது.
இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரி நந்தினியும் பங்கேற்று, வயலில் இறங்கி இயந்திரம் மூலமாக நாற்று நட்டார். பெண்களாலும் இயந்திரத்தால் நாற்று நட முடியும் என, நிரூபித்துள்ளார். இது விவசாய பெண்களின் நம்பிக்கையை அதிகரித்தது.
நாற்று நட்டதுடன், இயந்திரங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் அனுகூலங்கள் குறித்து, பெண்களுக்கு விவரித்தார். ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்ற பந்தா இல்லாமல், சாதாரண பெண் போன்று மற்றவர்களுடன் கலந்து பழகியது, பெண்களை மிகவும் கவர்ந்தது.
இது தொடர்பாக, அவர் கூறியதாவது:
சமீப நாட்களில், நெல் நாற்று நட, கூலியாட்கள் கிடைப்பது இல்லை. சரியான நேரத்தில் நாற்று நட முடியாத காரணத்தால், மகசூல் குறைகிறது. எனவே இயந்திரம் பயன்படுத்தி, நாற்று நடும் செயல் முறை நடத்தப்பட்டது. இயந்திரம் பயன்படுத்தினால், நாற்று நடும் செலவு குறையும்.இது குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
விவசாயத்துக்கு இயந்நிரங்களை பயன்படுத்துவதால், எளிதாக இருக்கும். நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். தற்போது ஆண்களால் மட்டுமே, கனமான இயந்திரங்களை பயன்படுத்தி, நாற்று நடுவது, களை எடுப்பது, அறுவடை செய்ய முடியும் என, சில பெண்கள் நினைக்கின்றனர். ஆனால் பெண்கள் என்றாலே, சக்தி என அர்த்தம். இவர்களாலும் எதையும் சாதிக்க முடியும் என்பதை, விவசாய பெண்களுக்கு உணர்த்தும் நோக்கில், நான் வயலில் இறங்கி இயந்திரத்தால் நாற்று நட்டு ஊக்கப்படுத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -